மறக்க முடியுமா? பாக். கிற்கு எதிராக உலக சாதனை சேஸிங்; கடைசி பந்து சிக்ஸ் அடித்த மியாண்டடுக்கு பதிலடி கொடுத்த இந்திய வெற்றி

By இரா.முத்துக்குமார்

1998-ல் வங்கதேசத்தில் அந்நாடு சுதந்திரமடைந்து 25 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக சில்வர் ஜூப்ளி இன்டிபெண்டன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடைபெற்றது. அந்தத் தொடரின் கடைசி (மொத்தம் 3 இறுதிப் போட்டிகள்) இறுதிப் போட்டி ஜனவரி 18ம் தேதி 1998-ல் நடந்தது

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தக் கோப்பைக்காக மோதின. அனைத்துப் போட்டிகளும் டாக்கா பங்கபந்து தேசிய விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இந்திய அணியின் கேப்டன் முகமது அசாருதீன், பாகிஸ்தான் கேப்டன் விக்கெட் கீப்பர் ரஷீத் லட்டீப்.

3 அணிகளும் ஒன்றையொன்று எதிர்த்து ரவுண்ட் ராபின் முறையில் மோதும் அதாவது ஒவ்வொரு அணியும் இரு போட்டிகளில் ஆடி டாப் 2 அணிகள் இறுதிப் போட்டியில் 3 முறை மோத வேண்டும், அதாவது 3 இறுதிப் போட்டிகள் என்று ஆஸ்திரேலிய பாணியில் நடத்தப்பட்டது. இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிகளில் மோதின.

முதல் இறுதிப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 3/45 என்று அசத்த பாகிஸ்தான் 46 ஓவர்களில் 212/8 என்று முடிந்தது, இந்தியா 37.1 ஓவர்களில் 213/2 என்று வென்றது, சச்சின் டெண்டுல்கர் 78 பந்துகளில் 95 ரன்களை புரட்டி எடுத்தார். சச்சின் டெண்டுல்கர் 24 வயது 265 நாட்களில் ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்கள் குவித்த இளம் வீரர் என்ற சாதனைக்குரியவரானார்.

2வது இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்த இறுதிப் போட்டி 1-1 என்ற சமநிலையில் ஜனவரி 18ம் தேதியான இன்றைய தினத்தில் 1998ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கான அத்தனை பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் இந்திய-பாக். ரசிகர்கள் தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்தனர்.

வங்கதேசத்தில் அப்போதெல்லாம் சீக்கிரம் இருட்டி விடும் காலையில் வெளிச்சமும் தாமதமாகவே வரும் இதனால் ஆட்டம் அணிக்கு 48 ஒவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

அபாய பாக். ஜோடிகளான சயீத் அன்வர், ஷாகித் அப்ரீடி இறங்கினர், அப்ரீடி தன் பங்குக்கு 1 சிக்ஸ், ஒரு பவுண்டரி என்று 20 ரன்களை எடுத்து இந்திய ரசிகர்கள் மனதில் திகிலை ஏற்படுத்திக்கொண்டிருந்தார். அப்போதுதான் வேகப்பந்து வீச்சாளர் ஹர்விந்தர் சிங், அப்ரீடியை வீழ்த்தினார். ஹர்விந்தர் சிங் அவுட்ஸ்விங்கர் நன்றாக வீசக்கூடியவர் இதனால் ஆமிர் சொஹைலையும் அவர் விரைவில் வெளியேற்ற 12 ஓவர்களில் 66/2, இன்னொரு முனையில் ஜவகல் ஸ்ரீநாத் வீசினார்.

ஆனால் அதன் பிறகு விக்கெட்டுகள் என்றால் என்ன விலை என்று ஆகி விட்டது. சயீத் அன்வரும் இஜாஜ் அகமடும் இந்தியப் பந்து வீச்சை சிதறடித்தனர் 33 ஓவர்களில் 230 ரன்கள் கூட்டணி அமைத்தனர். இந்தியாவை எப்போதுமே புரட்டி எடுக்கும் சயீத் அன்வர் 132 பந்துகளில் 14 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 140 ரன்கள் எடுத்தார்.

மீண்டும் பந்து வீச வந்த ஹர்வீந்தர் சிங் தான் இவரையும் வீழ்த்தினார். வித்தியாசமான ஸ்டான்ஸில் ஆடும் இஜாஜ் அகமெட் 112 பந்துகளில் 117 ரன்கள், 8 பவுண்டரி 1 சிக்ஸ். பாகிஸ்தான் அணி 48 ஓவர்களில் 314/5. கங்குலி 2 ஓவர்களில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தாலும் தொடர்ந்து ஏன் வீசவில்லை என்பது புரியாத புதிர், ஹர்விந்தர் சிங் விக்கெட் எடுத்தாலும் 78 ரன்கள் கொடுத்தார், ஜவகல் ஸ்ரீநாத் 61 ரன்கள் கொடுத்தார். சச்சின் 7 ஒவர்களில் 49 ரன்கள் ஒரு விக்கெட்.

சச்சின் டெண்டுல்கரின் காட்டடி தொடக்கமும், கங்குலி சதமும் இருட்டில் அபாரமான பினிஷிங்கும்:

315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றால் இதுதான் அப்போது உலக சாதனை விரட்டல், ஆகவே இந்திய அணி எப்படி இதை விரட்டப்போகிறது என்றபடி ரசிகர்கள் தொலைக்காட்சிப் பெட்டி முன், அதுவும் சச்சின் இறங்குகிறார் என்றால் அப்போதெல்லாம் கடும் டென்ஷன் தான். அதுவும் அகீப் ஜாவேத், அசார் மஹ்மூத், அப்ரீடி, அனைத்திற்கும் மேலாக பன்முக வித்தகச் சுழற் பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் இருக்கும் போது படு டென்ஷந்தான், மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான மேட்ச் வேறு ஜெயித்தேயாக வேண்டிய நெருக்கடி இந்திய வீரர்களுக்கு எப்போதுமே இருந்தது.

ஆனால் பாகிஸ்தானுக்கு என்ன பயம் என்றால் அப்பொதெல்லாம் சச்சின் டெண்டுல்கருக்கு வீசுவது எளிதானது கிடையாது, சேவாகை விடவும் முரட்டுத்தனமாக அடிப்பார், அப்படித்தான் அகிப் ஜாவேதையும் அசார் மஹ்மூதையும் அவர் பிரமாதமான ஹைபிளிக் புல் ஷாட், கட் ஷாட் என்று பின்னி எடுத்து 26 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்ஸ் என்று 41 ரன்கள் எடுத்து அப்ரீடி பந்தில் அவுட் ஆனார், அகிப் ஜாவேதும், அசார் மஹ்மூதும் ரவுண்ட் த விக்கெட்டில் வீசி சச்சினிடம் சரியாக வாங்கினர். சச்சின் ஆட்டமிழக்கும் போது இந்திய அணி 8.2 ஓவர்களில் 71 ரன்களைச் சேர்த்து அதிரடி தொடக்கம் கண்டது, கிட்டத்தட்ட 9 ரன்கள் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

ஆனால் இங்குதான் அசாருதீனின் சமயோசித, கற்பனை வளம் மிகுந்த கேப்டன்சி வேலை செய்தது, அசாருதீன், சித்து, அஜய் ஜடேஜா போன்ற ஜாம்பவான்கள் இருந்தும் தமிழக இடது கை ஆல்ரவுண்டர் ராபின் சிங்கை டெண்டுல்கர் ஆட்டமிழந்தவுடன் 3ம் நிலையில் இறக்கினார். இது ‘செம்ம’ மூவாக அமைய கங்குலியும் ராபின் சிங்கும் சிறுகச்சிறுக பாகிஸ்தானிடமிருந்து ஆட்டத்தைப் பிடுங்கிச் சென்றனர். பொதுவாக இடது கை வீரர் இருக்கும் போது இடது -வலது சேர்க்கையைத்தான் எந்த கேப்டனும் முயற்சிப்பார்கள், ஆனால் கங்குலி இடது கை ராபின் சிங்கையே இறக்கினார். சக்லைன் முஷ்டாக்கை அபாரமாக ஆடிய ராபின் சிங் அடித்த சிக்ஸ் ஒன்று ஸ்டன்னிங் சிக்ஸ் ஆகும், வெறும் பாட்டம் ஹேண்ட் லாங் ஆன் மேல் பறந்தது அந்த சிக்ஸ். இருவரும் சேர்ந்து 179 ரன்களை 30 ஓவர்களில் சேர்க்க ராபின் சிங் 4 பவுண்டரிகல் 2 சிக்சர்கள் ஏகப்பட்ட சிங்கிள்கள், இரண்டுகளுடன் 83 பந்துகலில் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் இந்திய அணிக்குத் தேவை 66 ரன்கள். இப்போது ‘ப்பூ’இவ்வளவுதானா என்பார்கள், ஆனால் அப்போது கடினம், பீல்டிங் நிலைக் கட்டுப்பாடுகளெல்லாம் கிடையாது.

அசாருதீன் 4 ரன்களில் வெளியேற, சவுரவ் கங்குலி தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு சதத்தில் 138 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 124 ரன்கள் எடுத்து வெளியேறும் போது இந்திய அணி 42.4 ஒவர்களில் 274 ரன்கள். வெற்றிக்கு இன்னும் தேவை 41 ரன்கள், இருக்கும் பந்துகள் 32. சிது, ஜடேஜா, மோங்கியா என்று அனைவரும் ஆட்டமிழக்க 47 ஓவர்கள் முடிவில் இந்திய அனி 306/7.

கிரீசில் ரிஷிகேஷ் கனிட்கரும் ஜவகல் ஸ்ரீநாத்தும் இருக்கின்றனர், கடைசி ஓவர், 48வது ஓவரை விச வருகிறார் சக்லைன் முஷ்டாக், வெற்றிக்குத் தேவை 9 ரன்கள். கனிட்கர் இடது கை வீரர். முதல் பந்து சற்றே லெக் திசையில் வர கனிட்கர் 1 ரன் எடுத்து ஸ்ரீநாத்திடம் ஸ்ட்ரைக்கைக் கொடுக்க திக் திக் கணங்கள். எதிரணி கேப்டன் ரஷீத் லடீப் செய்த பீல்டிங் மாற்றத்தை பெவிலியனிலிருந்து கங்குலி ஆர்வமுடன் எட்டி எட்டிப்பார்க்கிறார். அரங்கமே சீட்டு நுனியில் இருக்கிறது, தொலைக்காட்சி முன் இந்திய பாகிஸ்தான் ரசிகர்கள் விரல் நகங்களை இழந்து கொண்டிருந்தனர்.

ஆனால் ஸ்ரீநாத், சக்லைன் பந்தை தைரியமாக ஆஃப் திசையில் தூக்கி விட்டு 2 ரன்களை ஓடினார். 4 பந்துகளில் 6 ரன்கள் தேவை. அப்போதுதான் ஸ்ரீநாத் ஒரு பெரிய தவறு செய்தார், சக்லைனின் பந்தை ஒரே தூக்கு தூக்க அது கொடியேற்றியது போல் அருகிலேயே வானில் உயர்ந்தது, ஆனால் 3 பேர் அதை கேட்ச் எடுக்க ஓடிவர நடுவில் பந்து பொத் என்று விழுந்தது. எளிதான கேட்ச் ட்ராப். இதற்குள் 2 ரன்களை வேறு ஓடிவிட்டார் ஸ்ரீநாத். 3 பந்துகள் 4 ரன்கள் தேவை. அடுத்த பந்தை ஸ்ரீநாத் அருகே பாயிண்டில் தட்டி விட கனிட்கரும் இவரும் ஒரு ரன்னை வேகமாக எடுக்க கனிட்கர் ஸ்ட்ரைக்குக்கு வந்தா 2 பந்துகள் 3 ரன்கள் வெற்றிக்குத் தேவை. நீண்ட விவாதம் களத்தில், ஒரு புறம் லத்தீப், சக்லைன் இன்னொரு புறம் கனிட்கர், ஸ்ரீநாத். அங்கு வெளிச்சம் குறைந்து வந்தது, கால்பந்தாட்டத்துக்கு போடப்படும் விளக்கொளியில் மேட்ச் நடந்து கொண்டிருந்தது.

கடைசி பந்துக்கு முதல் பந்து சக்லைன் வீச இடது கை வீரரான கனிட்கர் அதனை மிகப்பிரமாதமாக மிட் ஆனுக்கும் மிட்விக்கெட்டுக்கும் இடையே தூக்கி அடிக்க பந்து பவுண்டரிக்குப் பறக்க இந்தியா உலக சாதனை சேசிங்கை செய்து சாதனை படைத்தது. இதற்கு முன்பாக 1992 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வேயை எதிர்த்து இலங்கை அணி 313 ரன்களை சேஸ் செய்ததுதான் அதிகபட்ச சேசிங் ஆகும். கங்குலி தலைமையில் இந்திய அணி இதனை முறியடித்ததோடு, சேத்தன் சர்மா ஓவரில் கடைசி பந்தில் ஷார்ஜாவில் சிக்ஸ் அடித்து வென்ற ஜாவேத் மியாண்டடின் பாக். வெற்றிக்கு சில ஆண்டுகள் கழித்து இந்திய அணி பழித் தீர்த்தது. ரிஷிகேஷ் கனிட்கர் ஹீரோவானார். அந்தத் தொடரின் நாயகன் சச்சின் டெண்டுல்கர், ஆட்ட நாயகன் சவுரவ் கங்குலி. மறக்க முடியாத ஒரு இந்திய-பாக். த்ரில் போட்டி, இதற்குப் பிறகு இத்தகைய திரில் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் ஆடியதா என்பது சந்தேகமே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்