பவர் ஹிட்டர்ஸ் நாங்கதான்: ‘3 ஸ்டார்ஸ்’ பேட்டிங்கில் நொறுங்கியது மே.இ.தீவுகள் அணி: டி20 தொடரை வென்றது இந்தியா; கோலி, ரோஹித் புதிய மைல்கல்

By க.போத்திராஜ்

விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகிய 'பவர் ஹிட்டர்ஸின்' காட்டடி பேட்டிங்கால் மும்பை வான்கெடே மைதானத்தில் நேற்று நடந்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டி20 தொடரைக் கைப்பற்றியது

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. ஆட்டநாயகனாக கே.எல்.ராகுலும், தொடர் நாயகனாக விராட் கோலியும் தேர்வு செய்யப்பட்டனர்.

முக்கியமாக கோலி நேற்று 70 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து சர்வதேச அரங்கில் தனது 100-வது அரைசதத்தை பதிவு செய்தார்.

டி20 தொடர் தொடக்கத்தில் இருந்தே டி20 ரன்கள் சேர்ப்பதில் யார்,யாரை முந்துவது என்று கோலிக்கும், ரோஹித்துக்கும் போட்டி இருந்தது. ஆனால் தொடர் முடிவில் கோலியும், ரோஹித்தும் 2,633 ரன்களுடன் சமநிலையில் இருக்கிறார்கள். அதிகபட்ச ரன்கள் சேர்த்தத்தில் இருவரும் தற்போது முதலிடத்தில் உள்ளார்கள்.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு240 ரன்கள் குவித்தது. 241 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

அதிகபட்ச ஸ்கோர்

இந்திய அணி சர்வதேச டி20 போட்டிகளில் தனது 3-வது மிகப்பெரிய ஸ்கோரை நேற்று பதிவு செய்தது. இதற்கு முன் 2017ல்இந்தூரில் இலங்கைக்கு எதிராகவும்(260/5), 2016ல் லாடர்ஹில்லில் மே.இ.தீவுகள்(244/4) எதிராகவும் இந்திய அணி பெரிய ஸ்கோரை அடித்திருந்தது.

மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக அனைத்து விதமான போட்டிகளிலும் 7-வது முறையாக தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.

பழிதீ்ர்ப்பா

அதுமட்டுமல்லாமல் கடந்த 3 ஆண்டுகளுக்குமுன் இதே வான்கெடே மைதானத்தில்தான் டி20 உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை தோற்கடித்து கொண்டாடியது மே.இ.தீவுகள் அணி. அந்த தோல்விக்கு மே.இ.தீவுகள் அணியை நேற்று பழிதீர்த்துவிட்டார்கள் இந்திய வீரர்கள்.

வான்கெடே மைதானத்தில் இந்திய அணி நேற்று அடித்த 240 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோராகும். இதற்குமுன் அங்கு 2016 டி20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து 230 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. அதை இந்தியா முறியடித்தது.

இனிமேல் நாங்கதான்

இதுநாள்வரை பவர் ஹிட்டர்ஸை கொண்ட அணி மே.இ.தீவுகள் அணிதான் என்று சர்வதேச அரங்கில் சொல்லப்பட்டுவந்தது. ஆனால் உண்மையான பவர்ஹிட்டர்ஸ் யார் என்பதை கோலி, ரோஹித், ராகுல் 3 பேரும் நேற்று நிரூபித்துவிட்டார்கள்.
டி20 ஆட்டத்தை எவ்வாறு அணுக வேண்டும், எப்படி ஆட வேண்டும் என்பதை உணர்ந்து அற்புதமான ஆட்டத்தை 3 பேரும் விளையாடினார்கள். டி20 போட்டி என்றாலே பந்துகளை வீணாக்கக் கூடாது, சிங்கில்ஸ், டபுல்ஸ் ரன்கள் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவதைக் காட்டிலும் அடித்து ஆடுவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதை சரியாகப் புரிந்து செய்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்தால் மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்து நெருக்கடி கொடுத்தால் , எதிரிணி மனரீதியாக உடைந்துவிடுவார்கள் என்பதை அறிந்து பேட் செய்தார்கள். மிகப்பெரியஇலக்கு பந்துவீச்சாளர்களுக்கு நம்பிக்கையைையும் , அவர்களுக்கு பளுவையும் குறைக்கும்.

ரோஹித் மைல்கல்

தொடக்கத்தில் இருந்தே ஆட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்ட ரோஹித், ராகுல் இருவரும் சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்தனர். ரோஹித் சர்மா முதல் சிக்ஸர் அடித்தபோது சர்வதேச அரங்கில் 400 சிக்ஸர் அடித்த 3-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார். இந்த ஆட்டத்தில் 5 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ரோஹித் கணக்கு 404 சிக்ஸராக உயர்ந்துவிட்டது. கெயில்(534சிக்ஸர்), அப்ரிடி(476)ஆகியோருககு அடுத்த இடத்தில் ஹிட்மேன் ரோஹித் உள்ளார்

கோலி சாதனை

அதுமட்டுமல்லாமல் கேப்டன் கோலி நேற்று ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார். 21 பந்துகளில் அரைசதம் அடித்தகோலி, தனது அதிவேக அரைசதத்தை பதிவு செய்தார். இந்திய பேட்ஸ்மேன்கள் அளவில் 5-வது வேகமான அரைசதம் அடித்த வீரர் எனும் பெருமையைப் பெற்றார். முதலிடத்தில் யுவராஜ் சிங்கும்,அடுத்து கம்பீரும் உள்ளனர்.

முக்கியமாக நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா(71), ராகுல்(91), கோலி(70) ஆகிய 3 பேட்ஸ்மேன்கள் ஒரு இன்னிங்ஸில் 70 ரன்களுக்கு மேல் சேர்ப்பது சர்வதேச டி20 போட்டிகளிலேயே இதுதான் முதல்முறையாகும்.

அதிரடி ஆட்டம்

இந்திய அணியைப் பொறுத்தவரைக்கும் ரோஹித் சர்மா, ராகுல் இருவரும் தொடக்கத்தில் இருந்தே ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பிக் கொண்டனர். முதல் ஓவரில் பவுண்டரி அடித்து ராகுல் கணக்கைக் தொடங்க அடுத்து ஹிட்மேன் ரோஹித் தனது அதிரடியை வெளிப்படுத்தினார்.

காட்ரெல் வீசிய 3-வது ஓவரில் 2பவுண்டரிகள், ஒருசிக்ஸரை ரோஹித் விளாசினார். ஹோல்டர் வீசிய அடுத்த ஓவரில் ராகுல், பவுண்டரி,சிக்ஸர் நொறுக்கினார். அதன்பின் பியர் ஓவரையும், வில்லியம்ஸ் ஓவரையும் ரோஹித் துவம்சம் செய்தார். பியர் வீசிய 8வது ஓவரில் 2சிக்ஸர், ஒருபவுண்டரி விளாசினார் ரோஹித்.

மின்னல்வேக அரைசதம்

23 பந்துகளில் ரோஹித் சர்மா அரைசதத்தையும், ராகுல் 29 பந்துகளில் அரைசதத்தையும் அடித்தனர். பவர்ப்்ளேயில் இந்திய அணி 72 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 48 பந்துகளில் 100 ரன்களை எட்டியது. இருவரின் அதிரடியை மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர்.

வில்லியம்ஸ் வீசிய 12-வது ஓவரில் டீப்மிட்விக்கெட்டில் வால்ஷிடம் கேட்ச் கொடுத்து ரோஹித் சர்மா 34 பந்துகளி்ல 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 6 சிக்ஸர்கள்,4 பவுண்டரிகள் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு ராகுல், ரோஹித் ஜோடி 135ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

வேஸ்ட் ரிஷப்பந்த்

அடுத்துவந்த ரிஷப் பந்த் வந்த வேகத்தில் பொலார்ட் பந்துவீச்சில் ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆப்-சைடு விலகிச் சென்ற பந்தை தேவையில்லாமல் அடித்து பந்த் வெளியேறினார். இந்திய அணியில் சுமையாக மாறும் ரிஷப்பந்துக்கு சிறிதுகாலம் ஓய்வு அளிக்கலாம். சாம்ஸனை அழைத்து வாய்ப்பு வழங்கலாம்.

3-வது விக்கெட்டுக்கு வந்த கோலி, ராகுலுடன் சேர்ந்தார். வால்ஷ் பந்துவீச்சில் சிக்ஸருடன் கோலி ரன்வேட்டையைத் தொடங்கினார். ஹோல்டர் வீசிய 15-வது ஓவரில் ராகுல் ஒரு சிக்ஸரும், கோலி 2 பவுண்டரி, ஒரு சிக்ஸரும் என வெளுத்து வாங்கினர். பொலார்ட் வீசிய 19-வது ஓவரில் கோலி 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து 21 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். பொலார்டின் ஒரே ஓவரில் 27 ரன்கள் விளாசப்பட்டது.

சதத்தை நோக்கி முன்னேறிய ராகுல் 56 பந்துகளில் 91ரன்கள் சேர்த்த நிலையில் காட்ரெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கும். 3-வது விக்கெட்டக்கு கோலி, ராகுல் 95 ரன்கள் சேர்த்துப் பிரிந்தன்ர. கோலி 29 பந்துகளில் 70 ரன்களிலும், ஸ்ரேயாஸ் அய்யரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வள்ளல் பந்துவீச்சாளர்கள்

இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் சேர்த்தது. மே.இ.தீவுகள் தரப்பில் வில்லியம்ஸ், காட்ரெல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை இந்திய ேபட்ஸ்மேன்கள் 3 பேரும் வெளுத்துவிட்டனர். பந்துவீசிய 6 பேரில் வில்லியம்ஸ், வால்ஷைத் தவிர 4 பேரும் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினார்கள்.

241 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் மே.இ.தீவுகள் அணி களமிறங்கியது. பீல்டிங் செய்யும்போது காலில் ஏற்பட்ட காயத்தால் லூயிஸ் விலகியது அந்த அணிக்கு பின்னடவு. கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய சிம்மன்ஸ் 7 ரன்னில் ஷமி பந்துவீச்சிலும், கிங் 5 ரன்னில் புவனேஷ் குமார் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பூரன் டக்அவுட்டில் சாஹர் பந்துவீச்சில் வெளியேறினார்.

4-வது விக்கெட்டுக்கு பொலார்ட், ஹெட்மெயர் இணைந்து அணியை முன்னெடுத்தனர். இருவரும் சேர்ந்து 74 ரன்கள் சேர்த்துப்பிரிந்தனர். ஹெட்மெயர் 41ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.

பொலார்ட் 33 பந்துகளில் அரைசதம் அடித்து 68 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 6 சிக்ஸர், 5பவுண்டரி அடங்கும். வில்லியம்ஸ் 13 ரன்னிலும், காட்ரெல் 4 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் மே.இ.தீவுகள் அணி 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 67 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்தியத் தரப்பில் சாஹர், புவனேஷ்குமார், ஷமி, குல்தீப் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக ராகுலும், தொடர் நாயகனாக விராட் கோலியும் தேர்வு செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்