தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நீக்கம், சாஹாவுக்கு வாய்ப்பு: மே.இ.தீவுகள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு  

 

மும்பை, ஏஎன்ஐ

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட்தொடருக்கான இந்தியஅணி இன்று அறிவிக்கப்பட்டது.

உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் நீக்கப்பட்டனர், டெஸ்ட் போட்டிக்கு விருதிமான் சாஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டியில் வேகப்பந்துவீச்சில் முக்கிய பங்காற்றிய ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஒருநாள், டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு டெஸ்ட் போட்டிக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியாவுக்கு முற்றிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்  டி20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

150 கி.மீ வேகத்தில் பந்துவீசக்கூடிய  புதுமுகமாக வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி டி20, ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ளார். மேலும், தீபக் சாஹர், ராகுல் சாஹர் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விக்கெட் கீப்பர் தோனி 2 மாதங்கள் ராணுவ பணிக்கு செல்ல விருப்பம் தெரிவித்ததால், அவரின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை.

இந்திய-மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே அமெரிக்கா மற்றும் மே.இ.தீவுகளில் தலா 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் ஆகஸ்ட் மாதம் நடக்கின்றன. 

 

ஒருநாள் தொடர் ஆக. 8-இல் தொடங்குகி, 11-ம் தேதி 2-வது போட்டியும், 14-ம் தேதி மூன்றாவது ஆட்டமும் நடக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் ஆக. 22-இல் தொடங்குகிறது.  முதல் ஆட்டம் ஆன்டிகுவாவிலும் 30-ம் தேதி 2-வது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனிலும் நடக்கிறது.

முதலில் 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடரில், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் ஆகஸ்டு 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் முதல் இரு போட்டிகள் நடக்கின்றன. அதன்பின் மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டம் கயானாவில் ஆகஸ்டு 6-ம் தேதி நடக்கிறது

இதற்கான அணியை தேர்வு செய்ய மத்திய தேர்வாளர் குழு ஜூலை 19-ஆம் தேதி மும்பையில் கூட உள்ளதாக பிசிசிஐ ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டு இன்று மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் அணித் தேர்வு நடந்தது.

தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் தலைமையில் தேர்வுக்குழுவினர் இந்தியஅணியை அறிவித்தனர். கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதன்படி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டது. இதில் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக 150கி.மீ வேகத்தில் பந்துவீசக்கூடிய நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டியில் இடம் பெற்ற தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார், கணுக்கால் காயத்தில் இருந்து விஜய் சங்கர் குணமடையாததால், அவரும் சேர்க்கப்படவில்லை.  ஹர்திக் பாண்டியாவுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவ், சாஹல் இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், 4-வது இடத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஸ்ரேயாஸ் அய்யர் தேர்வு செய்யப்பட்டுள்ளார், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரமும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டி20 போட்டிக்கான அணி விவரம்:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த், குர்னால் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி,

3 போட்டிகளுக்கான ஒருநாள் தொடரிலும் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கும், ஹர்திக் பாண்டியாவுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், கேதார் ஜாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி.

டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரவிந்சந்திர அஸ்வின், ரஹானே, வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், சட்டேஸ்வர் புஜாரா, மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெஸ்ட் போட்டிக்கான அணி:

விராட் கோலி(கேப்டன்), ரஹானே, மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், சத்தீஸ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, ரோஹித் சர்மா, ஆர்.அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இசாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், விருதிமான் சாஹா, ரிஷப் பந்த்

 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE