191 ரன்கள் என்ற இலக்கை விரட்ட ராஜஸ்தானின் ரஹானே மற்றும் நாயர் ஜோடி களமிறங்கியது. மிக கவனத்துடனும், அதே நேரத்தில் தேவைக்கேற்ற ரன்களை சேர்த்தும் அணியின் வெற்றிக்கு சரியான அஸ்திவாரத்தை அமைக்க இந்த இணை முயற்சித்தது. 7 ஓவர்களில் 54 ரன்கள் என அணியின் ஸ்கோர் இருந்த நிலையில் ரஹானே 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
8-வது ஓவரை வீச வந்த யுவராஜ் சிங் வாட்சன் மற்றும் பின்னியை தலா ஒரு ரன்னுக்கு வீழ்த்தினார். 10-வது ஓவரில் மீண்டும் யுவராஜ் சிங் சாம்சனை பெவிலியனுக்கு அனுப்ப, பெங்களூரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தாலும், நாயர் 34 பந்துகளில் அரை சதம் எடுத்து தனது ஆட்டத்தை தொடர்ந்தார். அவரும் 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடி ஆட்டக்காரர்கள் ஸ்மித் மற்றும் ஃபால்க்னர் இருவரை நம்பியே ராஜஸ்தான் அணியின் வெற்றி இருந்தது.
5 ஓவர்களில் 69 ரன்கள் தேவை என்ற நிலையில் 17-வது ஓவரில் 21 ரன்களும், 18-வது ஓவரில் 23 ரன்களையும் இந்த இணை சேர்த்து பெங்களூரு பந்துவீச்சாளர்களுக்கு அதிர்ச்சியளித்தது. இரண்டு ஓவர்களில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என இருந்தபோது, வருண் ஆரோன் வீசிய 19-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி உட்பட 5 பந்துகளிலேயே 21 ரன்கள் வர, 7 பந்துகள் மிச்சம் வைத்து ராஜஸ்தான் அபாரமாக வெற்றி பெற்றது. ஃபால்க்னர் 41 ரன்களுடனும் (17 பந்துகள், 3 பவுண்டரி, 3 சிக்ஸர்), ஸ்மித் 48 ரன்களுடனும் (21 பந்துகள், 4 பவுண்டரி, 4 சிக்ஸர்) கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பெங்களூரு அணியின் யுவராஜ் சிங் 38 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து, பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியும், அந்த அணி தோல்வியடைந்துள்ளது.
முன்னதாக சொந்த மண்ணி டாஸ் வென்ற பெங்களூரு அணி, பழகிய சூழல் என்பதால் முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. துவக்க வீரர்கள் கோலி 4 ரன்களுக்கும், கெயில் 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அடுத்து களமிறங்கிய ஸோல் 16 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ராஜஸ்தானின் கை ஆட்டத்தில் மேலோங்கியது.
ஆனால் 9-வது ஓவரில் இணைந்த டி வில்லியர்ஸ் - யுவராஜ் சிங் இணை, ராஜஸ்தான் பவுலர்களை கட்டுப்படுத்த ஆரம்பித்தனர். பவுண்டரிகளும் சிக்ஸர்களும் சீரான இடைவேளையில் வர யுவராஜ் சிங் 24 பந்துகளில் அதிவேகமாக அரை சதத்தைக் கடந்தார்.
ரிச்சர்டசன் வீசிய 19-வது ஓவரில் 2 சிக்ஸர்களை அடித்த யுவராஜ் சிங், அதே ஓவரின் கடைசி பந்தில் 83 ரன்களுக்கு (38 பந்துகள், 7 பவுண்டரி, 7 சிக்ஸர்) ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் அடித்த டி வில்லியர்ஸும் 58 ரன்களுக்கு (32 பந்துகள், 1 பவுண்டரி, 5 சிக்ஸர்) வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களைக் குவித்தது. கடைசி 8 ஓவர்களில் அந்த அணி 120 ரன்களை அடித்தது குறிப்பிடத்தக்கது. யுவராஜ் சிங், டி வில்லியர்ஸ் இணை 65 பந்துகளில் 132 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் அடித்தனர்.