'ஜென்டில்மேன் கேம்' என்று அழைக்கப்படக்கூடிய கிரிக்கெட்டின் மூன்றாவது பரிணாமமாக உருவானதுதான் டி20 கிரிக்கெட்.
டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி என பார்த்துப் பார்த்து அலுத்துப் போய்விட்ட மக்களுக்கு ஒரு சினிமா பார்க்கும் நேரத்தில் கிரிக்கெட் முடிவை அறிந்து கொள்ளும் வேகத்தில், ஆர்வத்தைத் தூண்டும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் டி20 போட்டி.
கிரிக்கெட்டில் முடிவை அறிந்து கொள்ள டெஸ்ட் போட்டி என்றால் 5 நாட்களும், ஒருநாள் போட்டி என்றால் காலை முதல் மாலை வரையிலும் ரசிகர்கள் காத்திருக்க வேண்டும். இந்த ட்ரெண்டை மாற்றும் ட்ரெண்ட் செட்டராக வந்ததுதான் டி20 கிரிக்கெட்.
கடந்த 2005-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கும், நியூஸிலாந்துக்கும் இடையேதான் உலகின் சர்வதேச முதல் டி20 போட்டி நடந்தது. அதன்பின் பல நாடுகள் டி20 போட்டிகளில் பங்கேற்று இருந்தாலும், இந்திய அணி மட்டும் பங்கேற்கவில்லை. அதாவது 9 சர்வதேசப் போட்டிகள், 9 அணிகள் பங்கேற்ற நிலையில் இந்திய அணி மட்டும் பங்கேற்கவில்லை.
டி20 போட்டி அறிமுகமான பின் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுக்குப் பின் இந்திய அணி தனது முதல் டி20 போட்டியை விளையாடியது.
அதாவது 2006-ம் ஆண்டு இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தது. அந்தத் தொடரில்தான் இந்திய அணி முதல் டி20 போட்டியில் அடியெடுத்து வைத்தது.
2006-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி ஜோகன்ஸ்பர்கில் நடந்த ஆட்டம்தான் இந்திய அணி விளையாடிய முதல் சர்வதேச டி20 போட்டியாகும். இன்றுதான் அந்த நாள். ஏறக்குறைய இந்திய அணி டி20 போட்டி விளையாடத் தொடங்கி 13 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
இந்திய அணியின் முதல் டி20 போட்டிக்கு கேப்டனாக பொறுப்பேற்றது யார் தெரியுமா? அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக்தான்.
கேப்டனாகப் பொறுப்பேற்று முதல் போட்டியிலேயே தென் ஆப்பிரிக்க அணியை சேவாக் வீழ்த்திக் காட்டினார். அந்தப் பயணத்தில் ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியிடம் படுதோல்வியைச் சந்தித்த இந்திய அணி, தனது முதல் டி20 போட்டியிலேயே அந்த அணியை வீழ்த்திக் காட்டியது.
அந்தப் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் இடம் பெற்ற அனைத்து வீரர்களுக்கும் அதுதான் முதல் போட்டியாக அமைந்தது.
இந்திய அணிக்கு முதல் போட்டியில் கிடைத்த வெற்றியும் அவ்வளவு சுலபமான வெற்றியாக அமைந்திருக்கவில்லை என்பதுதான் சுவாரஸ்யம். கடைசி இரு ஓவர்களில் இந்திய ரசிகர்கள் அனைவரையும் இருக்கையின் நுனியில் அமரவைத்த ஆட்டமாகத்தான் அமைந்தது.
அதிலும் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆபத்பாந்தவனாக சிக்ஸர் அடித்து அணியைக் காப்பாற்றிய வீரர்தான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் என்பதுதான் கூடுதல் மகிழ்ச்சி.
சச்சின், சேவாக், தினேஷ் மோங்கியா, தோனி, தினேஷ் கார்த்திக், ரெய்னா, இர்பான் பதான், ஹர்பஜன் சிங், ஜாகீர்கான், அகர்கர், ஸ்ரீசாந்த் என அனைவருக்கும் அதுதான் முதல் போட்டி என்பதால் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி, உற்சாகம், உத்வேகம், துடிப்பு காணப்பட்டது.
13 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இந்திய அணி கடந்த நவம்பர் 16-ம் தேதி வரை 123 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 76 போட்டிகளில் வெற்றியும், 43 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இந்திய அணியின் வெற்றி சராசரி 63 சதவீதமாக இருக்கிறது.
இந்த முதல் போட்டியின் சில நினைவுகளை இப்போது ரீவைண்ட் செய்து பார்க்கலாம்.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஸ்மித் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் சேர்த்தது.
127 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஒருபந்து மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்திய அணியின் தனது முதல் ஆட்டத்தில் ஜாகீர்கான், அகர்கர், ஸ்ரீசாந்த் என 3 வேகப்பந்து வீச்சாளர்களும், சுழற்பந்து வீச்சுக்கு ஹர்பஜன் சிங், பகுதி நேரப்பந்துவீச்சாளராக சச்சின் என மிகுந்த வலிமையோடு இருந்தது. பேட்டிங்கிலும் தென் ஆப்பிரிக்க அணிக்குச் சவால் விடுக்கும் வகையில்தான் இந்திய அணி இருந்தது.
சச்சின், சேவாக், தோனி, ரெய்னா, தினேஷ் மோங்கியா, தினேஷ் கார்த்திக், இர்பான் பதான் என 7 வீரர்கள் நல்ல பேட்ஸ்மேன்களாக இருந்தார்கள்.
ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணியைச் சக்கையாகப் பிழிந்தெடுத்த தென் ஆப்பிரிக்க அணி முதல் டி20 போட்டியில் இந்திய அணியிடம் 126 ரன்களில் சுருண்டுவிடுவோம் என எதிர்பார்க்கவில்லை.
இந்திய அணிக்கு முதல் போட்டி என்பதால், உத்வேகத்தோடு ஃபீல்டிங்கிலும், பந்துவீச்சிலும் ஈடுபட்டார்கள்.
தென் ஆப்பிரிக்க அணியில் அபாயகரமான வீரர்கள் எனச் சொல்லப்படும் டிவில்லியர்ஸ் (7), கிப்ஸ் (7) இருவர் விக்கெட்டுகளையும் அகர்கர் கழற்றினார். இவர்கள் இருவரும் ஆட்டமிழந்தபோதே இந்திய அணிக்குப் பாதிச் சுமை குறைந்திருந்தது.
அதன்பின் மற்ற வீரர்களான பூஸ்மேன்(1), கேப்டன் ஸ்மித் (16) இருவரையும் ஜாகீர்கான் வீழ்த்தினார். சீரான இடைவெளியில் இந்தியப் பந்துவீச்சாளர்களிடம் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்து வந்தார்கள்.
தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக இந்தப் போட்டியில் மோர்கல் 27 ரன்களும், கெம்ப் 22 ரன்கள், வான்டர் வாத் 21 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.
இந்திய அணித் தரப்பில் ஜாகீர்கான், அகர்கர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
127 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அதாவது ஓவருக்கு 6 ரன்கள் சேர்க்க வேண்டிய நிலையில் இந்தியாவின் சச்சின், சேவாக் களமிறங்கினார்கள்.
சச்சினின் பேட்டிங்கை மிகவும் எதிர்பார்த்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. லாங்கவேல்ட் வீசிய 4-வது ஓவரில் 10 ரன்னில் சச்சின் போல்டாகி வெளியேறினார்.
அடுத்து வந்த தினேஷ் மோங்கியா, சேவாக்குடன் சேர இருவரும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். சேவாக் தனக்கே உரிய ஸ்டைலில் 5 பவுண்டரிகளையும், சிக்ஸரையும் விளாசினார்.
அரை சதம் அடிப்பார் சேவாக் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 34 ரன்களில் ரன்அவுட் ஆகி சேவாக் வெளியேறினார். அடுத்து தோனி களமிறங்கினார்.
அப்போதெல்லாம் தோனிக்கு ரசிகர்கள் கூட்டம் என்பது மிகவும் குறைவு. தோனி இன்றுதான் கார்ப்பரேட் நிறுவனங்களின் பிராண்ட் மனிதராக மாறியுள்ளார், மாற்றப்பட்டுள்ளார். ஆனால், அன்று இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்களில் தோனியும் ஒருவர் என்ற அடையாளத்துடனே இருந்தார்.
தோனி மீது அந்த நேரத்தில் இருந்த ரசிகர்களுக்கு பெரிய அளவுக்கு அபிமானமும், ஆர்வமும் இருந்ததில்லை, பேட்டிங்கையும் பெரும்பாலும் யாரும் ரசிக்கவில்லை. சச்சின், சேவாக் ஆகிய இரு பெரு நட்சத்திரங்கள் இருந்தவரை தோனியின் வெளிச்சம் மங்கித்தான் இருந்தது.
2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வாங்கிய பின்புதான் தோனியின் முகம் கிரிக்கெட் உலகில் பிரபலமாகியது. இந்த ஆட்டத்தில் தோனி டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். நன்றாக விளையாடிய தினேஷ் மோங்கியா 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 38 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
கடைசி இரு ஓவர்களில் இந்திய அணி வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் தினேஷ் கார்த்திக்கும், சுரேஷ் ரெய்னாவும் இருந்தனர்.
வான்டர் வாத் வீசிய 19-வது ஓவரில் தினேஷ் கார்த்திக்கின் பவுண்டரி உட்பட 7 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவை. பீட்டர்ஸன் வீசிய முதல் பந்திலேயே தினேஷ் கார்த்திக் டீப் மிட் விக்கெட் திசையில் சிக்ஸர் அடித்து ரசிகர்களின் டென்ஷனைக் குறைத்தார். 2-வதுபந்தில் ரன் ஏதும் அடிக்காமல், அடுத்த 3 பந்துகளில் 3 ரன்கள் எடுக்க இந்திய அணி வென்றது.
கடைசி நேரத்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெல்ல வைத்த தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
சேவாக் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி தனது முதலாவது டி20 ஆட்டத்திலேயே பரபரப்பான வெற்றியைப் பெற்றது. இந்திய டி20 அணியின் முதல் கேப்டன் சேவாக், ஆட்டநாயகன் வாங்கிய தினேஷ் கார்த்திக் பெயர் வரலாற்றில் நிலைத்திருக்கும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago