கே.எல்.ராகுலின் காட்டடி பேட்டிங், ஷிகர் தவண், கோலியின் அரை சதம் ஆகியவற்றால் ராஜ்கோட் நகரில் நடந்துவரும் 2-வது ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 341 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் சேர்த்தது.
முன்னணிப் பந்துவீச்சாளர்களான பாட் கம்மினஸ், மிட்ஷெல் ஸ்டார்க், ரிச்சார்ட்ஸன், ஸம்பா, ஆஸ்டன் அகர் ஆகியோர் பந்துவீச்சை இந்திய வீரர்கள் வெளுத்து வாங்கினர். அதிலும் ஸ்டார்க் 78 ரன்களும், ரிச்சார்ட்ஸன் 73 ரன்களும் வாரி வழங்கினர்.
இந்திய அணித் தரப்பில் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பு செய்த ஷிகர் தவண் (96), கோலி (78), கே.எல்.ராகுல் (80) ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்குக் காரணமாக இருந்தனர். ஷிகர் தவண் தொடர்ந்து 2-வது அரை சதத்தை இந்தப் போட்டியில் பதிவு செய்து 4 ரன்களில் சதத்தை தவறவிட்டார்.
கடந்த 2019-ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக தொடர்ந்து 2 அரை சதங்களை தவண் அடித்தார். அதன்பின் இப்போது தொடர்ந்து இரு அரை சதங்களை அடித்துள்ளார்.
கடந்த போட்டியில் 4-வது வீரராக கோலி களமிறங்கியதால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார். கோலியின் ஒரு நாள் சதத்தில் பெரும்பாலானவை 3-வது வீரராகக் களமிறங்கி அடித்த நிலையில், தனது இடத்தை மாற்றக்கூடாது என்று விமர்சிக்கப்பட்டது. அதை ஏற்று வழக்கம்போல் 3-வது வீரராகக் களமிறங்கிய கோலி 78 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை 5-வது முறையாக ஆஸ்திரேலியா சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸம்பா வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் விராட் கோலி தொடர்ந்து ஸம்பாவின் பந்துவீச்சுக்கு இரையாகி வருவதும், திணறுவதும் தெரிகிறது.
இந்திய அணி வீரர்கள் ஆடுகளத்துக்குள் ஓடியதால் 5 ரன்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால், ஆஸ்திரேலிய அணி முதல் ஓவர் பந்தைச் சந்திக்காமலே 5 ரன்கள் என்று தொடங்கும் என்று கூறப்பட்டாலும். அவ்வாறு தண்டனை ஏதும் வழங்கப்படவில்லை என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.
கடைசி நேரத்தில் களமிறங்கிய ராகுல் காட்டடி அடித்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முத்தாய்ப்பாக இருந்தார். 38 பந்துகளில் அரை சதம் அடித்த ராகுல், தன்னால் எந்த வரிசையிலும் இறங்கிச் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து அருமையான ஃபினிஷர் என்பதை நிரூபித்துள்ளார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே மழையில் நனைந்த காகிதம் போல் 'சப்'பென்று ஆட்டமிழந்தனர்.
இந்த ஆட்டத்தில் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா 42 ரன்களில் ஆட்டமிழந்தாலும், புதிய சாதனையுடனே வெளியேறினார். மிகக் குறைந்த இன்னிங்ஸில் வேகமாக 7 ஆயிரம் ரன்களை எட்டிய தொடக்க ஆட்டக்காரர் எனும் மைல்கல்லை ரோஹித் எட்டினார். இதற்கு முன்னர் இந்தியத் தரப்பில் சச்சின், சேவாக், கங்குலி ஆகியோர் எட்டிய நிலையில் 4-வது பேட்ஸ்மேனாக ரோஹித் இணைந்தார்.
அதுமட்டுமல்லாமல் ஹசிம் அம்லா (147), சச்சின் (160), திலகரத்னே தில்சன் (165), சவுரவ் கங்குலி (168) ஆகிய இன்னி்ங்ஸ்களில்தான் 7 ஆயிரம் ரன்களை எட்டினர். ஆனால், ரோஹித் சர்மா 137 இன்னிங்ஸ்களிலேயே 7 ஆயிரம் ரன்களை எட்டி புதிய வரலாறு படைத்தார்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக ஷைனியும், ரிஷப் பந்த்துக்குப் பதிலாக மணிஷ் பாண்டேவும் சேர்க்கப்பட்டனர்.
தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா, ஷிகர் தவண் இருவரும் வலுவான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். முதல் ஓவரிலேயே கம்மின்ஸ் தனது ஓவரை மெய்டனாக மாற்றினாலும், அடுத்தடுத்து, இருவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.
கடந்த முறை ஏராளமான டாட் பந்துகளை எதிர்கொண்டு வீணாக்கிய ஷிகர் தவண் இந்த முறை தனது இயல்பான ஃபார்முக்கு வந்து விளாசினார். இந்திய அணி முதல் பவர் ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் சேர்த்தது.
இருவரும் சிறப்பாக ஆடிய நிலையில் ரோஹித் சர்மா 42 ரன்களில் ஸம்பா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 81 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்துவந்த கோலி, தவணுடன் சேர்ந்தார். நிதானமாக ஆடிய ஷிகர் தவண், 60 பந்துகளில் அரை சதம் அடித்தார். கேப்டன் கோலி களமிறங்கியதில் இருந்து வேகமாக ரன்களைச் சேர்த்தார். தவணும், கோலியும் சேர்ந்தபின் ஸ்கோர் வேகமெடுத்தது.
லாபுஷேன், ஸம்பா, ஸ்டார்க் , ரிச்சார்ட்ஸன் ஆகியோரின் பந்துவீச்சை இருவரும் நொறுக்கி எடுத்தனர். விராட் கோலி 50 பந்துகளில் அரை சதம் அடித்தார். சதத்தை நோக்கி முன்னேறிய ஷிகர் தவண் 96 ரன்களில் (13 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) ரிச்சார்ட்ஸன் பந்துவீச்சில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 103 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்துவந்த ஸ்ரேயாஸ் அய்யர் (7) ரன்னில் ஸம்பா பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு வந்த கே.எல்.ராகுல், கோலியுடன் சேர்ந்தார்.
தொடக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆடிய ராகுல் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார். 38 பந்துகளில் ராகுல் அரை சதம் எட்டினார். ராகுலுக்கு ஒத்துழைத்து ஆடிய கோலி, 76 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்து ஸம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் சேர்ந்து 10 ஓவர்களில் 78 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து வந்த மணிஷ் பாண்டே 2 ரன்னில் ரிச்சார்ட்ஸன் பந்துவீச்சில் வெளியேறினார்.
6-வது விக்கெட்டுக்கு ஜடேஜா, ராகுல் ஜோடி கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடினர். அதிலும் ராகுல் தன்னால் எந்த இடத்திலும் களமிறங்கி பேட் செய்ய முடியும் என்ற ரீதியில் விளாசித் தள்ளினார். 6-வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் ரன் அவுட் ஆகினார். 52 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகள் உள்பட 80 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இந்திய அணி கடைசி 10 ஓவர்களில் 90 ரன்களுக்கும் மேலாகச் சேர்த்தது.
ஜடேஜா 20 ரன்னிலும், ஷமி ஒரு ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் சேர்த்தது.
ஆஸ்திரேலியத் தரப்பில் ஸம்பா 3 விக்கெட்டுகளையும், ரிச்சார்ட்ஸன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 mins ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago