ராகுல் திராவிட்டுக்குப் பதிலாக இந்தியா ஏ, 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமனம்

புதுடெல்லி,

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் நியமிக்கப்பட்டதால், அவர் வகித்துவந்த இந்தியா ஏ மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிகளின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன

ஐசிசி தகவலின்படி, இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராக சிதான்சு கோடக்கும், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளராக பராஸ் பாம்ரேயும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இவர்கள் அடுத்த சிலமாதங்களுக்கு மட்டும்தான் பதவியில் இருப்பார்கள் எனத் தெரிகிறது.

சவுராஷ்டிராவைச் சேர்ந்த பேட்ஸ்மேனான சிதான்சு கோடக், இந்தியா ஏ அணிக்கு தலைமைப் பயிற்சியாளராகவும், பேட்டிங் பயிற்சியாளராகவும் செயல்பட உள்ளார். இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரமேஷ் பவார் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும், டி திலிப் பீல்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

130 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள 46 வயதான கோடக்கின் பேட்டிங் சராசரி 41 ரன்களாகவும், 70 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

அதேபோல இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பாம்ரே இந்தியா ஏ அணி மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியிலும் ராகுல் திராவிட்டிடம் இணைந்து நீண்ட நாட்கள் பணியாற்றிய அனுபவம் உடையவர். செப்டம்பர் மாதம் கொழும்புவில் நடக்க இருக்கும் ஆசியக் கோப்பையிலும் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்குத் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாம்ரேவுக்குத் துணையாக இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ரிஷிகேஷ் கனிட்கரும், அபேய் சர்மாவும் செயல்படுவார்கள். விக்கெட் கீப்பரான அபே சர்மா பேட்டிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராகவும் செயல்படுவார்

ஐஏஎன்எஸ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE