ஷமியின் ஆக்ரோஷ கடைசி ஓவரால் ஆட்டம்  ‘டை’ : சூப்பர் ஓவரில் ரோஹித்தின் பிரமாதமான 2 சிக்சர்களால் தொடரை வென்றது இந்தியா 

By இரா.முத்துக்குமார்

ஹாமில்டன் டி20 போட்டி த்ரில் போட்டியாக அமைந்தது, மொகமது ஷமியின் அதியற்புத, ஆக்ரோஷ கடைசி ஓவரில் வில்லியம்சன், டெய்லரை வீழ்த்த இரு அணிகள் ஸ்கோரும் 179 என்று சமன் ஆனது. பிறகு சூப்பர் ஓவருக்கு ஆட்டம் செல்ல வெற்றி பெறத் தேவையான 18 ரன்களை ரோஹித் சர்மா கடைசி 2 பந்துகளில் அடித்த அதியற்புத சிக்சர்களினால் இந்திய அணி இலக்கைக் கடந்து அபார வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்று கைப்பற்றியது.

முகமது ஷமியின் ஆக்ரோஷ கடைசி ஓவர்:

19-வது ஓவரில் பும்ரா 11 ரன்களை கொடுக்க நியூஸிலாந்து அணி 171/4 என்று வெற்றி இலக்கை நெருங்கியது, கடைசி ஓவரில் 9 ரன்கள் வெற்றிக்குத் தேவை, மொகமது ஷமியிடம் பந்து கொடுக்கப்பட்டது.

ராஸ் டெய்லர் முதல் பந்தை எதிர்கொண்டார். ஷமி ஓடி வந்து ஒரு ஃபுல்டாஸை அழகான உயரத்தில் வீச ராஸ் டெய்லர் வலது காலை விலக்கிக் கொண்டு ஒரே தூக்குத் தூக்கினார். டீப் மிட்விக்கெட்டில் சிக்ஸ்.

5 பந்துகளில் 3 எடுத்தால் வெற்றி. அடுத்த பந்து யார்க்கர் லெந்த், டெய்லர் லாங் ஆனில் தட்டி விட்டு ஒரு ரன் எடுக்க 48 பந்துகளில் 8 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என்று படு ஆக்ரோஷமாக ஆடி 95 ரன்கள் எடுத்திருந்த கேன் வில்லியம்சன் ஸ்ட்ரைக்கிற்கு வந்தார், சரி அவ்வளவுதான் பவுண்டரியோ அல்லது சிக்ஸ் நியூஸி வெற்றி என்று அனைவரும் நாற்காலி முனைக்கு நகர, முகமது ஷமி ஒரு பந்தை மால்கம் மார்ஷல் ஸ்டைலில் ஷார்ட் ஆகக் குத்தி எழுப்பி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே கொண்டு சென்றார், கல்லி பீல்டரும் நிறுத்தப்பட்டிருந்தார், வில்லியம்சன் இந்தப் பந்தை தூக்கி தேர்ட் மேனில் அடிக்க நினைத்து எட்ஜ் ஆக ராகுல் கேட்சை எடுத்தார்.

செய்ஃபர் கிரீசுக்கு வந்தார். 3 பந்துகளில் 2 ரன்கள். தேர்ட்மேன், பைன் லெக் மீண்டும் பின்னால் செல்ல, ஷமி மீண்டும் மார்ஷல் பாணியில் ஒரு ஷார்ட் பிட்ச் ஆஃப் ஸ்டம்ப் பந்தை குத்தி எழுப்ப செய்பர்ட் மட்டைக்குச் சிக்காமல் பந்து பின்னால் சென்றது டாட் பால், 2 பந்து 2 ரன்கள் தேவை. மீண்டும் ஷமி 5வது பந்தை அதே பாணியில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே குத்தி எழுப்பிக் கொண்டு செல்ல செய்பர்டுக்கு சிக்கவில்லை, ஆனால் ராகுலிடம் பந்து செல்லும் முன் இருவரும் ஒரு ரன்னை ‘பை’யாக எடுத்து முடித்தனர். கடைசி பந்து வெற்றி பெற ஒரே ரன் தேவை, ராஸ் டெய்லர் ஸ்ட்ரைக்கிற்கு வந்தார். இதுவரை ஷார்ட் பிட்ச் குத்தி வெளியே எடுத்த ஷமி யார்க்கர் லெந்தில் ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே வீச டெய்லர் அதனை லெக் திசையில் விளாச நினைத்தார் ஆனால் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆக ஆட்டம் பரபரப்பாக டை ஆனது. சிக்சருக்குப் பிறகு ஷமி ஆக்ரோஷமாக வீசி மேட்சை ‘டை’ ஆக்கினார், ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது.

சூப்பர் ஓவர்: முதலில் நியூஸிலாந்து பேட்டிங்

பும்ராவுக்கு இன்று நேரம் சரியில்லை கேன் வில்லியம்சனிடம் சிக்கிச் சின்னாப்பின்னமானார், ஆனால் அதற்காக சூப்பர் ஓவரில் வேறு பவுலருக்கா கொடுக்க முடியும், பும்ராதான் வீசினார், நியூஸிலாந்து தரப்பில் வில்லியம்சன், கப்தில் இறங்கினர். முதல் 2 பந்தில் 2 ரன்களே வந்தன, 2வது புல்டாஸை பவுண்டரி அடிக்காமல் சிங்கிள்தான் எடுத்தனர்.

அடுத்த பந்தை பும்ரா வீச கேன் வில்லியம்சன் ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்து லெந்த் பந்தை ஸ்கொயர் லெக் மேல் ஒரே தூக்கு தூக்க சிக்ஸ் ஆனது. அடுத்த பந்து லெக் திசையில் ஒதுங்கினார், பும்ரா அவரைத் தொடர்ந்தார், ஆனால் லெக் ஸ்டம்ப் பந்தை மிட் ஆஃபுக்கு மேல் தூக்கி பவுண்டரிக்கு அனுப்பினார் வில்லியம்சன். அடுத்த பந்து மட்டையில் படவில்லை ஆனால் ராகுல் த்ரோவை மதிக்காமல் ‘பை’ ஓடினர். கடைசி பந்து தாழ்வான ஃபுல்டாஸாக அமைய கப்தில் முன் காலை விலக்கிக் கொண்டு ஒரே சாத்து சாத்த பந்து லெக் திசையில் கதறி பவுண்டரிக்குச் சென்றது. நியூஸிலாந்து 17 ரன்களை எடுத்தது.

ரோஹித் சர்மாவின் அபார பினிஷிங்:

18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுல், ரோஹித் சர்மா இறங்கினர். ரோஹித் இன்று நல்ல பார்மில் இருந்தார். சவுதி பவுலிங் வீசத் தயாரானார்.

முதல் பந்து ரோஹித் சர்மா டீப் மிட்விக்கெட்டில் அடிக்க 2வது ரன்னை வெகு வேகமாக ஓடினர், ஆனால் ராகுல் கொஞ்சம் தயங்க, 2வது ரன்னுக்கு ஓடினார், அப்போது கூட கப்தில் த்ரோ சரியாகவே வந்தது விக்கெட் கீப்பர் செய்பர்ட் பந்தை சரியாகச் சேகரிக்காமல் விட ஃபிரேமிலேயே இல்லாத ரோஹித் ரன் அவுட்டிலிருந்து தப்பிப் பிழைத்தார்.

2வது பந்து யார்க்கர் லெந்த் ஒரு ரன்னை எடுத்து ரோஹித் சர்மா ஸ்ட்ரைக்கை ராகுலுக்குக் கொடுத்தார். ஃபைன் லெக் பீல்டர் முன்னால் இருக்க தாழ்வான புல்டாஸ் பந்தை ராகுல் மிகச்சாதுரியமாக ஸ்வீப் செய்து ஸ்கொயர் லெக் பவுண்டரிக்கு நான்கு ரன்களுக்கு அனுப்பினார். 4வது பந்து சிங்கிள். 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை.

ரோஹித் சர்மா ஸ்ட்ரைக்கிற்கு வந்தார். சவுதி வேகமும் இல்லாமல் ஒன்றுமில்லாமல் யார்க்கரை நூலிழையில் கோட்டை விட அழகான, அடிப்பதற்கு வாகான லெந்த் பந்தாக ரோஹித் விடுவாரா? ஒரே தூக்க லாங் ஆன் மேல் ரசிகரகள் மத்தியில் போய் விழுந்தது சிக்ஸ். கடைசி பந்து வீசும் முன் சவுதியும் வில்லியம்சனும் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டனர்.

சவுதி வீசினார் கடைசி பந்தை மீண்டும் ஃபுல் லெந்த் அடிப்பதற்கு சற்றே வாகான லெந்த், ரோஹித் சர்மா இன்சைட் அவுட் ஷாட்டில் மிகப்பிரமாதமாக லாங் ஆஃப் மேல் தூக்க பந்து ரசிகர்கள் மத்தியில் போய் விழுந்தது, இந்திய அணி அபார வெற்றி, மீண்டும் சிக்சர் மன்னன் ஹிட் மேன் சாதித்தார், தொடரை இந்தியா 3-0 என்று கைப்பற்றியது. ஆட்ட நாயகன் ரோஹித் சர்மா.

கேன் வில்லியம்சன் அதிரடி, ஜடேஜா அற்புதம், ஷமியின் கடைசி ஓவர்: டை ஆன கதை

நியூஸிலாந்து இன்னிங்ஸ் தொடங்கிய போது 180 ரன்கள் வெற்றி இலக்கில் மன்ரோ 14 ரன்களில் 2வது விக்கெட்டாக வெளியேறினாலும் மார்ட்டின் கப்தில் வெறி பார்மில் இருந்தார். 21 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சர்களை விளாசி 31 ரன்களில் ஷர்துல் தாக்கூர் பந்தில் ஆட்டமிழந்தார்.

கேன் வில்லியம்சன் ஒரு முனையில் நிற்க இன்னொரு முனையில் சாண்ட்னரை இறக்கினார், அவர் 9 ரன்களில் தாழ்வான சாஹல் பந்தில் பிளிக் ஷாட்டை கோட்டை விட்டு பவுல்டு ஆகி வெளியேறிய போது நியூஸிலாந்து 10.4 ஓவர்களில் 88/3 என்று சற்றே திணறியது என்றுதான் கூற வேண்டும், ஏனெனில் ஜடேஜாவை அடிக்க முடியவில்லை.

கேன் வில்லியம்சன் அதன் பிறகு பும்ராவை சாத்தி எடுத்தார். 48 பந்துகளில் 8 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 95 ரன்கள் எடுத்ததில் பும்ராவை மட்டும் சொற்ப பந்துகளில் 25 ரன்கள் விளாசினார். இது பும்ராவுக்கு அக்னிப் பரீட்சையாகும். ஆனால் இன்று பும்ரா சரியாக வீசவில்லை. 4 ஓவர் 45 ரன்களை விட்டுக் கொடுத்தார். சாஹல் 2 ஓவர்களில் 18 ரன்களை கொடுத்தாலும் சாண்ட்னர் விக்கெட்டைச் சாய்த்தார், டி20யாக இருந்தாலும் விக்கெட்டுகள்தான் எதிரணிக்கு சவாலாக அமையும்.

ஜடேஜா மிக அருமையாக வீசினார் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை 3 ஓவர் 9 ரன்கள் மன்ரோ விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார், மன்ரோவுக்கு தொடர் டாட் பால்களை வீசி நெருக்கடி கொடுக்க அவர் பதற்றமாகி ஸ்டம்ப்டு அவுட் ஆனார்.

வில்லியம்சன், கிராண்ட் ஹோம் இணைந்தனர், வில்லியம்சன், சாஹலை ஒரு பெரிய சிக்ஸ் அடித்தார். 100/3 என்ற நிலையில் 42 பந்துகளில் வெற்றிக்கு 80 ரன்கள் தேவை என்ற சமன்பாட்டு நிலையில் ஷமி வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை அப்பர் கட் சிக்ஸ், பிறகு லாங் லெக்கில் பவுண்டரி அடித்து அரைசதம் பூர்த்தி செய்தார் வில்லியம்சன். 28 பந்துகளில் அரைசதம் கண்ட வில்லியம்சன். அதற்கு அடுத்து பேயாட்டம் ஆடினார், அடுத்த 20 பந்துகளில் 45 ரன்கள். அதில் ஜடேஜாவின் கடைசி ஓவரில் 2 சிக்சர்கள், அதில் ஒரு சிக்ஸ் நேராக தூக்கிய அரை ஸ்வீப் ஷாட்டாகும் இது. அடுத்த ஜடேஜா ஷார்ட் பிட்ச் பந்து மீண்டும் லெக் திசையில் சிக்ஸ் ஆக ஜடேஜா 4 ஓவர் 23 ஒருவிக்கெட் என்று மிகச் சிக்கனம் காட்டிய ஸ்பெல் முடிந்தது.

பிறகு அடுத்த ஓவரில் தாக்கூரின் பந்தை இன்சைடு அவுட் ஷாட்டில் சிக்ஸருக்குத் தூக்கினார் வில்லியம்சன், ஆனால் இதே ஓவரில் கிராண்ட் ஹோம் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முதல் 2 ஓவர்களில் அடி வாங்கிய பும்ரா மீண்டும் தன் 3வது ஒவரை வீச வர வில்லிமசன் தொடர்ச்சியாக 3 அற்புத பவுண்டரிகளை அடித்தது கண்கொள்ளாக் காட்சியாகும். 151/4, 18 பந்துகளில் 29 ரன்கள் தேவை. சாஹல் தன் கடைசி ஓவரில் பவுண்டரியே கொடுக்காமல் 9 ரன்கள் கொடுத்தார், இந்தச் சூழலில் இது டைட்டான பவுலிங்கே. 19வது ஓவரில் பும்ரா வர மீண்டும் டெய்லர் ஒரு பவுண்டரி வில்லியம்சன் ஒரு பவுண்டரி விளாச அந்த ஓவரில் 11 ரன்கள் வர கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில்தான் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆட்டமிழக்க, செய்ஃபர்ட் டாட்பால்களை விட ஸ்கோர் 179/6 என்று இரு அணிகளும் சமநிலை எய்தின. அதன் பிறகுதான் சூப்பர் ஓவரில் நியூஸிலாந்து 17 எடுக்க இந்திய அணி ரோஹித் சர்மாவின் 2 சிக்சர்களில் அபார வெற்றி பெற்று தொடரை வென்றது.

முன்னதாக...

ரோஹித் சர்மா ஒரு ஓவரில் எடுத்த விஸ்வரூபத்தினால் அரைசதம் ; ஸ்லோ பிட்சில் இந்திய அணி 179 ரன்கள்

முதல் 2 போட்டிகளில் சொதப்பிய ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் நிச்சயம் விளாசப்போகிறார் என்ற எதிர்பார்ப்புக்கு இணங்க அவர் விளாசினார். சவுத்தி பந்தில் முதல் ஓவரில் பாயிண்ட் பவுண்டரியைத் தெறிக்கவிட்டார் ரோஹித், அடுத்த ஹாமிஷ் பென்னட் ஓவரில் ராகுல், அப்பர் கட் செய்ய தேர்ட் மேன் பீல்டர் இருந்தும் கையில் சிக்காமல் சிக்ஸ் ஆனது, தைரியமான ஷாட்.

குக்கலீன் பந்து ஒன்றில் ரோஹித் ஏமாந்தார் பந்து ஸ்லிப் இருந்திருந்தால் கேட்ச் ஆகியிருக்கும் போல் சென்றது. ஆனால் இது அதிர்ஷ்ட பவுண்டரி ஆனது. 5வது ஓவரில் சாண்ட்னர் வந்தவுடன் மீண்டும் ஒரு பவுண்டரி விளாசினார் ரோஹித் சர்மா. 5 ஓவர் முடிவில் 42/0 என்று இருந்தது இந்திய அணி.

இந்நிலையில் மீண்டும் ஹாமிஷ் பென்னட் வீச வர, பவர் ப்ளேயின் கடைசி ஓவரில் ரோஹித் சர்மா விஸ்வரூபம் எடுத்தார். முதல் பந்து விரலிலிருந்து வீசப்பட்ட வேகம் குறைந்த பந்து ஸ்கொயர் லெக்கில் சிக்ஸ். 3வது பந்து மீண்டும் ஒரு சொத்தைப் பந்தாக நேராகத் தூக்கினார் சிக்ஸ். அடுத்த பந்தை கட் செய்து நான்கு ரன்களுக்கு அனுப்பினார், இது ஷார்ட் மற்றும் வைடு. அடுத்த பந்து வைடு யார்க்கர் பாயிண்டில் பவுண்டரி, அடுத்த பந்து அடி அடி என்ற ஓவர் பிட்ச் பந்து ஒரே தூக்கு தூக்கினார் நேராக சிக்ஸ், ரோஹித் சர்மா அரைசதம், இந்த ஓவரி 27 ரன்களை 3 சிக்ஸ் 2 பவுண்டரி என்று வெளுத்து வாங்கி ரோஹித் சர்மா 23 பந்துகளில் அரைசதம் கண்டார். இந்த ஓவரின் தொடக்கத்தில் ரோஹித் சர்மா 24 ரன்களில் இருந்தார், ஒரே ஓவர் அரைசதத்தை 23 பந்துகளில் சாதித்தார்.

6 ஓவர்களில் 69 என்று அதிரடி தொடக்கம் கண்ட இந்திய அணிக்கு ஸ்பின் செக் வந்தது, ஆனால் இஷ் சோதியின் முதல் ஓவரில் 8 ரன்கள் கிடைக்க 7 ஓவர்கள் 77 ரன்க்ள் என்று இந்திய அணி பெரிய தொடக்கத்தைக் கண்டது. 8வது ஓவரில் ரன் முடங்க, 9வது ஓவரில் ராகுல் 27 ரன்களில் கொலின் டி கிராண்ட் ஹோம் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். 27 ரன்களுக்கு ராகுல் 19 பந்துகளையே எடுத்துக் கொண்டார்.

கோலி இறங்குவதற்குப்பதிலாக தேவையில்லாமல் ஷிவம் துபேயை இறக்க ஷிவம் துபேயை முடக்கியது நியூஸிலாந்து, முதல் 4 பந்துகளில் அவர் தன் எண்ணிக்கையைத் தொடங்கவில்லை. 10 ஓவர்கள் முடிவில் 92/1 என்று இருந்தது, அதாவது 7-77லிருந்து 10-92 என்று முடக்கப்பட்டது, ஸ்பின்னர்கள் அருமையாக வீசினர்.

பிரஷர் ஆன ரோஹித் சர்மா 11ஆவது ஓவரில் ஹாமிஷ் பென்னட்டின் ஸ்லோ பந்தை நேராக லாங் ஆனில் கேட்ச் கொடுத்து 65 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 23 பந்துகளில் அரைசதம் கண்ட ரோஹித் சர்மா 40 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என்று 65 ரன்களில் காலியானார். கடைசி 17 பந்துகளில் 15 ரன்கள்தான். அந்த அளவுக்கு பவுலிங் டைட். இதே ஓவரில் ஷிவன் துபே 3 ரன்களில் காலை நகர்த்தாமல் சொதப்பி ஆடி கேட்ச் ஆகி வெளியேறினார்.

திடீரென கிரீசில் 2 புது வீரர்கள், கோலி மற்றும் அய்யர். கோலி, அய்யர் ஆகியோரும் கட்டுப்படுத்தப்பட்டனர், ஆனால் 15வது ஓவரில் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தார் கோலி. இடது கை ஸ்பின்னர் சாண்ட்னரை ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸ் அடித்தார். 17வது ஓவரில் அய்யர் 17 ரன்களில் சாண்ட்னர் பந்து ஒன்று ஆக மந்தமாக வர இன்சைட் அவுட் ஷாட் சரியாகச் சிக்காமல் காலியானார். இதே ஓவரில்தான் முதல் பந்தை நேராக சிக்ஸுக்கு அனுப்பியிருந்தார்.

விராட் கோலியும் கட்டுப்படுத்தப்பட அவரும் 27 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் ஹாமிஷ் பென்னட்டின் 3வது விக்கெட்டாக வெளியேறினார். ஸ்லோ பந்து பிட்சில் நின்று வந்தது, இதற்கு முதல் 2 பவுண்டரி பந்துகளை கோலி பவுண்டடி அடிக்காமல் விரயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

20வது ஓவரில் பாண்டே ஒரு சிக்ஸ், ஜடேஜா ஒரு சிக்ஸ் அடித்து 18 ரன்கள் அந்த ஓவரில் வரவில்லையெனில் இந்திய அணி 179 ரன்களை எட்டியிருக்க முடியாது, இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. தேவையில்லாமல் கோலி தன் டவுன் ஆர்டரையும் மாற்றி அய்யரையும் மாற்றியதால் குழப்பம் நேரிட்டது ஒழுங்காக அய்யரை இறக்கியிருந்தால் ஸ்பின்னைப் பதம் பார்த்திருப்பார்.

நியூஸிலாந்து அணி தற்போது கப்தில் (31) விக்கெட்டை இழந்து 6.2 ஓவர்களில் 52/1 என்று ஆடி வருகிறது. மன்ரோ, வில்லியம்சன் ஆடி வருகின்றனர். பிட்ச் மெதுவான பிட்ச், ஸ்லோ பந்துகள் கைகொடுக்கின்றன. நியூஸிலாந்து தரப்பில் ஹாமிஷ் பென்னட் 54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், இவர் அனாலிசிஸ் காலியானது ரோஹித் சர்மாவினால். சோதி, சாண்ட்னர், டைட்டாக வீசினர்.

5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-0 என்று கைப்பற்றியது. ரோஹித் சர்மா ஆட்ட நாயகன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்