ஒரு பந்துக்கு குறைந்தது 4 ஷாட்களை வைத்துள்ள ஒரே பேட்ஸ்மென் டிவிலியர்ஸ்- லஷ்மண் புகழாரம்

நவீன கிரிக்கெட் உலகில் முழுநிறைவான பேட்ஸ்மென் ஒருவர் உண்டு என்றால் அது தென் ஆப்பிரிக்காவின் ஏ.பி.டிவிலியர்ஸ் என்று இந்திய முன்னாள் பேட்ஸ்மென் வி.வி.எஸ். லஷ்மண் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து லஷ்மண் கூறியதாவது:

சந்தேகமில்லாமல் டிவிலியர்ஸ் ஒரு முழுமையடைந்த பேட்ஸ்மென் தான். கிளென் மேக்ஸ்வெல் அவருக்கு அருகில் இருக்கிறார். ஒரு பந்துக்கு 3 அல்லது 4 ஷாட்களை கைவசம் வைத்துள்ள வீரர் டிவிலியர்ஸ். அவர் பேட்டிங் செய்யும்போது அவரால் முடியாதது எதுவும் இல்லை என்று தோன்றும் அளவுக்கு பேட்டிங்கில் அசத்துகிறார்.

அவர் தன் கால்களை நகர்த்துவதிலும், விரைவாக முடிவு எடுப்பதிலும் வல்லவராகத் திகழ்கிறார். அவர் விளையாடும் பல அரிய ஷாட்களுக்கு விரைவாகச் சிந்தித்து முடிவெடுக்கும் மனநிலை வேண்டும். அதனை டிவிலியர்ஸ் சொத்தைப் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மட்டுமல்ல சிறந்த பந்து வீச்சையும் அவர் இவ்வாறு எதிர்கொள்கிறார்.

ஆக்ரோஷமாக ஆடி ஆட்டத்தை தனி நபராக தன் அணியின் பக்கம் திருப்பும் அதே வேளையில் அவர் ஆக்ரோஷத்தைத் தணித்துக் கொண்டு அணிக்காக நல்ல இன்னிங்ஸை ஆடுவதிலும் சிறப்பாகத் திகழ்கிறார். இதனால்தான் அவர் ஒரு முழுமையடைந்த கிரிக்கெட் வீரர் என்கிறேன்.

எனக்கு அவரை தனிப்பட்ட அளவில் தெரியாது. ஆனால் அவர் பேட்டிங் செய்வதைப் பார்க்கும்போது ஆட்டத்தின் குறிப்பிட்ட சூழலில் அவர் பிரத்யேகமாக ஒரு தீர்வை வைத்துள்ளார். இது அவருக்குக் கைகூடிவருகிறது.

தோனிக்குப் புகழாரம்:

தோனியின் வெற்றிக்குக்காரணம் அவரது பொறுமை மற்றும் சூழ்நிலை குறித்த அவரது விழிப்புணர்வு ஆகியவை ஆகும். ஒரு பேட்ஸ்மெனாகவும், கேப்டனாகவும் குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன செய்யவேண்டும் என்பதை அவர் சரியாகச் செய்து வருகிறார். திறமைகள் இருக்கலாம் நல்ல உத்திகள் இருக்கலாம் ஆனால் எந்த சூழ்நிலையில் என்ன செய்யவேண்டும் என்பதை தோனி சிறப்பாகச் செய்து வருகிறார்.

தோனி முதலில் களமிறங்கும்போது ஒருமாதிரி ஆடுகிறார். பின்னால் நெருக்கடியில் களமிறங்கும்போது வேறுமாதிரி ஆடுகிறார். இதுதான் சூழ்நிலை குறித்த அவரது கவனம்.

முதலில் அவர் ஒற்றைப் பரிமாண வீரராகவே இருந்தார். ஆனால் இப்போது அவர் ஒரு ஆல்ரவுண்ட் பிளேயராகத் திகழ்கிறார்.

என்று தோனியைப் பற்றியும் லஷ்மண் பாராட்டிப்பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE