அபாரமான பந்துவீச்சின் மூலம் இந்தியாவுக்கு பாடம் கற்பித்த வங்கதேசம் வெற்றி

By ஆர்.முத்துக்குமார்

மிர்பூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆக்ரோஷமாக பந்து வீசிய வங்கதேசம் இந்திய அணிக்கு பாடம் கற்பித்து வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த வங்கதேசம் இடையில் ஏற்பட்ட சரிவுக்குப் பின் மீண்டெழுந்து 307 ரன்களை எடுக்க, தொடர்ந்து ஆடிய இந்திய அணி 228 ரன்களை மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. வங்கதேசம் சொந்த நாட்டில் பெறும் 9-வது தொடர் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிடத்தில் இல்லாத வேகம், ஆக்ரோஷம் அனைத்தும் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்களிடத்தில் இருந்தது, கட்டுக்கோப்பும் நேர்த்தியும் இருந்தது. அனைத்திற்கும் மேலாக இந்திய அணியின் பலவீனத்தை அறிந்தார் போல் தெரிகிறது. ஒரு பேட்டிங் சாதக ஆட்டக்களத்தில் ஒரு அபாரமான பந்துவீச்சினால் இந்த வெற்றியை வங்கதேசம் தங்களுக்காக பெருமுயற்சியுடன் வருவித்துக் கொண்டது என்றே கூற வேண்டும். இந்திய அணி சிந்திக்க வேண்டியது நிறைய உள்ளது.

வங்கதேசத்தின் அறிமுக இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் முக்கிய கட்டத்தில் ரோஹித் சர்மா, அஜிங்கிய ரஹானே விக்கெட்டை சாதுரியமான பந்துவீச்சில் வீழ்த்த, பிறகு தோனியின் குறுக்கே வந்து அவரால் பலமாக இடித்து தள்ளப்பட்டதில் நிலைகுலைந்து பெவிலியன் சென்றார், பிறகு

மீண்டும் பந்து வீச வந்து ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் ரெய்னா, மற்றும் அஸ்வினை வீழ்த்தி ஹேட்ரிக் வாய்ப்பை பெற்றார். ஆனால் புவனேஷ் குமார் ஹேட்ரிக்கை தடுத்தார். ஆனால் சிறிது நேரத்தில் ஜடேஜாவையும் வீழ்த்தி அறிமுக ஒருநாள் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தார்.

தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா மற்றும் தவண் ஆகியோரை தனது ஸ்விங்கினால் சற்றே நெருக்கடிக்குள்ளாக்கினார் இந்த அறிமுக இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரஹ்மான்.

தவண் 3 நல்ல பவுண்டரிகளை அடித்தாலும் முஷ்பிகுர் ரஹிம் அவருக்கு 2 கேட்ச்களை அடுத்தடுத்து கோட்டை விட்டார். அதில் ஒன்றுதான் இன்சைடு எட்ஜ் கேட்ச். அதைத்தான் நடுவர் கேட்ச் பிடிக்காதபோதே அவுட் என்று கூறி சுவாரசியம் ஏற்படுத்தினார். ஆனால் அதன் பிறகு இரண்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளாத தவண் ஆக்ரோஷமாக வீசிய டஸ்கின் அகமது பந்தை ஒதுங்கிக் கொண்டு அடிக்கப்போனார், பந்து அவருக்கு நெருக்கமாக எழும்ப அப்பர் கட் செய்ய முயன்று எட்ஜ் செய்து முஷ்பிகுரிடம் கேட்ச் கொடுத்து 30 ரன்களில் வெளியேறினார்.

16 ஓவர்களில் 95/1 என்று இந்தியா நன்றாகவே சென்று கொண்டிருந்தது. ரோஹித் சர்மா இடது கை வேகப்பந்து அறிமுக வீச்சாளர் ரஹ்மானை ஒரே ஓவரில் 2 பவுண்டரிகள் ஒரு அபாரமான புல் ஷாட் அடித்து ஸ்டெடியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது கோலி இறங்கினார்.

மோசமான விராட் கோலியின் டவுன் ஆர்டரை மாற்ற வேண்டிய தேவை உள்ளது:

விராட் கோலி களமிறங்கினார். 1 ரன் எடுத்தார். பிறகு டஸ்கின் அகமது வீசிய ஒரு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை தொட்டார், கெட்டார்.

பந்து கொஞ்சம் பவுன்ஸ் கூடுதலாக இருந்தது. ஒன்று அதனை பளார் என்று அறைந்திருக்க வேண்டும், இல்லையேல் விட்டிருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் தொட்டுக் கொடுத்து கேட்ச் அளித்து வெளியேறினார். உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் போட்டியில் சதம் எடுத்ததையடுத்து உருப்படியாக ஒரு இன்னிங்ஸை கூட கோலி ஆடவில்லை.

அவரது டவுன் ஆர்டரை 1ம் நிலையிலிருந்து ஜடேஜா டவுனுக்கு மாற்ற வேண்டும், ரஹானேயை அவர் டவுனில் இறக்க வேண்டும். இல்லையேல் அவருக்கு எச்சரிக்கை அளிக்குமாறு அணியில் இருந்து ஒரு போட்டிக்கு உட்கார வைத்து விட்டு அம்பாத்தி ராயுடுவை களமிறக்கியிருக்க வேண்டும். ஒரு சர்வதேச தரம் வாய்ந்த வீரராகக் கருதப்படுபவர் 1 ரன்னில் அவுட் ஆவதென்பதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. அதுவும் அவர் ஆடி அவுட் ஆன ஷாட் லீக் வீரர் ஆடும் ஷாட் வகையைச் சேர்ந்தது. கோலி பற்றி உயர்த்திப் பேசப்படும் அவரது தரநிலைகளுக்கு அவர் பொருத்தமானவர்தானா என்ற கேள்வியை அவரது இன்றைய ஷாட் எழுப்பியுள்ளது, இவர் ஆட்டமிழந்ததுதான் திருப்பு முனையாக அமைந்து விட்டது.

3-ம் நிலை என்பது மிகவும் முக்கியமான டவுன் ஆர்டர். ஏனெனில் 150 நோ லாஸ் என்றாலும், 0வுக்கு 1 விக்கெட் என்றாலும் ஆட்டம் 3-ம் நிலை வீரர் கையில்தான் உள்ளது. எனவே இந்த முக்கிய டவுனில் இன்னும் பொறுப்புடன் ஆடக்கூரிய வீரரைக் களமிறக்குவது அவசியம்.

இவர் ஆட்டமிழந்தவுடன் 68 பந்துகளில் 64 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் சர்மா ரன் எடுக்க முடியாமல் இருந்த சமயத்தில் முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய பந்தை முன்கூட்டியே மட்டையை மடக்க பந்து முன் விளிம்பில் பட்டு மிட் ஆஃபில் மஷ்ரபேவுக்கு எளிதான கேட்ச் ஆனது.

ரஹானேவுக்கு முதல் ரன்னை எடுக்கவே மிகவும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. 10 பந்துகள் எடுத்துக் கொண்டார். கடைசியில் ரன் விகிதம் எகிற, வங்கதேச வீச்சும் ஆக்ரோஷமாகவும், கட்டுக்கோப்புடனும், நேர்த்தியாகவும் ஆக ரஹானே 25 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ரோஹித் போலவே ஸ்லோயர் பந்தை ஆட முன்னமேயே பேட்டை மடக்க, பந்து முன் விளிம்பில் பட்டு ஆஃப் திசையில் நசீர் ஹுசைனிடம் கேட்ச் ஆனது, அவர் பந்தை பிடித்து விட்டு மகிழ்ச்சியில் அதனை காலால் ஒரு உதை உதைத்தார்.

கவனம் சிதறிய தோனி:

115/4. 23 ஓவர்கள் முடிந்த நிலையில் தோனி களமிறங்கினார். அவர் இன்னிங்ஸை நிலைநிறுத்தி பிறகு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். அதே வேளையில் ஓவருக்கு 8 ரன்களுக்கும் மேல் தேவைப்படும் விகிதமும் எகிறிக் கொண்டிருந்தது.

அப்போதுதான் ஒரு நெருக்கமான சிங்கிளை அவர் ரஹ்மான் பந்தில் எடுக்க முயன்ற போது பவுலர் ரஹ்மான் குறுக்கே வேண்டுமென்றே வந்தார். தோனி அவரை பலமாக இடித்துத் தள்ளினார். இடியின் பலம் காரணமாக நிலை குலைந்த அவர் அந்த ஓவரை முடிக்காமலேயே பெவிலியன் சென்றார்.

இந்தச் சம்பவத்தினால் சற்றே சலசலப்பு நிகழ, தோனி எப்பவும் கூலாக இருப்பவர் சற்றே கவனம் இழந்தாற்போல்தான் ஆனது. அடுத்த ஓவரில் ஷாகிப் அல் ஹசன் வீசிய பந்தை அவர் எப்போதும் ஆட விரும்பாத ஒரு ஷாட்டை ஆடி எட்ஜ் செய்து வெளியேறினார்.

முஸ்தபிசுர் ரஹ்மான் அபாரமான பந்து வீச்சு:

ரெய்னாவும், ஜடேஜாவும் சேர்ந்து ஸ்கோரை 128/5 என்ற நிலையிலிருந்து 188 வரை உயர்த்தினர். 35-வது ஓவரில் பவர் பிளே எடுக்கப்பட்டது. ஜடேஜா, ரூபல் ஹுசைனை 2 பவுண்டரிகள் விளாசினார். ஏற்கெனவே ஒரு சிக்சரை அடித்த ரெய்னா 37-வது ஓவரில் ரஹ்மானை அபாரமாக கவர் திசையின் மேல் ஒரு சிக்சர் விளாசினார். ஆனால் அதே ஓவரில் வேகத்தை திடீரென குறைத்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ரெய்னாவின் ரீச் செல்லாத இடத்தில் ஒரு பந்தை பிட்ச் செய்து உள்ளே கொண்டு வந்தார். ரெய்னா க்ரீஸிலிருந்தே அதனை டிரைவ் ஆட முயன்றார் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனது.

அடுத்த பந்தை அஸ்வினுக்கு குறுக்காக ஸ்விங் செய்ய அஸ்வின் தொட்டார், கேட்ச் ஆனது வெளியேறினார். அறிமுக போட்டியிலேயே ஹேட்ரிக் வாய்ப்பு பெற்றார் ரஹ்மான்.ஆனால் புவனேஷ் குமார் அடுத்த பந்தில் 1 ரன் எடுத்து ஹேட்ரிக்கைத் தடுத்தார்.

ஜடேஜா 42 பந்துகளில் போராடி 32 ரன்கல் எடுத்து முஸ்தபிசுர் ரஹ்மானின் 5-வது விக்கெட்டாக வீழ்ந்தார். ஒரு கட்டர் பந்து, அதனை தூக்கி அடித்து லாங் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அறிமுக டெஸ்ட்டில் 5 விக்கெட்டுகள்! தோனியிடம் இடி வாங்கிய பிறகு எழுச்சிபெற்றார் முஸ்தபிசுர் ரஹ்மான்.

புவனேஷ் குமார், ஷாகிப் அல் ஹசனை ஒரு பவுண்டரியும், டீப் மிட்விக்கெட்டில் ஸ்லாக் ஸ்வீப்பில் ஒரு சிக்சரும் அடித்தார்.

மஷ்ரபே மோர்டசாவிடம் மோஹித் சர்மா மறுமுனையில் முஷ்பிகுரிடம் 5-வது கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2 கேட்ச்களை விட்டு மோசமாகத் தொடங்கிய முஷ்பிகுரிடம் இந்திய வீரர்கள் 5 கேட்ச்களை கொடுத்துள்ளார்கள் எனும்போது இந்திய வீரர்களின் ஷாட் தேர்வு என்ன தரத்திலானது என்பது தெரிகிறது.

வங்கதேசம் இன்னின்ஸை முடிக்க சற்று நேரம் ஆனது. புவனேஷ் குமார் 2 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 25 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். உமேஷ் யாதவ்வை, ஷாகிப் அல் ஹசன் எல்.பி. செய்ய இந்தியா 228 ரன்களுக்கு 46-வது ஓவரில் சுருண்டது.

வங்கதேச அணியின் ஹீரோ அறிமுக இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான், இவர் 9.2 ஓவர்களில் 50 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பை உடைத்தார். டஸ்கின் அகமது 21 ரன்களுக்கு 2 விக்கெட். ஷாகிப் அல் ஹசன் 33 ரன்களுக்கு 2 விக்கெட்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்