ஹர்பஜனுக்கு கேல் ரத்னா விருது, தடகள வீராங்கனை டூட்டி சந்த்துக்கு அர்ஜுனா விருது பரிந்துரை நிராகரிப்பு

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீ்ச்சாளர் ஹர்பஜன் சிங் விளையாட்டில் உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கும், தடகள வீராங்கனை டூட்டி சந்த் அர்ஜுனா விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அந்த பரிந்துரைகளை மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய விளையாட்டு ஆணையம் வட்டாரங்கள் சார்பில் நிருபர்களிடம் கூறுகையில், " தடகள வீராங்கனை டூட்டி சந்த்துக்கு அர்ஜுனா விருது அளிக்கும் பரிந்துரையை ஒடிசா அரசு இறுதிகாலக்கெடு முடிந்தபின் நீண்டநாட்களுக்கு பிறகு விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியதால்தான் அவரின் பெயர் நிராகரிக்கப்பட்டது. டூட்டி சந்த் விவகாரத்தில் அவர் பெற்ற பதக்கங்கள் குறித்து எந்தவிதமான தகவலும் இல்லை.  இதுதொடர்பாக இந்திய தடகள சம்மேளனத்திடம் கேட்டபோது, சந்த்தின் பெயர் 5-வது இடத்தில் இருந்ததால், அவரின் பெயர் நிராகரிக்கப்பட்டது" எனத் தெரிவித்தனர்

இதற்கிடையே முதல்வர் நவின் பட்நாயக்கை சந்தித்த தடகள வீராங்கனை டூட்டி சந்த் தன்னுடைய கோப்புகளை மீண்டும் விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்ப கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக டூட்டி சந்த் நிருபர்களிடம் கூறுகையில், " நபோளியில் பல்கலைக்கழக தடகளப் போட்டியில் நான் பெற்ற தங்கப்பதக்கத்தை முதல்வர் நவின் பட்நாயக்கிடம் காண்பித்தேன். மீண்டும் என்னுடைய கோப்புகளை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்தேன். என்னைக் கவலைப்பட வேண்டாம், அர்ஜுனா விருதுக்கு மீண்டும் அரசு சார்பில் உங்களை பரிந்துரைப்போம் என உறுதியளித்தார் " எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) சார்பில் அர்ஜுனா விருதுக்கு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா, வீராங்கனை பூணம் யாதவ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால், கேல் ரத்னா விருதுக்கு பிசிசிஐ சார்பில் எந்த வீரரும் பெயரும்பரிந்துரைக்கப்படவில்லை. 

ஆனால், பஞ்சாப் அரசு சார்பில் கேல் ரத்னா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. விருதுக்கு பரிந்துரைக்கும் பெயரை அனுப்பும் கடைசித் தேதி ஏப்ரல் 30-ம் தேதி முடிந்தநிலையில், ஜூன் 25-ம் தேதி பஞ்சாப் அரசு அனுப்பியதால், ஹர்பஜன் சிங் பெயரும் நிராகரிக்கப்பட்டது.

ஏஎன்ஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE