இந்திய அணி இமாலய வெற்றி: பும்ரா 7 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்;100 ரன்களில் சுருண்டது மே.இ.தீவுகள்: ரஹானே பிரமாத சதம்

By க.போத்திராஜ்

நார்த் சவுண்ட்,

பும்ராவின் துல்லியமான, நெருக்கடி தரும் பந்து வீச்சு, 2 ஆண்டுகளுக்குப்பின் ரஹானேயின் அற்புதமான சதம் ஆகியவற்றால் ஆன்டிகுவாவில் நடந்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 8 ஓவர்கள் வீசி 4 மெய்டன் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பும்ரா சாதனை

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள் ஆகிய நாடுகளில் அந்நாட்டு அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிய அணிகளில் முதல் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா என்ற பெருமையைப் பெற்றார்.

419 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 26.5 ஓவர்களில் 100 ரன்களில் சுருண்டு 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது.

மே.இ.தீவுகள் அணியில் சேஸ்(12), ரோச்(38), கம்மின்ஸ்(19) ஆகிய மூவரைத் தவிர மற்ற முன்னனி பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தது பரிதாபம்.

மிகப்பெரிய வெற்றி

இந்த வெற்றி டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பெற்ற 4-வது மிகப்பெரிய வெற்றியாகும். அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இந்திய அணி மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் பெறும் முதல் வெற்றி இதுவாகும்.

இதன் மூலம், இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் 60 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இரு டெஸ்ட் போட்டிகளுக்கு 120 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதில் 60 புள்ளிகளை இந்திய அணி பெற்றுள்ளது.

இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு முக்கியக் காரணமாக துணைக் கேப்டன் ராஹனே, ஹனுமா விஹாரி இருவரின் பேட்டிங் இருந்தது. ராஹனே 2 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார். ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

கடந்த 2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்த நிலையில் இப்போது சதம் அடித்து டெஸ்ட் போட்டிகளில் தனது 10-வது சதமாக அதை அமைத்தார். ராஹனேவுக்கு உறுதுணையாக பேட் செய்த ஹனுமா விஹாரி 93 ரன்களில் ஆட்டமிழந்து முதல் சதத்தை தவறவிட்டார்.

கங்குலி சாதனை முறியடிப்பு

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வெளிநாடுகளில் அதிக டெஸ்ட் போட்டியில் வென்ற அடிப்படையில் கங்குலியின் 11 வெற்றிகளை முறியடித்தார். அதேபோல, கேப்டனாக இருந்த அதிக வெற்றிகளைக் குவித்தவகையில் தோனியின் 27 வெற்றிகளை கோலி சமன் செய்துள்ளார்.

ஆன்டிகுவாவில் இந்திய, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடந்தது. டாஸ்வென்ற மே.இ.தீவுகள் அணி பீல்டிங் செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 297 ரன்களும், மே.இ.தீவுகள் அணி 222 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.

மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்கில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்திருந்து. இந்திய 260 ரன்கள் முன்னிலையுடன் ஆடி வந்தது.ரஹானே 53 ரன்களிலும், கோலி 51 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 4-வது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் சிறிதுநேரத்தில் சேஸ் பந்துவீச்சில் கோலி 51 ரன்னில் போல்டாகினார். இருவரும் சேர்ந்து 4-வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்துப்பிரிந்தனர்.

அடுத்துவந்த ஹனுமா விஹாரி, ரஹானேயுடன் சேர்ந்தார். இருவரும் சேர்ந்து மே.இ.தீவுகள் அணி வீரர்களின் பந்துவீச்சை அனாசயமாக எதிர்கொண்டு விளையாடினர். பவுண்டரிகளாக விளாசிய விஹாரி 77 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
நிதானமாக விளையாடி வந்த ரஹானே டெஸ்ட் போட்டியில் 2 ஆண்டுகளுக்குப்பி்ன் தனது 10-வது சதத்தை பதிவு செய்தார். ரஹானே 102 ரன்கள் சேர்த்த நிலையில் கேப்ரியல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 5 பவுண்டரிகள் மட்டுமே அடங்கும். 5-வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 135 ரன்கள் சேர்த்தனர்.


அடுத்துவந்த ரிஷப்பந்த் இந்த முறையும் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். சிறப்பாக ஆடிய விஹாரி 7 ரன்னில் சதத்தை தவறவிட்டு 93 ரன்னில் ஆட்டமிழந்தார். 112.3 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ஏற்கனவே இந்திய அணி 75 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால், மே.இ.தீவுகள் அணிக்கு வெற்றி இலக்காக 419 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

பும்ரா மிரட்டல்

419 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் மே.இ.தீவுகள் அணி களமிறங்கியது. பிராத்வெய்ட், கேம்பெல் ஆட்டத்தைத் தொடங்கினர். பும்ரா தான் வீசிய முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்தினார். 'அவுட்ஸவிங்கில்' அந்த பந்தை பிராத்வெய்ட் லேசாக தொட்டுவிட அது ரிஷப்பந்த் கைகளில் தஞ்சமடைந்தது. பிராத்வெய்ட் ஒருரன்னில் வெளியேறினார்.

4-வது ஓவரை பும்ரா வீசினார். இடதுகை பேட்ஸ்மேன் கேம்பெல் பந்தை 'ஸ்ட்ரைட் டிரைவ்' ஆட முயற்சித்தார். ஆனால், பந்து பேட்டுக்கும், அவரின் காலுக்கும் இடையே சென்று 'ஆப் ஸ்டெம்பை' தூக்கி எறிந்தது. 7ரன்னில் கேம்பெல் ஆட்டமிழந்தார்
இசாந்த் சர்மா வீசிய 5-வது ஓவரில் புரூக்ஸ் 2 ரன்னில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். இசாந்த் சர்மா வீசிய 7-வது ஓவரில் ஹெட்மயர் அடித்த பந்தை மூன்றாவது ஸ்லிப்பில் இருந்த ரஹானே கேட்ச் பிடித்து ஒரு ரன்னில் வெளியேற்றினார்.

8-வது ஓவரை பும்ரா வீசினார். கேம்பெல் ஆட்டமிழந்தது போன்றே பிராவோவும் போல்டாகினார். 'ஆப் சைடு' வந்த பந்தை 'ஸ்ட்ரைட் டிரைவ்' ஆட முயன்றார் ஆனால், பந்து ஸ்விங் ஆகி ஸ்டெம்பை பதம் பார்த்தது. பிராவோ ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

15 ரன்களுக்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து மே.இ.தீவுகள் அணி தடுமாறியது. அடுத்துவந்த ஷாய் ஹோப்(2), ஹோல்டர்(8) ஆகியோரும் பும்ரா வேகத்தில் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தனர், சேஸ், கேப்ரியல் விக்கெட்டை ஷமி வீழ்த்த, 50 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து மே.இ.தீவுகள் அணி தடுமாறியது. 9-வது விக்கெட்டுக்கு கம்மின்ஸ்(19), ரோச்(38) ஆகியோர் ஓரளவுக்கு நிலைத்து 50 ரன்கள் சேர்த்தனர். ரோச் 38 ரன்னில் இசாந்த் சர்மா பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

26.5 ஓவர்களில் 100 ரன்னில் மே.இ.தீவுகள் அணி ஆட்டமிழந்து 318 ரன்னில் தோல்வி அடைந்தது. பும்ரா 8 ஓவர்கள் வீசி 4 மெய்டன், 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இசாந்த்சர்மா 3 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போத்திராஜ்

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

20 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்