டாப்ஆர்டர் காட்டடி: மே.இ.தீவுகள் ஏ அணியை  17 ஓவர்கள் மீதமிருக்கும்போதே வென்ற இந்தியா ஏ அணி

 

ஆன்டிகுவா, பிடிஐ

 

ஸ்ரேயாஸ் அய்யர், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில் ஆகியோரின் காட்டடி பேட்டிங்கால், ஆன்டிகுவாவில் நேற்று நடந்த மே.இ.தீவுகள் ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா ஏ அணி.

 

இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய ஏ அணி கைப்பற்றியது

 

இந்திய அணி சார்பில் சிறப்பாக பேட் செய்த கெய்க்வாட் 99 ரன்களும், சுப்மான் கில் 69 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். ஸ்ரேயாஸ் அய்யர் 61 ரன்கள் சேர்தது இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய வீரர்களில் ராகுல் சாஹர், தீபக் சாஹர், நவ்தீப் சைனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் ஏ அணி 47.4 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆட்டமழந்தது. 237 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 17 ஓவர்கள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 237 ரன்கள் சேர்த்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

 

மேற்கிந்தியத்தீவுகளுக்கு பயணம் செய்து இந்திய ஏ அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் இந்திய ஏ அணி முன்னணியில் இருந்த நிலையில் நேற்று கடைசி மற்றும் 5-வது ஆட்டம் நடந்தது.

 

டாஸ் வென்ற மே.இதீவுகள் ஏ அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் அம்பரிஸ், ஓட்லே இருவரும் முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஆனால், அதன்பின் இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மே.இ.தீவுகள் பேட்ஸ்மேன் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர்

 

77 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த மே.இ.தீவுகள் ஏ அணி, அடுத்த 26 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் அம்பரிஸ் 61 ரன்களும், ரூதர்போர்ட் 65 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

 

35 ரன்கள் சேர்த்து பியரி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 47.4 ஓவர்களில் 236 ரன்களுக்குள் மே.இ.தீவுகள் ஏ அணி ஆட்டமிழந்தது.

 

237 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய ஏ அணி களமிறங்கியது. முதல்விக்கெட்டுக்கு கில், கெய்க்வாட் நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். அதிரடியாக ஆடிய கில் 69 ரன்கள் சேர்த்து ராஹிம் கான்வால் ஓவரில் ஆட்டமிழந்தார். இதில் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும்.  முதல் விக்கெட்டுக்கு இருவரும் 110 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கி, கெய்க்வாட்டுடன் இணைந்தார். இருவரும் மே.இ.தீவுகள் வீரர்களின் பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்து அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர்.

வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கெய்க்வாட் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டு 99 ரன்னில் ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடங்கும்.

2-வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 112 ரன்கள் சேர்த்தனர். ஸ்ரேயாஸ் அய்யர் 61 ரன்களிலும், மயங்க் அகர்வால் 7 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். 33 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 237 ரன்கள் சேர்த்து இந்திய அணி வென்றது.

 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE