தோனியின் சாதனை முறியடிப்பு: வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக வலம் வரும் விராட் கோலி

கிங்ஸ்டன்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியதையடுத்து, தோனியின் சாதனையை முறியடித்து வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் எனும் சாதனையை கோலி படைத்தார்.

இதுவரை தோனி தலைமையில் இந்திய அணி 27 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், அதை கோலி முறியடித்து, 48-ல் 28 போட்டிகளில் வெற்றி எனும் புதிய சாதனையைப் படைத்தார்.

தோனி தலைமையில் இந்திய அணி 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 வெற்றிகள், 18 தோல்விகள், 15 ஆட்டங்களில் டிராவும் செய்து, 45 சதவீதம் வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால், கோலி தலைமையில் இந்திய அணி 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் தோல்வி, 10 போட்டிகளில் டிராவும் செய்து 28 போட்டிகளில் வென்று, வெற்றி சதவீதம் 58.33 சதவீதமாக இருக்கிறது.

3-வது இடத்தில் கங்குலி தலைமையில் இந்திய அணி 49 போட்டிகளில் 21 வெற்றிகள், 13 தோல்விகள், 15 போட்டிகளில் டிரா செய்துள்ளது.

தோனி ஓய்வுக்குப்பின் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக கோலி பொறுப்பேற்றார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 351 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது வெளிநாடுகளி்ல் அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற வெற்றியாகக் கருதப்படுகிறது.

மேலும், வெளிநாடுகளில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற வகையில் கங்குலியின் 11 வெற்றிகளை கோலி முறியடித்தார். இருவருக்கும் அடுத்த இடத்தில் சவுரவ் கங்குலி தலைமையில் இந்திய அணி 21 வெற்றிகளும், முகமது அசாரூதீன் தலைமையில் 14 வெற்றிகளையும் இந்திய அணி பெற்றிருந்தது.

ஆனால், உலக அளவில் எடுத்துக்கொண்டால் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் தலைமையில் அந்த அணி 53 டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றதே சாதனையாக இருந்து வருகிறது. அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தலைமையில் அந்த அணி 48 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை இந்திய அணி சிறப்பாகத் தொடங்கியுள்ளது. மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று, 120 புள்ளிகளுடன் 9 அணிகள் கொண்ட பட்டியலில் முதலிடத்தில் இந்திய அணி இருக்கிறது.

, பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE