ஆம், நாம் பொறுமை இழந்து விடுவோம்; அணித்தேர்வு நம் கைகளில் இல்லையே: ஷ்ரேயஸ் அய்யர் மனம் திறப்பு

54 முதல்தரப் போட்டிகளில் ஷ்ரேயஸ் அய்யரின் சராசரி 52.18. லிஸ்ட் ஏ ஒருநாள் போட்டிகளில் ஆரோக்கியமான 42.93 என்ற சராசரி. ஆனாலும் 4ம் நிலைக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்திய அணிக்கு ஷ்ரேயஸ் அய்யர் தேர்வு செய்யப்படவில்லை. 

2019 உலகக்கோப்பையில் தான் தேர்வாவதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு என்பது தனக்குத் தெரிந்தாலும் அடுத்த உலகக்கோப்பையை எதிர்நோக்குவதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் பிடிஐக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் கூறியிருப்பதாவது:

உண்மையான திறமை மிக்க வீரர்கள் பெரிய மட்டத்தில் தங்களை நிரூபிக்க கணிசமான வாய்ப்புகள் வழங்க வேண்டும்.  அணிக்குள் வருவதும், போவதுமாக இருந்தால் அது ஒருவரின் தன்னம்பிக்கைக்கு உதவாது. அதாவது நம் மீதே நாம் நம்பிக்கை இழந்து விடுவோம், இது மோசமானது. எனவே பெரிய திறமை என்றாலும் நிரூபிக்க கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும். 

ஆம் நாம் நம் பொறுமையை இழந்து விடுவோம், ஆனால் அணியில் தேர்வாவது என்பது நம் முடிவுக்கு அப்பாற்பட்ட ஒன்று. நாம் செய்ய முடிவதெல்லாம் திறமையை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே, அயராது ஆடிக்கொண்டே இருப்பதுதான். இதைச் செய்வது எனக்கு பிடிக்கும். 

ஆம் உலகக்கோப்பைக்கு முன்னதாக என்னைப்பற்றிய செய்திகள் எழுந்தன, நானும் கடின உழைப்பையும் இட்டேன், சாமர்த்திய உழைப்பையும் இட்டேன். ஆனால் இவை எனக்கு எதிர்காலத்தில் உதவும். 

தேர்வாகாமல் இருப்பது கடினம். என் நாட்டுக்காக உலகக்கோப்பையில் ஆடுவது என் கனவு. சில  வாய்ப்புகளே உள்ளன என்பது எனக்குத் தெரியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அணிச்சேர்க்கை விதம் எனக்கான தேவையை உருவாக்கவில்லை. 

நான் தன்னம்பிக்கையுடனும் உயர் உணர்வுடனும் இருப்பவன். அகத்தில் இது உண்மையில் என்னை தொந்தரவு செய்யவில்லை. உலகக்கோப்பை ஆடுவது கனவு நிச்சயம் அடுத்த உலகக்கோப்பையில் ஆடுவேன்

இந்தியாவுக்கு வெளியே ஸ்வீப் ஷாட், புல்ஷாட் பெரிய அளவில் கை கொடுக்கும். இந்த 2 ஷாட்கள் உடனடியாக பவுலர்கள் மீது நெருக்கடியை அதிகரிக்கும்.  இந்திய ஏ தொடர் எனக்கு மே.இ.தீவுகள் பற்றி அதிகம் அறிய உதவியது.

இவ்வாறு கூறினார் ஷ்ரேயஸ் அய்யர்.- 

- பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE