தோனி மீண்டும் அணிக்குள் வரவேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? - ரவிசாஸ்திரி திட்டவட்டம்

2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்திய அணிக்கும், இளம் இந்திய அணி வீரர்களுக்கும், ஏன் அனுபவசாலியான கேப்டன் தோனிக்குமே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, தோனி மீண்டும் அணிக்குள் வருவது, அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பையில் ஆடுவது ஆகியவை 2020 ஐபிஎல் தொடரில் அவர் எப்படி ஆடுகிறார் என்பதைப் பொறுத்ததே என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

38 வயதாகும் தோனி ஓய்வையும் அறிவிக்காமல், உள்நாட்டு கிரிக்கெட்டிலும் ஆடாமல் தேர்வுக்குழுவினை வெறுப்பேற்றி வந்ததால், அவரை அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என்ற முடிவுக்கு கேப்டன் கோலியும், அணி நிர்வாகமும் வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் தோனி மீண்டும் விளையாட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் ரவிசாஸ்திரி என்ன நினைக்கிறார் என்று தெரிய வேண்டுமே:

“தோனி மீண்டும் இந்திய அணிக்குள் வருவது என்பது அவர் எப்போது ஆடத்தொடங்குகிறார் என்பதைப் பொறுத்தும் வரும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் எப்படி ஆடுகிறார் என்பதைப் பொறுத்தும் உள்ளது. மேலும் மற்ற விக்கெட் கீப்பர்களின் பார்ம், தோனியின் பார்முடன் ஒப்பிடும்போது எப்படி உள்ளது என்பதையெல்லாம் அறுதியிட்டுத்தான் முடிவெடுக்க முடியும். வரும் ஐபிஎல் தொடர் இந்த விஷயத்தில் மிகப்பெரிய தொடர், உலகக்கோப்பை டி20 அணிக்கான 15 வீரர்களைத் தேர்வு செய்யும் முன்பாக கடைசியாக முடிவெடுக்க வேண்டிய தொடர் ஐபிஎல் தான்” என்றார் ரவிசாஸ்திரி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE