யு19 உலகக்கோப்பை; பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி: ஜெய்ஸ்வல் சதத்தால் 10 விக்கெட்டில் அபார வெற்றி

By பிடிஐ

தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு நடப்பு சாம்பியன் இந்திய அணி தகுதி பெற்றது.

இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாகத் தோற்கடித்தது இந்திய அணி.

கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே ஒருவிதமான பரபரப்பு இருக்கும். அதிலும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டம் என்பதால் கேட்கவே வேண்டாம். தொடக்கத்தில் இருந்தே பெரும் பரபரப்பு இருந்தது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 43.1 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 173 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 35.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 176 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் 113 பந்துகளில் 105 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். மற்றொரு ஆட்டக்காரர் சக்சேனா 99 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணியில் ஒருவிக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் பாகிஸ்தான் அணி வீரர்கள் திணறினார்கள். ஏறக்குறைய 6 பந்துவீச்சாளர்கள் மாறி, மாறிப் பந்துவீசியும் இந்திய அணியில் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியவில்லை.

இந்திய அணி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த முறை உலகக் கோப்பைப் போட்டியில் முதல் அணியாக பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது.

2016-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பைப் போட்டி இறுதி ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணியிடம் பட்டத்தை இழந்தது இந்திய அணி. 2018-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பிரித்விஷா அதிரடியால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இதற்கு முன் இந்திய அணி 2000, 2008, 2012, 2018-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

முன்னதாக, டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ரோஹைல் நசீர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய வேகப்பந்துவீச்சாளர் மிஸ்ரா வீசிய முதல் ஓவரிலேயே பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் முகமது ஹூராரியா 4 ரன்களில் வெளியேறினார். அடுத்துவந்த பஹத் முனிரை டக்அவுட்டில் ரவி பிஸ்னாய் அனுப்பினார். 34 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி திணறியது.

3-வது விக்கெட்டுக்கு வந்த கேப்டன் நசீர், ஹைய்தர் இருவரும் நிதானமாக ஆடி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். ஹைதர் அலி அரை சதம் அடித்து 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் பின் வரிசையில் வந்த வீரர்கள் அனைவரும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 146 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த பாகிஸ்தான் அணி அடுத்த 26 ரன்களுக்குள் மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் நசீர் 62 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ஹைதர் அலி, கேப்டன் நசீர் இருவரும் சேர்ந்து 3-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர். மற்ற வீரர்களின் கூட்டணி நிலைக்கவில்லை. பாகிஸ்தான் அணியில் கேப்டன் ஹைதர் அலி, கேப்டன் நசீர் இருவர் மட்டுமே அரை சதம் அடித்து கவுரமான ஸ்கோர் உயரக் காரணமாக அமைந்தனர். இல்லாவிட்டால் பாகிஸ்தான் அணி 100 ரன்களுக்குள் சுருண்டிருக்கும்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் தியாகி, யார்க்கர் பந்துகளையும், இன்ஸ்விங்குகளையும் மாறி மாறி திணறிடித்தார். குறிப்பாக பாகிஸ்தான் பேட்ஸ்மேன் இர்பான் கானுக்கு வீசிய யார்க்கர் அவரின் ஸ்டெம்ப்பைப் பதம் பார்த்து தனியாகத் தூக்கி எறிந்தது, அடுத்ததாகக் கடைசியில் தாஹிர் ஹூசைன் விக்கெட்டையும் தியாகி தனது யார்க்கர் பந்துவீச்சால் சாய்த்தார்.

இந்திய அணித் தரப்பில் தியாகி, ரவி பிஸ்னாய் தலா 2 விக்கெட்டுகளையும், மிஸ்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE