தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்

கிங்ஸ்டன்,


இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனியின் சாதனையை இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் முறியடித்துள்ளார்

கிங்ஸ்டனில் இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியின் போதுதான் ரிஷப் பந்த் இந்த சாதனையைச் செய்தார்.

டெஸ்ட் போட்டியில் மிக விரைவாக 50 'டிஸ்மிஸல்'களை செய்தவகையில் இதுவரை இந்திய வீரர் எம்.எஸ். தோனி முதலிடம் பெற்றுவந்தார். அதாவது தோனி 15 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 50 'டிஸ்மிஸல்'களைச் செய்திருந்தார்.

ஆனால், ரிஷப் பந்த் தற்போது மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக11-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும்போதே தனது 50-வது டிஸ்மிஸலைச் செய்துள்ளார். இசாந்த் சர்மா வீசிய பந்தில் மே.இ.தீவுகள் வீரர் பிராத்வெய்ட்டுக்கு 'கேட்ச்' பிடித்த போது விரைவாக 50 'டிஸ்மிஸல்'களை செய்த இந்திய வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் பெற்றார்.

இதன் மூலம் தோனியைக் காட்டிலும் மிக விரைவாக 50 டிஸ்மிஸல்களை ரிஷப் பந்த் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ரிஷப் பந்த் உலக சாதனையை சமன் செய்தது நினைவிருக்கும். அதாவது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் 11 கேட்சுகளைப் பிடித்தார் ரிஷப்பந்த்.

இதன் மூலம் ஒரே டெஸ்ட் போட்டியில் அதிகமான கேட்சுகளைப்பிடித்த தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், இங்கிலாந்தின் ஜேக் ரஸல் ஆகியோரின் சாதனையை ரிஷப் பந்த் சமன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் ரிஷப் பந்த் 20 கேட்சுகளைப் பிடித்து, அதிகமான கேட்சுகளை டெஸ்ட் தொடரில் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் எனும் சாதனையை செய்தார்.

ஐஏஎன்எஸ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE