டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி ரோஹித் சர்மா முதல் சதம்: இந்தியா வலுவான நிலை

By க.போத்திராஜ்

விசாகப்பட்டினம்

விசாகப்பட்டினத்தில் நடந்துவரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராகக் களமிறங்கிய, இந்திய அணியின் ரோஹித் சர்மா அபாரமாக சதம் அடித்துள்ளார்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு மட்டுமே சரியானவர் என்ற விமர்சனத்தோடு களத்தில் இறங்கிய ரோஹித் சர்மா தனது சதத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பின் ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்துள்ளார். இதுவரை டெஸ்ட் போட்டியில் 4 சதங்கள் அடித்துள்ள ரோஹித் சர்மா முதல் இரு சதங்களை கடந்த 2013-ம் ஆண்டிலும், 3-வது சதத்தை 2017-ம் ஆண்டிலும் அடித்திருந்தார்.

இந்திய அணி 59.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் சேர்த்துள்ளது. ரோஹித் சர்மா 115 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 84 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ரோஹித் சர்மா, மயங்க் அக்ரவால் ஆட்டத்தைத் தொடங்கினார்கள்.

பிலாண்டர் வீசிய முதல் ஓவரில் அகர்வாலும், ரபாடா வீசிய முதல் ஓவரில் ரோஹித் சர்மா பவுண்டரியும் அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார்கள். இருவரும் மோசமான பந்துகளை மட்டுமே தேர்வு செய்து பவுண்டரிக்கு அடித்து ரன்களைச் சேர்த்தனர். 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்களும், 19 ஓவர்களில் 50 ரன்களையும் இந்திய அணி அடைந்தது. ஆனால், 20 ஓவர்களுக்கு மேல் ஸ்கோர் வேகமெடுத்தது.


ரபாடா, பிலாண்டரின் வேகப்பந்துவீச்சு ரோஹித் சர்மா, அகர்வாலிடம் பலிக்கவில்லை. இதனால், சுழற்பந்து வீச்சாளர்கள கேசவ் மகராஜ், பீடெட், முத்துசாமி ஆகியோர் பந்துவீச வந்தனர். சுழற்பந்து வீச்சை எளிதாக ரோஹித் சர்மா சமாளித்தார்.

கேசவ் மகராஜ் வீசிய 20-வது ஓவரில் ஸ்ட்ரைட் ட்ரைவில் ஒரு சிக்ஸர் அடித்து ரோஹித் சர்மா மிரட்டி அணியின் ஸ்கோரை 50 ரன்களுக்கு உயர்த்தினார். அதன்பின் பீடெட் வீசிய 22-வது ஓவரில் அகர்வால் ஸ்ட்ரைட் ட்ரைவில் சிக்ஸர் விளாசினார். பீடெட் வீசிய 25-வது ஓவரில் ரோஹித் சர்மா லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாச சுழற்பந்து வீச்சாளர்கள் குழப்பமடைந்தனர்.

ரோஹித் சர்மாவும், அகர்வாலும் களத்தில் நங்கூரமிட்டு சுழற்பந்துவீச்சாளர்களைப் பதம் பார்க்கத் தொடங்கினார்கள். அதன்பின் ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் அடித்து ஸ்கோரை இருவரும் உயர்த்தினர்.

35 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. நிதானமாக ஆடிய மயங்க் அக்ரவால் 114 பந்துகளில் அரை சதம் எட்டினார். 40 ஓவர்களுக்கு மேல் ரோஹித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சை பவுண்டரி, சிக்ஸர்களுக்குத் தள்ளியதால், ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

கேசவ் மகராஜ் ஓவரை மட்டுமே இருவரும் நிதானமாகக் கையாண்டு பேட் செய்தனர். மற்றவகையில் பீடெட் ஓவரைத் துவம்சம் செய்தனர். குறிப்பாக பீடெட் வீசிய 47-வது ஓவரில் மயங்க் அகர்வால் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை விளாசினார். அதன்பின் பீடெட் வீசிய 49-வது ஓவரில் ரோஹித் சர்மா அடுத்தடுத்து இரு சிக்ஸர்களைப் பறக்கவிட்டார்.

சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா 154 பந்துகளில் டெஸ்ட் அரங்கில் தனது 4-வது சதத்தை நிறைவு செய்தார். சதம் அடித்த அடுத்த ஓவரில் பிலாண்டர் வீசினார். இந்த ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை அடித்து ஸ்கோரை உயர்த்தினார்.

58-வது ஓவரில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது. 35 ஓவரில் 100 ரன்களை எட்டிய இந்திய அணி 23 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. ஏறக்குறைய 5 ரன் ரேட் வீதத்தில் ரன்களைச் சேர்த்துள்ளனர்.

59 ஓவர் வீசப்பட்டபோது போதிய அளவு வெளிச்சக் குறைவும், மழையும் குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரோஹித் சர்மா 5 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் உள்பட 115 ரன்களிலும், அகர்வால் 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் உள்பட 84 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.


போத்திராஜ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்