அற்புதமான சிக்ஸரில் ஆட்டத்தை முடித்த கோலி;ஷைனியின் 147கி.மீ வேகம், தாக்கூரின் துல்லியம்: இலங்கையை ஊதித்தள்ளியது இந்திய அணி

By க.போத்திராஜ்

விராட் கோலியின் அற்புதமான சிக்ஸர், ஷைனியின் மிரளவைக்கும் வேகப்பந்தவீச்சு, ஷர்துல் தாக்கூரின் லைன் அன்ட் லென்த் பந்துவீச்சு ஆகியவற்றால் இந்தூரில் நேற்று நடந்த இலங்கை அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியி்ல் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது. 143 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை அடைந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நவ்தீப் ஷைனி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாம்ல டி20 போட்டியில் தொடர்ந்து 9-வது வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது.

கோலி சாதனை

இந்திய அணியின் விராட் கோலி, டி20 போட்டியில் கேப்டனாக வந்தபின், நேற்றைய ஆட்டத்தில் ஆயிரம் ரன்களைக் கடந்தார். அதுமட்டுமல்லாமல், டி20 போட்டியில் அதிகமான ரன்களை சேர்ப்பது யார் என்ற போட்டியில் ரோஹித் சர்மாவை முறியடித்தார் விராட் கோலி.

147 கி.மீ வேகம்

இந்திய அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சு நேற்றை ஆட்டத்தில் அற்புதமாக இருந்தது. காயத்தில் இருந்து மீண்டுவந்த பும்ரா மீது அனைவரின் எதிர்பார்ப்பு இருக்கையில், அனைத்தையும் நவ்தீப் ஷைனியும், தாக்கூரும் மாற்றிவிட்டனர். நவப்தீப் ஷைனியின் நேற்றை பந்துவீச்சு அதிகவேகத்தில், சராசரியாக 147 கி.மீ வேகத்தில் இருந்தது.

உண்மையில் ஷைனியின் பந்துவீச்சை கணித்து ஆடுவதில் இலங்கை பேட்ஸ்மேன்கள் சிரமத்தை எதிர்கொண்டார்கள். ஆஸ்திரேலியின் பெர்த், சிட்னி போன்ற ஆடுகளங்களில் ஷைனியின் பந்துவீச்சில் நிச்சயம் அனல் பறக்கும். அதிலும் குணதிலகாவுக்கு சைனி வீசிய யார்கர், 147 கி.மீ வேகத்தில் வந்த தாக்கிய புல்லட் என்றுதான் குறிப்பிட முடியும்.
மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான ஷர்துல் தாக்கூர் மிகவும் கட்டுக்கோப்பாகவும், துல்லியமாகவும் வீசினார். இலங்கை அணியின் கடைசிவரிசை பேட்ஸ்மேன்கள் 3 பேரும் தாக்கூரின் பந்துவீச்சுக்கு இரையானார்கள்.

பந்துவீச்சுக்கு கிடைத்த வெற்றி

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பும்ரா நேற்று 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தினார். பும்ராவின் வேகப்பந்துவீச்சை குறைத்துமதிப்பிட முடியாது, எந்தநேரத்திலும் ஃபார்முக்கு வந்து எதிரணியை திக்குமுக்காடச் செய்துவிடுவார். ஒட்டுமொத்தத்தில் பேட்டிங்கிற்கு சாதகமான இந்தூர் ஹோல்கர் ஆடுகளத்தில் இலங்கை அணியை 142 ரன்களில் சுருட்டியது இந்திய அணியின் பந்துவீச்சுக்கு கிடைத்த வெற்றிதான்.

இந்த ரன் எல்லாம் போதாது..

இலங்கை அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் நிலைத்தன்மை இன்னும் வரவில்லை. நன்றாக தொடங்கிய இலங்கை ேபட்ஸ்மேன்கள் நடுவரிசையில் இருந்து கோட்டைவிட்டனர். கடைசி 5 விக்கெட்டுகளை வெறும் 26 ரன்களுக்கு இழந்துள்ளனர். அனுபவ வீரர் மேத்யூஸ் தேர்வு செய்யப்பட்டும் ஏன் அவரை விளையாடும் லெவனில் எடுக்கவி்ல்லை எனத் தெரியவில்லை. இதில் பந்துவீச்சில் இலங்கையின் நம்பிக்கை வீரரான உதானா காயம் காரணாக பந்துவீசாமல் வெளியேறியது அந்த அணிக்கு பின்னடைவாகும்.

இதுபோன்ற ஆடுகளங்களில் முரட்டுத்தனமான ஃபார்மில் இருக்கும் இந்திய அணியை சமாளிக்க இதுபோன்ற ஸ்கோர் போதாது. இலங்கை அணி இன்னும் கூடுதலாக 40 ரன்கள் அடித்திருந்தால் வெற்றிக்காக போராடியிருக்கலாம். இந்த ஸ்கோரால் ஒருபோதும் இந்திய அணியின் வெற்றியை தடுக்க முடியாது.

வலுவான அடித்தளம்

143 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு பேட்டிங்கில் ஷிகர் தவண், ராகுல் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ராகுல் அதிரடியாகத் தொடங்கி சில பவுண்டரிகளை அடித்தார்.

தவண் பொறுமையாக பேட் செய்தார். மலிங்கா, குமாரிவின் ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகள அடித்த ராகுலின் தடாலடி ஆட்டத்தால் பவர்ப்ளேயில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் சேர்த்தது.

முதல் விக்கெட்டுக்கு இருவரும் 71 ரன்கள் சேர்த்துப்பிரிந்தனர். அதிரடியான தொடக்கம் அளித்த ராகுல் 6 பவுண்டரிகள் உள்பட 33 பந்துகளில் 45ரன்கள் சேர்த்தபோது டிசில்வா பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.

அடுத்துவந்த ஸ்ரேயாஸ் அய்யர், தவணுடன் சேர்ந்தார். மந்தமாக ஆடிய தவண், அடுத்த சில ஓவர்களில் வெளிேயறினார். டிசில்வா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி டிஆர்எஸ் முறையில் 32 ரன்களில் தவண் ஆட்டமிழந்தார்.

ஸ்ரேயாஸ் அதிரடி

3-வது விக்கெட்டுக்கு கேப்டன் கோலி களமிறங்கி, ஸ்ரேயாஸ்அய்யருடன் சேர்ந்தார். இருவரும் சேர்ந்தபின் ஆட்டத்தில் அனல் பறந்தது. நிதானமாக இருவரும் தொடங்கிநிலையில் சில்வா வீசிய 16-வது ஓவரை அய்யர் நொறுக்கி எடுத்ததார். 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 17 ரன்கள் சேர்க்கப்பட்டது.

மலிங்கா வீசிய 17-வது ஓவரில் தனது பங்கிற்கு கோலி ஒரு சிக்ஸரையும், பவுண்டரியும் விளாசினார். குமாரா வீசிய 18-வது ஓவரில் சனகாவிடம் கேட்ச் கொடுத்து அய்யர் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்துப்பிரிந்தனர்.

"சச்சின் ஷாட்" ஆடிய கோலி

அடுத்து ரிஷப்பந்த் களமிறங்கினார், ஆனால், அவருக்கு கோலி வேலையே வைக்கவில்லை. குமாரா வீசிய 3-வது பந்து பிட்ச் ஆனவுடன் லாங்-லெக் திசையில் கோலி அருமையான சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இந்த ஷாட்டை அடிக்கடி சச்சின் ஆடுவார். ஏறக்குறைய சச்சின் ஆடுவதைப் போலவே இந்த ஷாட்டை கோலி கையாண்டு சிக்ஸர் மூலம் ஆட்டத்தை வெற்றி பெற வைத்தார்.

17.3ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்து இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. விராட் கோலி 30 ரன்னிலும், பந்த் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இலங்கை தரப்பில் டிசில்வா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

விக்கெட் சரிவு
முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இலங்கை அணியின் பெர்ணான்டோ, குணதிலகா ஆட்டத்தைத் தொடங்கினர். இருவரும் தொடக்கத்தில் சில பவுண்டரிகளை அடித்து நன்றாகத் தொடங்கினர். இவர்களைப் பிரிக்க 5-வது ஓவரில் சுந்தர் வரவழைக்கப்பட்டார்.

அதற்கு பலனும் கிடைத்தது. சுந்தர் வீசிய 5-வது ஓவரில் பெர்ணான்டோ மிட்-ஆஃப் திசையில் தூக்கி அடிக்க சைனியிடம் கேட்ச் ஆனது. 22ரன்னில் பெர்னான்டோ வெளியேறினார். இலங்கை அணி பவர்ப்ளேயில் ஒருவிக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் சேர்த்தது.
அடுத்துவந்த பெரேரா, குணதிலகாவுடன் சேர்ந்தார். பெரேடா அவ்வப்போது சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் அடித்து ஸ்கோரை உயர்த்தினார். ஷைனி வீசிய 8-வது ஓவரில் யார்-கர் பந்துவீச்சுக்கு இரையாகி குணதிலகா 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் இலங்கை அணியில் சரிவு தொடங்கியது. குல்தீப் வீசிய 12-வது ஓவரில் ஓஷாடா பெர்னான்டோ இறங்கி அடிக்க முற்பட்டு பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு 10 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். நிதானாமாக ஆடிவந்த பெரேராவும் 34 ரன்கள் சேர்த்திருந்தபோது குல்தீப் வீசிய வீசிய14-வது ஓவரில் லாங்-ஆன் திசையில் தவணிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். சிக்ஸருக்கு செல்லவேண்டிய பந்தை தவண் லாவகமாகப்பிடித்தார்

அதன்பின் வந்த இலங்கை அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன்களான ராஜபக்ச(9), சனகா (7), டிசில்வா(17) உதனா(1) மலிங்கா(0) என வரிசையாக வெளியேறினர். டிசில்வா 16 ரன்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது இலங்கை அணி. இந்திய அணித்தரப்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், குல்தீப், ஷைனி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்