‘ஒயிட்  வாஷ்’ - தீபக் சாஹர், பந்த், கோலி அபாரம்: இந்திய அணி 3-0 வெற்றி

இந்த டி20 தொடரில் முதல் முறையாக மே.இ.தீவுகள் பேட்ஸ்மென்கள் ஓரளவுக்கு ரன்களை எடுத்த போதும், கோலி, பந்த் அரைசதங்கள், தீபக் சாஹர் பந்து வீச்சினால் 3-0 என்ற ஒயிட் வாஷை தவிர்க்க முடியவில்லை.

புராவிடன்ஸில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இந்தப் பிட்ச் மட்டைப் பிட்ச், இது 200 ரன் பிட்ச். இதில் 146 ரன்கள் நிச்சயம் போதாது.

தீபக் சாஹர் மிகப்பிரமாதமான ஒரு பந்து வீச்சில் பந்துகளை ஸ்விங் செய்தார், இரண்டு இன்ஸ்விங்கரில் எவின் லூயிஸ், ஹெட்மையரை எல்.பி. செய்து வெளியேற்ற சுனில் நரைனை மட்டையைச் சுழற்ற விடாமல் வெறுப்பேற்றி கடைசியில் அவர் சைனியிடம் கேட்ச் கொடுத்து 2 ரன்களில் தீபக் சாஹரிடம் வீழ்ந்தார். சாஹர் 3 ஓவர் 1 மெய்டன் 4 ரன்கள் 3 விக்கெட் என்று அசத்த மே.இ.தீவுகள் தொடக்கத்திலேயே 14/3 என்று தடுமாறியது. பிறகு பொலார்ட் அதிரடி அரைசதம் பொவெலின் 32 ரன்களுடன் 20 ஒவர்களில் 146/6 என்று முடிந்தது

தொடர்ந்து ஆடிய இந்திய அணி ரிஷப் பந்த்(65), விராட் கோலி (59) ஆகியோரது தொழில்நேர்த்தியான ஆட்டத்தில் 19.1 ஓவர்களில் 150/3 என்று வெற்றி பெற்று மே.இ.தீவுகளை ஒயிட்வாஷ் செய்தது.

தீபக் சாஹர் முதலில் மே.இ.தீவுகளை 14/3 என்று குறுக்கியதாலும் பிட்ச் ஸ்பின்னுக்கு சற்றே உதவியதாலும் மே.இ.தீவுகள் தங்கள் விருப்பத்துக்கு ரன் குவிப்பில் ஈடுபட முடியவில்லை. எவின் லூயிஸ் ஒரு ரிவியூவையும் காலி செய்திருந்தார்.

அதன் பிறகு பொலார்ட் இறங்கினார் தனது மெஜஸ்டிக் பவர் ஹிட்டிங்கினால் சிறிய பவுண்டரிகளை அதை விடச் சிறியதாக தெரியச் செய்தார். 6 சிக்சர்கள் ஒரேயொரு பவுண்டரிதான் அடித்த பொலார்ட் 45 பந்துகளில் 58 ரன்கள் என்று பின்னி எடுத்தார். நிகோலஸ் பூரன் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 17 ரன்களை 23 பந்துகளில் எடுக்க இருவரும் சேர்ந்து 4வது விக்கெட்டுக்காக 9 ஓவர்களில் 60 ரன்களைச் சேர்த்தனர்.

58 ரன்கள் எடுத்த கிரன் பொலார்ட் , நவ்தீப் சைனியின் சமயோசித ஃபுல் லெந்த் ஸ்லோ பந்தில் பவுல்டு ஆனார். ரோவ்மன் போவல், 2வது போட்டியில் உரித்து எடுத்த அரைசத மனநிலையின் தொடர்ச்சியாக இறங்கி 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 20 பந்துகளில் 32 விளாசி சிறு அதிரடியில் மைதானத்தின் சிறு ரசிக கும்பலை திருப்தி செய்தார் மே.இ.தீவுகளும் 140 ரன்களைக் கடந்தது. ராகுல் சாஹர் 3 ஒவர் 27 ரன்கள் 1 விக்கெட், குருணால் பாண்டியா 4 ஓவர்களில் 35 ரன்கள் என்று சொதப்பினார்.

147 ரன்கள் இலக்கை எதிர்த்து களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் அதிரடி தொடக்கம் கொடுத்தார், 2 பவுண்டரி 1 சிக்சருடன் 18 பந்துகளில் 20 எடுத்த ராகுல், ஆலன் பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்று ஆக்ரோஷம் காட்டி தோற்றார், ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார், முன்னதாக ஷிகர் தவண் மீண்டும் ஒரு சொதப்பலில் ஆகச்சுலபமான பந்தை ஆகச்சுலபமாக ஷார்ட் பைன் லெக்கில் கேட்ச் கொடுத்து 3 ரன்களில் வெளியேறினார்.

இவர்கள் இருவரும் போன பிறகு 27/2 என்ற நிலையில் கோலி, ரிஷப் பந்த் இணைந்தனர், கோலி விரட்டலை கட்டுக்கோப்புடன் கொண்டு சென்றார் ஆனால் அவரது பேட்டிங் சரளமாக இல்லை. ரிஷப் பந்த் சில திகைப்பூட்டும் ஷாட்களை அவருக்கேயுரிய அனாயாசத்தன்மையுடன் ஆடினார். இருமுறை எக்ஸ்ட்ராகவரில் தூக்கி அடித்த ஷாட், ரிவர்ஸ் ஸ்வீப், பிறகு ஒரு அலட்சியமான பிளிக் சிக்ஸ் என்று அவரது ஷாட்கள் வேறு விதமாக அமைந்தன.

விராட் கோலி தன் ரிஸ்டைப் பயன்படுத்தி சிலபல அருமையான பவுண்டரிகளை அடித்தார். 6 பவுண்டரிகளுடன் அவர் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், ரிஷப் பந்த் 4 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 65 நாட் அவுட். இருவரும் சேர்ந்து 12.5 ஓவர்களில் 106 ரன்களைச் சேர்த்தனர். கோலிக்கு ஒருமுறை பந்து மட்டையில் பட்டு ஸ்டம்பில் பட்டது ஆனால் பைல்கள் விழவில்லை. கடைசி 5 ஒவர்களில் 55 ரன்கள் விளாசப்பட்டது, இருவரும் சுலபமான இலக்கை சுலபமான பிட்சில் மிகச் சுலபமாக ஆடி வெற்றியை ஈட்டினர். மே.இ.தீவுகள் தரப்பில் ஒஷேன் தாமஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சுனில் நரைன் 29 ரன்களுக்கு விக்கெட் இல்லை.

ஆட்ட நாயகன் தீபக் சாஹர், தொடர் நாயகன் குருணால் பாண்டியா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE