கே.எல்.ராகுலின் அமர்க்களமான அரைசதம், ஸ்ரேயாஸ் அய்யரின் திருப்புமுனை ஆட்டம், பந்துவீச்சாளர்களின் டெத் பவுலிங் ஆகியவற்றால் ஆக்லாந்தில் இன்று நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாத்தில் வென்றது.
முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்தது. 133 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. அடுத்து வரும் போட்டிகளில் நியூஸிலாந்து கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது. ஒரு போட்டியில் தோற்றாலும் நியூஸிலாந்து தொடரை இழந்துவிடும். நியூஸிலாந்தில் இதுவரை இந்திய அணி டி20 தொடரை வென்றதில்லை என்பதால், ஒரு போட்டியில் வென்றாலே இந்திய அணி சாதனை படைக்கும்.
வெற்றிக்கு முக்கியக் காரணமாகவும், தொடர்ந்து 2-வது அரைசதத்தை அடித்த கே.எல். ராகுல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் ராகுல் அடித்த அரைசதம் டி20போட்டியில் அவரின் 11-வது அரைசதமாகும்.
இந்திய அணியைப் பொறுத்தவரை கே.எல்.ராகுலின் ஆட்டம், பேட்டிங் ஃபார்ம் மிகச்சிறப்பாக இருந்து வருகிறது. ரோஹித் சர்மா, கோலி ஆட்டமிழந்த நிலையில் மிகவும் நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று 50 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் சேர்த்தார். இதில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடங்கும்.
கடந்த போட்டியில் வெற்றியை எளிதாக்கிய ஸ்ரேயாஸ் அய்யர் இந்த முறை களத்தில் நிற்பார் என எதிர்பார்க்க 44 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆட்டம் கடும் நெருக்கடியில் சென்றபோது 15-, 16-வது ஓவரில் ராகுலும், ஸ்ரேயாஸ் அய்யரும் அடித்த பவுண்டரியும், சிக்ஸரும் ஆட்டத்தின் போக்கை மாற்றியது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா, இந்த முறையும் ஏமாற்றியுள்ளார், கேப்டன் கோலி ஆட்டமிழந்ததும் துரதிர்ஷ்டம்.
இந்திய அணி போன்ற அசுரத்தனமான ஃபார்மில் இருக்கும் அணியை டி20 போட்டியில் வெல்ல இதுபோன்ற சொத்தையான 132 ரன்கள் சாதாரணமானது. இதுபோன்ற ஸ்கோர்களை வைத்துக்கொண்டு நியூஸிலாந்து வீரர்கள் வெற்றியைத் தக்கவைப்பது நினைத்துக் கூட பார்க்க முடியாதது. இன்னும் கூடுதலாக 30 ரன்கள் சேர்த்திருந்தால் ஓரளவுக்கு நியூஸிலாந்துக்கு வாய்ப்பு இருந்திருக்கும்.
இந்திய வீரர்களின் பந்துவீச்சுக்கு நியூஸிலாந்து அணி எவ்வாறு திணறியதோ அதேபோன்று நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சுக்கும் இந்திய வீரர்கள் ரன்சேர்க்கத் திணறுவார்கள். என்று கூறப்பட்டது. ஆனால் 15-வது ஓவர் அனைத்தையும் மாற்றிவிட்டது.
கடந்த போட்டியில் ஆடுகளத்தின் லைன்-லென்த் குறித்து அறியாமல் திணறிய இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த ஆட்டத்தில் மிகச்சரியாக நியூஸிலாந்து அணிக்கு எதிராகப் பந்துவீசினார்கள்.
அதிலும், ஷமி, பும்ரா ஆகியோரின் பந்துகள் நியூஸாந்து வீரர்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தது. தன்னுடைய அனுபவமான சுழற்பந்துவீச்சாளர் ஜடேஜா நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களை திணறவிட்டது மட்டுமல்லாமல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
நியூஸிலாந்து அணியினர் பந்தவீச்சிலும், பேட்டிங்கிலும் ஒட்டுமொத்தமாகச் சொதப்பினர். தொடக்கத்தில் கப்தில் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டனர். நடுவரிசையில் வந்து கடந்த போட்டியில் களத்தில் விளாசலில் ஈடுபட்ட வில்லியம்ஸன், டெய்லர் இந்த முறை ஏமாற்றினர். இன்னும் கூடுதலாக 30 ரன்களாவது அடித்திருக்க வேண்டும்.
இந்திய அணிக்கு நெருக்கடி தரும் விதத்தில் பந்துவீச்சு இருந்தாலும், டிக்னர் வீசிய15-வது ஓவர் ஆட்டத்தையே திருப்பிப்போட்டது. ஸ்ரேயாஸ் அய்யர், ராகுல் அடித்த அடியில் ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பிவிட்டது. அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லாதது, பீல்டிங், ரன்அவுட்டை கோட்டை விட்டது போன்றவை தோல்விக்கான காரணமாகும்.
133 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோஹித் சர்மா, ராகுல் களமிறங்கினர். சவுதி வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரிகளை அடித்த ரோஹித் சர்மா 8 ரன்னில் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்துவந்த கேப்டன் கோலி, ராகுலுடன் சேர்ந்தார். டிக்னர் வீசிய 5-வது ஓவரி்ல கோலி ஒரு பவுண்டரியும், ராகுல் ஒரு சிக்ஸரும் விளாசி ஸ்கோரை உயர்த்தினர்.
சவுதி வீசிய 6-வது ஓவரில் கோலி 11 ரன்னில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 39 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. பவரப்ளே ஓவரில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 40 ரன்கள் சேர்திருந்தது.
3-வது விக்கெட்டுக்கு ராகுலுடன், ஸ்ரேயாஸ் அய்யர் சேர்ந்தார். இருவரும் சேர்ந்து நியூஸிலாந்து வீரர்கள் வீசிய மோசமான பந்துகளை மட்டும் தேர்வு செய்து அடித்து ரன்களைச் சேர்த்தனர். 6-வது ஓவரில் இருந்து 14-வது ஓவர்கள் வரை ராகுலும், ஸ்ரேயாஸ் அய்யரும் ஒருபவுண்டரி, சிக்ஸர் மட்டுமே சேர்த்திருந்தார்கள். நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர்.
வெற்றிக்கு 6 ஓவர்களில் 46 ரன்கள் தேவைப்பட்டது.
பென்னட் வீசிய 15-வது ஓவரில் ராகுல் அடித்த சிக்ஸர்,பவுண்டரி, அடுத்து டிக்னர் வீசிய ஓவரில் ஸ்ரேயாஸ் அய்யர் விளாசிய சிக்ஸர், பவுண்டரியும் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. ராகுல் 43 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
சோதி வீசிய 17-வது ஓவரில் ஸ்ரேயாஸ் ஒரு சிக்ஸர் விளாச, அதே ஓவரில் சவுதியிடம் கேட்ச் கொடுத்து அவர் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் 3சிக்ஸர், ஒரு பவுண்டரி உள்பட 44 ரன்களில் வெளயேறினார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்தனர்.
18 பந்துகளில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்து வந்த ஷிவம் துபே, ராகுலுடன் சேர்ந்தார். சவுதி வீசிய 18-வது ஓவரில் துபே வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் விளாச இந்திய அணியின் வெற்றி உறுதியானது.
17.3 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. ராகுல் 57 ரன்களுடனும், துபே 8 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நியூஸிலாந்து தரப்பில் சவுதி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முன்னதாக டாஸ்வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்தது. நியூஸிலாந்து அணியில் கப்தில், முன்ரோ ஆட்டத்தைத்த தொடங்கினர். ஷர்துல் தாக்கூர் வீசிய முதல் ஓவரிலேயே கப்தில் இரு சிக்ஸர்கள் விளாசி அருமையான தொடக்கத்தை அளித்தார். முன்ரோ நிதானமாக பேட் செய்ய, கப்தில் அதிரடியாக பவுண்டரி,சிக்ஸர்கள் விளாசினார்.
தாக்கூர் வீசிய 6-வது ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்த நிலையில் கடைசிப்பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து 33 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும். முதல்விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தனர். பவர்ப்ளே முடிவில் நியூஸிலாந்து அணி 48 ரன்கள் சேர்த்தது.
அடுத்து வந்த வில்லியம்ஸன், முன்ரோவுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாகவே விளையாடினர். துபே வீசிய 9-வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த முன்ரோ 26 ரன்கள் சேர்த்த நிலையில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த கோலின் டி கிராண்ட்ஹோம் கடந்த போட்டியைப் போலவே இந்தமுறையும் விரைவாக ஆட்டமிழந்தார். ஜடேஜா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து 3 ரன்னில் கிராண்ட்ஹோம் பெவிலியன் சென்றார்.
81 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது நியூஸிலாந்து அணி11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
வில்லியம்ஸன், டெய்லர் 5-வது விக்கெட்டுக்கு சேர்ந்து கடந்த போட்டி போன்று கலக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜடேஜா வீசிய 13-வது ஓவரில் டீப் ஸ்குயர் லெக் திசையில் சாஹலிடம் கேட்ச் கொடுத்து வில்லியம்ஸன் 14 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஷீபெர்ட், டெய்லருடன் சேர்ந்தார்.
நியூஸிலாந்து அணியைக் கட்டுக்குள் கொண்டுவந்த பின், இந்திய வீரர்கள் நெருக்கடி தரும் விதத்தில் பந்துவீசினர். இந்திய வீரர்களின் பந்தவீச்சில் ரன் எடுக்க டெய்லரும், ஷபர்ட்டும் கடும் சிரமப்பட்டனர்.சாஹல் வீசிய 16-வது ஓவரில் ஷீபெர்ட் சிக்ஸர், பவுண்டரி விளாசி ஸ்கோரை உயர்த்தினார். கடந்த முறை அதிரடி காட்டிய டெய்லர் இந்தமுறை ரன் சேர்க்கத் திணறினார்.
பும்ரா வீசிய 20வது ஓவரில் டீப் ஸ்குயர் லெக் திசையில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து டெய்லர் 18 ரன்னில் வெளியேறினார். ஷீபெர்ட் 33 ரன்களிலும், சான்ட்னர் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்
20 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago