நீண்ட காலத்துக்கு பின் ஷிகர் தவணின் அரைசதம், ஷைனியின் வேகப்பந்துவீச்சு, பேட்டிங்கிலும், பந்துவீ்ச்சிலும் ஜொலித்த ஷர்துல் தாக்கூர் ஆகியோரால் புனேயில் நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கை அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்தது. 202 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 15.5ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டி20 போட்டிகளில் இந்திய அணி 13 முறைக்கும் மேலாக 200 ரன்களுக்கும் அதிகமாகச் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
புதிய வரலாறு
ஆட்டநாயகன் விருது ஷர்துல் தாக்கூருக்கும், தொடர் நாயகன் விருது நவ்தீப் ஷைனிக்கும் வழங்கப்பட்டது.
இதன் மூலம் இலங்கை அணி்க்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதுமட்டுமல்லாமல் கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து இலங்கை அணியை அனைத்து விதமான தொடர்களிலும் இந்தியஅணி வென்று வருகிறது.
இதுவரை 19 தொடர்களில் 17 தொடர்களை இந்திய அணி வென்றுள்ளது, 2 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. இதுநாள்வரை ஒரு அணிக்கு எதிராக நீண்ட தொடர்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது என்ற புதிய வரலாற்றை இந்திய அணி பதிவு செய்தது.
பும்ரா சாதனை
இந்த ஆட்டத்தில் குணதிலகா விக்கெட்டை வீழ்த்தியபோது, டி20 அரங்கில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் எனும் பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றார். 45 போட்டிகளில் பும்ரா 53 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வின், சாஹல் இருவரும் 52 விக்கெட்டுகளைதான் வீழ்த்தியுள்ளனர்.
அதிவேக கேப்டன்
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 13-வது ஓவரில் ஒரு ரன் சேர்த்தபோது, சர்வதேச அரங்கில் கேப்டனாக இருந்து ஒட்டுமொத்த அளவில் 11 ஆயிரம் ரன்களை எட்டியவர் என்ற சாதனையைப் படைத்தார். கோலி 169 போட்டிகளில்(195இன்னிங்ஸ்) 11 ஆயிரம் ரன்களை(டெஸ்ட்,ஒருநாள்,டி20) எட்டியுள்ளார். இந்த சாதனையை ஏற்கனவே கிரேம் ஸ்மித், தோனி, பாண்டிங், பிளெமிங், ஆலன் பார்டர் ஆகியோர் செய்துள்ளனர். இதில் பாண்டிங் கேப்டனாக 15 ஆயிரம்ரன்களும், ஸ்மித் 14 ஆயிரம் ரன்களும் சேர்த்துள்ளனர்.
சாம்ஸனின் பரிதாபம்
இந்த போட்டியில் சஞ்சு சாம்ஸன் வேடிக்கையான சாதனை ஒன்றை படைத்தார். அதாவது சாம்ஸன் களமிறங்குவது இது 2-வது டி20 போட்டியாகும். பல டி20 தொடர்களில் சஞ்சு சாம்ஸன் இடம் பெற்றபோதிலும் விளையாடும் 11 வீரர்களில் இடம் பெற்றதில்லை. கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி முதல் டி20 போட்டியில் களமிறங்கிய சாம்ஸன் ஏறக்குறைய 73 போட்டிகளாக விளையாடமல் இந்த போட்டியில் 2-வது வாய்ப்பைப் பெற்றார். அதாவது இரு போட்டிகளுக்கு இடையே நீண்ட இடைவெளி பெற்ற வீரர் சாம்ஸன் மட்டுமே. இதற்கு வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் 65 போட்டிகள் இடைவெளிக்குப்பின் பங்கேற்றிருந்தார்.
கூட்டு முயற்சி
இந்திய அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சு, பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். நீண்ட காலத்துப்பின அதாவது 11 இன்னிங்ஸ்களுக்குப்பின் ஷிகர் தவண் அரைசதம் அடித்தார். ஷர்துல் தாக்கூர், ஷைனி இருவரின் பந்துவீச்சும் இரு போட்டிகளிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருந்தது. தாக்கூரின் அவுட் ஸ்விங், ஷைனியின் அதிவேகம் ஆகியவற்றால் பவர்ப்ளே ஓவருக்குள் இலங்கை அணியின் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்தி நெருக்கடி ஏற்படுத்தினர், பவர்-ப்ளே ஓவரில் 35 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தா்கள்.
அதிலும் நேற்றைய ஆட்டத்தில் யாருக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கலாம் என்ற குழப்பத்தில் தேர்வாளர்கள் இருந்துபோது பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் குறிப்பிட்ட பங்களிப்பு செய்த தாக்கூர் வென்றார்.
நீண்ட காலத்துக்குப்பின் சஞ்சு சாம்ஸன் வாய்ப்பு பெற்றார். சிக்ஸருடன் சாம்ஸன் தொடங்கி விரைவாக ஆட்டமிழந்தார். ஒருபோட்டியில் வைத்து ஒரு வீரரை மதிப்பிட முடியாது, அடுத்தடுத்து போட்டிகளில் வாய்ப்பு அளிக்கலாம். இந்த ஆட்டத்தில் மட்டும் ராகுல், சாம்ஸன் என 2 விக்கெட் கீப்பர்கள் வாய்ப்பு பெற்றனர். இவர்களை சரிவிகிதத்தில் கலந்து, பங்களிப்பு செய்ய வைத்தால் வலுவான அணியை இந்திய அணி மாறும்.
ஜொலிக்கிறார் கோலி
கேப்டன் விராட் கோலி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து 6-வத வீரராக களமிறங்கி கேப்டனுக்குரிய பெருந்தன்மையுடன், பொறுப்புடன் நடந்தார். கோலியின் செயல்பாடுகளில் முதிர்ச்சி தென்படுகிறது. இ்ந்த ஆட்டத்தில் பங்கேற்ற வீரர்கள் அனைவரும் சரிவிகித கலப்பில் பல்வேறு திறமைகளுடன் கூடியதாக அமைந்திருந்து வெற்றியை எளிதாக்கியது. வாய்ப்பு கிடைக்காத மணிஷ் பாண்டே, சாம்ஸன், ஆகியோருக்கு இதுபோல் தொடர்ந்து வாய்ப்பு வழங்கினால், டி20 உலகக்கோப்பைக்கு திறமையான வீரர்களை அடையாளம் காண முடியும்.
உண்மையான சவால் காத்திருக்கு
அதேசமயம், இலங்கை,மே.இ.தீவுகள் அணிகளுடனான தொடர்கள் எல்லாம் இந்திய அணிக்கு சவால் அளிக்கும் விதத்தில் இல்லாத இது தேைவயா என்ற கேள்வி எழுகிறது. மே.இ.தீவுகள், இலங்கை அணிகளை அழைத்துவந்து "அடித்து துவைத்து" இந்திய அணி புள்ளிகளை ஏற்றுக்கொள்கிறதா என்ற வினாவும் வைக்கப்படுகிறது. கடந்த இரு தொடர்களும் இந்திய அணிக்கு எளிதாக அமைந்தாலும், அடுத்தவரும் ஆஸி.யுடன் ஒருநாள் தொடர், நியூஸி. தொடர்தான் இந்திய அணியின் திறமைக்கு உரைகல்லாக அமையும்.
இலங்கை அணியினர் கடந்த 2 போட்டிகளிலும் போராட்டக் குணத்தை வெளிப்படுத்தாமல் விளையாடியதால் ஒரு தரப்பாகவே ஆட்டம் அமைந்திருந்தது.
வலுவான தொடக்கம்
டாஸ் வென்ற இலங்கே கேப்டன் மலிங்கா பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணிக்கு ஷிகர் தவண், ராகுல் சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். தவண் தொடக்கத்தில் திணறினார், மேத்யூஸ் பந்தில் முதல் பவுண்டரி அடித்போது சனகா அதை கோட்டைவிட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்திய தவண் வழக்கமான அதிரடிக்கு மாறினார். ராகுலும் ஒருபக்கம் விளாச ஸ்கோர் 10 ரன்ரேட்டில் உயர்ந்தது. பவர்ப்ளேயில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்தது.
சிக்ஸருக்கும், பவுண்ரிகளுக்கும் பந்தை பறக்கவிட்ட தவண் 34 பந்துகளில் அரைசதம் அடித்தா். கடந்த இரு தொடர்களாக சூப்பர் ஃபார்மில் இருந்துவரும் ராகுல் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரும் முதல்விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்
தவண் 52 ரன்களில்(7பவுண்டரி,ஒருசிஸ்கர்) சன்டகன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாம்ஸன் வந்துவுடன் சிக்ஸர் அடித்து அதிரடி காட்டியபோதிலும் கால்காப்பில் வாங்கி வெளிேயறினார். அடுத்த சிறிதுநேரத்தில் ராகுல் 54 ரன்னிலும், ஸ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னிலும் சன்டகன் ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஒரு கட்டத்தில் 97 ரன்களுக்கு
விக்கெட் சரிவு
முதல்விக்கெட்டை இழந்த இந்திய அணி அடுத்த 25 ரன்களுக்கள் வேகமாக 3 விக்கெட்டுகளை இழந்தது.
4-வது விக்கெட்டுக்கு மணிஷ் பாண்டே, கோலி இருவரும் நிதானம் காட்டினர். கோலி தனது வழக்கமான ஷாட்களில் சிக்ஸர், பவுண்டரி விளாசி 26 ரன்னில் ரன்அவுட் ஆகினார். இருவரும் 44 ரன்கள் சேர்த்தனர்.அடுத்துவந்த வாஷிங்டன் சுந்தர் டக்அவுட்டில் வெளியேறினார்.
சூப்பர் பினிஷிங்
மணிஷ்பாண்டே, ஷர்துல் தாக்கூர் ஜோடி இலங்கை வீரர்களின் பந்துவீச்சை நொறுக்கிஎடுத்தனர்ர். மலி்ங்கா வீசிய 19-வது ஓவரில் தாக்கூர் ஒருசிஸ்கரும், பாண்டே பவுண்டரியும் அடித்து 15ரன்கள் சேர்த்தனர். குமாரா வீசிய கடைசி ஓவரில் தாக்கூர் சிக்ஸர்,பவுண்டரியும், பாண்டே பவுண்டரியும் அடித்து நொறுக்கினர். கடைசி இருஓவர்களில் 34 ரன்களை இருவரும் விளாசி "சூப்பர் பினிஷிங்" அளித்தனர்.
தாக்கூர் 8 பந்துகளில் 22 ரன்களிலும், பாண்டே 18 பந்துகளில் 31 ரன்களும் சேர்த்து இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்து. இலங்கை தரப்பில் சன்டகன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
202 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால், தொடக்கத்திலிருந்து விக்கெட்டுகளை இழந்து பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது.
பவர்ப்ளேயில் அதிர்ச்சி
பும்ரா வீசிய முதல் ஓவரில் ஸ்ட்ரைட்மிட்ஆன் திசையில் சுந்தரிடம் கேட்ச் கொடுத்து குணதிலகா ஒருரன்னில் வெளியேறினார். தாக்கூர் வீசிய 2-வது ஓவரில் சிக்ஸர் அடித்த பெர்ணான்டோ அடுத்த பந்தில் 'கவர்திசையில்' அடித்து ஸ்ரேயாஸ் அய்யரிடம் கேட்ச் கொடுத்து 9ரன்னில் ஆட்டமிழந்தார்
பும்ரா வீசிய 4-வது ஓவரில் பெரேரா 2 ரன்னில் மணிஷ் பாண்டேவால் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார். ஷைனி வீசிய 6-வது ஓவரில் வழக்கமான அதிவேக யார்கர் வீசிய குசால் பெரேராவை 7 ரன்களில் பெவிலியன்அனுப்பினார்.
பவர்ப்ளேயில் இலங்கை அணி 35 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் 5வது விக்கெட்டுக்கு மேத்யூஸ், தனஞ்செயா இருவரும் இணைந்து அணியை மீட்டெடுத்தனர். இருவரும் 72 ரன்கள் சேர்த்துப்பிரிந்தனர். மேத்யூஸ் 31 ரன்னில் சுந்தர் பந்துவீச்சில் வெளிேயறினார்.
இருவர் மட்டுமே ஆறுதல்
அடுத்து வந்த சனகா(9), டிசில்வா(0), சன்டகன்(1), மலிங்கா(0) வரிசையாக வெளியேறினர்.94 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்த இலங்கை அணி அடுத்த 30 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. தனஞ்செயா நிதானமாக ஆடி அரைசதம் அடித்து 57 ரன்னில் ஆட்டமிழந்தார். இலங்கை அணியில் மேத்யூஸ், தனஞ்செயா இருவர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னோடு வெளியேறினர். இதில் மேத்யூஸ் 16 மாதங்களுக்குப்பின் அணியில் இடம் பெற்று தன்னை நிரூபித்துள்ளார்.
15.5 ஓவர்களில் இலங்கை அணி 123 ரன்களில் சுருண்டு 78 ரன்ளில் தோல்வி அடைந்தது. இந்தியத் தரப்பில் ஷைனி 3 விக்கெட்டுகளையும், தாக்கூர்,சுந்தர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago