பும்ரா ஹாட்ரிக் விக்கெட்; மே.இ.தீவுகள் 7 விக்கெட்டுகளை இழந்து திணறல்: விஹாரி சதம்- பாலோ-ஆன் வழங்குமா இந்தியா? 

By க.போத்திராஜ்

கிங்ஸ்டன்,

கிங்ஸ்டனில் நடந்துவரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது.

ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா சிறப்புக்குரியோர் பட்டியலில் இணைந்தார். டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3-வது இந்தியர் எனும் பெருமையை பும்ரா பெற்றார். இதற்கு முன் ஹர்பஜன் சிங், இர்பான் பதான் ஆகியோர் மட்டுமே இந்தச் சாதனையைச் செய்திருந்தனர்.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹனுமா விஹாரியின் சதம், இசாந்த் சர்மாவின் முதல் அரை சதம் ஆகியவற்றால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வலுவான ஸ்கோரைப் பெற்றது. முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் சேர்த்து இந்திய அணியைக் காட்டிலும் 329 ரன்கள் பின்தங்கி இருக்கிறது.

ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய பும்ராவை பாராட்டும் சக வீரர்கள் : படவிளக்கம்

ஹாட்ரிக் சாதனை

தனது கட்டுக்கோப்பான, துல்லியமான பந்துவீச்சால் மிரளவைத்த பும்ரா 9.1 ஓவர்கள் வீசி 3 மெய்டன்கள் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முதல் 5 விக்கெட்டுகளில் 3 விக்கெட்டுகள் ஹாட்ரிக் விக்கெட்டுகளாக பும்ராவுக்குக் கிடைத்தன.

பும்ரா வீசிய 9-வது ஓவரிலேயே ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார். 9-வது ஓவரின் 3-வது பந்தில் டேரன் பிராவோ ஸ்லிப்பில் நின்றிருந்த ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்துவந்த புரூக்ஸ் 4-வது பந்தில் கால்காப்பில் வாங்கி டக்அவுட்டில் வெளியேறினார், 5-வது பந்தில் சேஸ் கால்காப்பில் வாங்கினார், அதற்கு பும்ரா நடுவரிடம் அப்பீல் செய்தபோது அவர் வழங்கவில்லை. ஆனால் கேப்டன் கோலி டிஆர்எஸ் முறைக்குச் சென்றபோது, அது அவுட் என உறுதியானது. இதையடுத்து, பும்ரா ஹாட்ரிக் விக்கெட்டுகளை முதன்முறையாகக் கைப்பற்றினார்.

பாலோ-ஆன் வழங்குமா இந்தியா

இன்னும் 3 நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணி கைவசம் 3 விக்கெட்டுகள் மட்டுமே இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் விரைவாக ஆட்டமிழந்துவிட்டால், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு பாலோ-ஆன் வழங்குமா அல்லது தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை இந்திய அணி ஆடுமா என்பது தெரியவில்லை. பெரும்பாலும் இந்திய அணி பாலோ ஆன் வழங்காமல் கூடுதலாக 200 ரன்களை அடித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சுருட்டவே நெருக்கடி அளிப்பார்கள் எனத் தெரிகிறது.

டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக சதம் அடித்த ஹனுமா விஹாரி : படவிளக்கம்

விஹாரி சதம், இசாந்த் அரை சதம்

முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் சேர்த்திருந்தது. ரிஷப்பந்த் 27 ரன்னிலும், விஹாரி 42 ரன்னிலும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்து நேற்றைய 2-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

ஆட்டம் தொடங்கி சிறிது நேரத்தில் ரிஷப் பந்த் 27 ரன்னில் ஹோல்டர் பந்துவீ்ச்சில் போல்டாகினார். அடுத்து வந்த ஜடேஜா 16 ரன்னில் கார்ன்வால் பந்துவீச்சில் பிராவோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர்.

7-வது விக்கெட்டுக்கு வந்த இசாந்த் சர்மா, விஹாரியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்த்தனர்.

டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக அரைசதம் அடித்த இசாந்த் சர்மா: படவிளக்கம்

விஹாரிக்கு ஈடுகொடுத்து இசாந்த் சர்மாவும் அவ்வப்போது ரன்களைச் சேர்த்தார். அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாஹாரி டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது சதத்தை 200 பந்துகளில் நிறைவு செய்தார். இவருக்கு துணையாக பேட் செய்த இசாந்த் சர்மா டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது அரை சதத்தை நிறைவு செய்தார்.

இருவரும் சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தனர். இசாந்த் சர்மா 80 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்து பிராத்வெய்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷமி ரன் ஏதும் சேர்க்காமல் வெளியேறினார். சிறப்பாக பேட் செய்த விஹாரி 16 பவுண்டரிகள் உள்பட 111 ரன்னில் ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

இந்திய அணி 1401. ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மே.இ.தீவுகள் தரப்பில் ஹோல்டர் 5 விக்கெட்டுகளையும், கார்ன்வால் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

மே.இ.தீவுகள் திணறல்

இதையடுத்து, பிற்பகலுக்கு பின் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. பும்ரா, இசாந்த் சர்மா, ஷமி ஆகியோரின் கூட்டணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பேட்ஸ்மேன்கள் திணறினர்.

பும்ரா வீசிய 7-வது ஓவரில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து கேம்பெல் 2 ரன்னில் வெளியேறினார். 9-வது ஓவரை பும்ரா வீசியபோதுதான் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார்.

9-வது ஓவரின் 2-வது பந்தில் பிராவோ அடித்த பந்து 2-வது ஸ்லிப்பில் இருந்த ராகுலிடம் கேட்ச்சாக மாறியது. 3-வது பந்தில் புரூக்ஸ் கால்காப்பில் வாங்கி டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சேஸ், பும்ரா வீசிய 4-வது பந்தை கால்காப்பில் வாங்கினார். இதற்கு நடுவர் அவுட் வழங்காததையடுத்து, டிஆர்எஸ் முறையில் அப்பீல் செய்தார் கேப்டன் கோலி.

டிஆர்எஸ் முறையில் அவுட் வழங்கவே பும்ரா ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். 13 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மே.இ.தீவுகள் அணி திணறியது.

மே.இ.தீவுகள் சார்பில் 5 விக்கெட் வீழ்த்திய ஹோல்டர் : படவிளக்கம்

பிராத்வெய்டுடன், அடுத்துவந்த ஹெட்மயர் இணைந்தார். இந்தக் கூட்டணியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பிராத்வெய்ட் 10 ரன்கள் சேர்த்த நிலையில், பும்ரா பந்துவீச்சில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

22 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மே.இ.தீவுகள் அணி தடுமாறியது. 6-வது விக்கெட்டுக்கு ஹெட்மயர், ஹோல்டர் ஓரளவுக்கு நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். ஹெட்மயர் 34 ரன்கள் சேர்த்தபோது, ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் சேர்ந்து 43 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்த சிறிது நேரத்தில் ஹோல்டர் 18 ரன் சேர்த்திருந்தபோது பும்ரா பந்துவீச்சில் மிட்ஆப் திசையில் தூக்கி அடிக்க பந்து ரோஹித் சர்மாவிடம் தஞ்சமடைந்ததால் வெளியேறினார்.

ஹேமில்டன் 2 ரன்னிலும், கார்ன்வால் 4 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். மேற்கிந்தியத் தீவுகள் அணி 33 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் சேர்த்திருந்தது.

போத்தி ராஜ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்