சிட்டகாங்கில் நடைபெற்ற 3-வதும், கடைசியுமான ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி தென் ஆப்பிரிக்காவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஊதித் தள்ளியது. இதன் மூலம் ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது வங்கதேசம்.
எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும் எங்கள் ஊருக்கு வந்தால் நாறிப்போக வேண்டியதுதான் என்பதே வங்கதேசத்தின் தாரக மந்திரமாக அமைந்துள்ளது. நியூசிலாந்து முதன் முதலாக 4-0 என்று ஒரு தொடர் முழுதும் உதைவாங்கிச் சென்று தொடங்கி வைத்தது. அதன் பிறகு ஜிம்பாப்வே, பாகிஸ்தான், இந்தியா, தற்போது தென் ஆப்பிரிக்காவையும் தங்கள் சொந்த மண்ணில் வீழ்த்தியது வங்கதேசம்.
40 ஓவர்களுக்கு குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து மீண்டுமொரு வங்கதேச சிக்கன மற்றும் நெருக்குதல் பந்துவீச்சுக்கு முன் ஒன்றும் செய்ய முடியாமல் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்களையே எடுத்தது. டுமினி அதிகபட்சமாக 51 ரன்களையும், டேவிட் மில்லர் அதிகபட்சமாக 44 ரன்களையும் எடுத்தனர். ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளையும், முஸ்தபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும், ரூபல் ஹுசைன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்,
தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 26.1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து அனாயாசமாக ஊதித்தள்ளியது. தமிம் இக்பால் 61 நாட் அவுட், மீண்டும் சவுமியா சர்க்கார் 75 பந்துகளில் 13 பவுண்டரி 1 சிக்சருடன் 90 ரன்கள் எடுத்து கடைசியில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளைத் தட்டிச் சென்றார். தென் ஆப்பிரிக்காவின் அனைத்து பவுலர்களும் ஓவருக்கு 6 ரன்கள் வீதம் விட்டுக் கொடுத்தனர் என்பது வங்கதேச பேட்ஸ்மென்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறது.
குவிண்டன் டி காக், முஸ்தபிசுர் ரஹ்மானின் அபாரமான பந்துக்கு லெக் ஸ்டம்பை இழந்தார். ஹஷிம் ஆம்லா, டுபிளெஸ்ஸிஸ் ஆகியோரின் பேட்டிங் திறனை ஷாகிப் அல் ஹசன் கேள்விக்குட்படுத்தினார். கடைசியில் அடித்துப் பார்க்கலாம் என்று நினைத்த டுபிளெஸ்ஸிஸ் டாப் எட்ஜில் அவுட் ஆனார். ஷாகிப் அல் ஹசன் பிறகு ஆம்லாவையும் எட்ஜ் செய்ய வைத்து தனது 200-வது ஒருநாள் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
ரைலி ரூசோவ், மஹமுதுல்லா பந்தை புல் ஆட முயன்று பேலன்ஸ் இழந்தார். இதனால் கேட்ச் ஆனது. தென் ஆப்பிரிக்கா உடனே 50/4 என்று ஆனது.
மில்லர், டுமினி ஆட்டத்தை தங்கள் இஷ்டத்துக்கு ஆட முடியாது என்பதை உணர்ந்தனர். தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்கோர் 23 ஓவர்களில் 78/4 என்று இருந்த போது மழை வரத் தொடங்கியது. சுமார் இரண்டரை மணி நேரம் மழை பெயதது.
மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது டேவிட் மில்லர் கொஞ்சம் ஆக்ரோஷம் காட்டினார். கடைசியில் மோர்டசா பந்தை அடிக்க முயன்று பேக்வர்ட் பாயிண்டில் சபீரின் அருமையான கேட்சுக்கு அவுட் ஆனார். இது மஷ்ரபே மோர்டசாவின் 200-வது ஒருநாள் போட்டி விக்கெட்டாகும்.
ஃபர்ஹான் பெஹார்டீன் 12 ரன்கள் எடுத்து ஷாகிப் பந்தை தூக்கி அடித்தார். லாங் ஆனில் சபீர் அதனை பிடித்தார். ஆனால் தான் எல்லைக்கோட்டைத் தாண்டி விடுவோம் என்று உணர்ந்த அவர் பந்தை இங்கேயே தூக்கி வானில் எறிந்து விட்டு பிறகு மீண்டும் உள்ளே வந்து கேட்சைப் பிடித்தார்.
இதன் பிறகு டுமினி, பின்வரிசை வீரர்களுடன் விடப்பட்டார். இவர்களால் முஸ்தபிசுர் ரஹ்மானின் கட்டர்களையும், ரூபல் ஹுசைனின் யார்க்கர்களையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அடுத்த 19 ரன்களில் 4 விக்கெட்டுகள் மடிய தென் ஆப்பிரிக்கா 168 ரன்களையே எடுக்க முடிந்தது.
170 ரன்கள் இலக்கை எதிர்த்து களமிறங்கிய வங்கதேசம், தென் ஆப்பிரிக்க தொடக்க வேகப்பந்து வீச்சாளர்களான கைலி அபாட், ரபாதா ஆகியோரின் நேர் பந்துகளையும், ஒன்று ஷார்ட் பிட்ச் அல்லது ஃபுல் பந்துகளாக வந்ததையும் சுலபத்தில் எதிர்கொண்டனர்.
ரபாதாவை 3 லெக் திசை பவுண்டரிகள் அடித்த சவுமியா சர்க்காரின் ஆக்ரோஷத்தினால் வங்கதேசம் 8-வது ஓவரில் 50 ரன்களை எட்டியது. ஸ்பின்னர் இம்ரான் தாஹிர், டுமினி எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, இவர்களை மேலேறி வந்து எளிதில் ஆடினர் சவுமியாவும், தமீமும். தமிம் 70 பந்துகளில் 50 ரன்கள் எடுக்க, சவுமியா சர்க்கார் 41 பந்துகளில் அரைசதம் கண்டார்.
சவுமியா சர்க்கார் சதம் அடிக்க வாய்ப்பிருந்தாலும் அவர் கடைசியில் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். தமிம், மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் வரலாற்று வெற்றிக்க்கு இட்டுச் சென்றனர்.
வங்கதேச அணி, ஆரம்ப கால இலங்கை போல் ஒரு எழுச்சியுறும் அணியாக மாறியுள்ளது. ஆனால் இவர்களின் ஆக்ரோஷம் துணைக்கண்டத்திலிருந்து ஒரு ஆஸ்திரேலிய மனநிலை கொண்ட அணியாக உருவெடுக்கச் செய்யும் என்பதாகவே தெரிகிறது.
இனி வங்கதேசத்தை ‘மின்னோஸ்’ என்று அழைக்க முடியாது. 'வங்கதேசம் ஜாக்கிரதை' என்று மற்ற டெஸ்ட் அணிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago