பதவி பறிபோகும் அச்சத்தில் ‘கேப்டன் கூல்’?

By ஏ.வி.பெருமாள்

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா கண்டுள்ள படுதோல்வியைவிட, ‘கேப்டன் கூல்’என புகழப்பட்ட இந்திய கேப்டன் தோனி தனது பொறு மையை இழந்து உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கும் பேச்சுதான் சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது அலசி ஆராயப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயம்.

இதற்கு முன்பு எத்தனையோ முறை இக்கட்டான, நெருக்கடி யான தருணங்களை தாண்டி வந்தி ருக்கிறார் தோனி. கிரிக்கெட் உலகையே உலக்கிய ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் தோனி யின் பெயர் இணைத்து பேசப்பட்ட போதும், அது தொடர்பாக அவரிடம் கடுமையான கேள்வி எழுப்பப்பட்ட போதும்கூட, அதைப் பற்றியெல் லாம் கவலைப்படாமல் மவுனம் காத்திருக்கிறார். நேரம் வரும்போது அதைப் பற்றி பேசுகிறேன் என தட்டிக் கழித்திருக்கிறார்.

தோனியின் உணர்ச்சிவசம்

எந்த நெருக்கடிக்காகவும் அலட்டிக்கொள்ளாத உறுதியான மனத்திடம் கொண்டவரான தோனி, வங்கதேசத்திடம் தொடரை இழந்தபோது, ‘என்னை கேப்டன் பதவியில் இருந்து நீக்கினால்தான் இந்திய அணி நன்றாக விளையாடும் என்றோ; இந்தியாவின் தோல்விக்கு நான்தான் காரணம் என்றோ எண்ணினால் கேப்டன் பதவியில் இருந்து விலகிவிடுகிறேன். ஒரு வீரராக விளையாடத் தயார்” என உணர்ச்சிவசப்பட்டு பேசியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

கிரிக்கெட்டில் மட்டுமல்ல, எல்லா விளையாட்டுகளிலுமே ஓர் அணி தோற்கும்போதோ அல்லது அதன் செயல்பாடு மிக மோசமா கும்போதோ அது தொடர்பாக ஊடகங்கள் கேள்வியெழுப்புவது புதிதல்ல. சச்சினிடம் கூட எப்போது ஓய்வு பெறப்போ கிறீர்கள் என பலமுறை கேள்வி யெழுப்பப்பட்டிருக்கிறது. அதே போன்றுதான் கேப்டன்ஷிப் விஷயத் தில் உங்களின் நிலைப்பாடு என்ன வென்று தோனியிடம் கேட்கப் பட்டது.

பதவி பறிபோகும் அச்சம்

கேப்டன் பதவி எனக்கு கொடுக் கப்பட்டதால் ஏற்றுக்கொண்டேன். இப்போது என்னிடம் இருந்து கேப்டன் பதவியை பறிக்க அணி நிர்வாகம் முடிவு செய்தால் மகிழ்ச்சியாக அதை விட்டுவிடு வேன் என தோனி கூறியிருப்பதில் இருந்தே அவராகவே கேப்டன் பதவியில் இருந்து விலகமாட்டார் என்பதை தெளிவுபடுத்திவிட்டார்.

அதேநேரத்தில் நம்முடைய கேப்டன் பதவி பறிக்கப்படலாம் என்ற அச்ச உணர்வு தோனிக்குள் எழுந்துவிட்டதை அவருடைய பேச்சில் இருந்த தெரிந்துகொள்ள முடிகிறது. 2012-ல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் ‘ஒயிட் வாஷ்’ ஆனபோது கேப்டன் பதவியிலிருந்து தோனியை நீக்க, தேர்வுக்குழுவினர் முடிவு செய்தார்கள். ஆனால் அப்போதைய பிசிசிஐ தலைவர் என்.சீனிவாசன் தேர்வுக்குழுவினரின் முடிவை நிராகரித்து தோனியை காப்பாற்றினார்.

இப்போதும் தேர்வுக்குழு வினரின் முடிவை நிராகரிக்கும் உரிமை பிசிசிஐ தலைவருக்கு இருக்கிறது. ஆனால் தோனியின் ஆதரவாளராகக் கருதப்படுபவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான என்.சீனிவாசன் இப்போது பிசிசிஐ தலைவராக இல்லை.

தற்போதைய தலைவர் ஜக்மோகன் டால்மியா வும், செயலாளர் அனுராக் தாக்குரும் தேர்வுக்குழுவினரின் முடிவை நிராகரிக்க வாய்ப்பில்லை என்பது தோனிக்கு பெரிய பின்னடை வாகும். அதுதான் அவருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி யிருக்கிறது.

பேட்ஸ்மேனாக…

ஒரு வீரராக அணியில் விளை யாட தயார் என்று தோனி கூறியி ருந்தாலும், கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்னர் அவருக்கு அணியில் இடம் கிடைக்குமா என்பது சந்தேகமே? அதை தோனியும் நிச்சயம் உணர்ந்திருப்பார். கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டால், பேட்ஸ்மேன் என்ற தனி அடையாளத்தோடுதான் அவர் விளையாடியாக வேண்டும்.

ஆனால் இந்திய அணியின் கேப்டன் என்பதைத் தவிர்த்து ஒரு பேட்ஸ்மேனாக தோனியின் செயல்பாட்டை பார்த்தால் அது மெச்சும்படியில்லை. கடைசியாக 2013 ஜூலையில் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரின் இறுதி ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக 45 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். அந்தத் தொடர் வரை தோனியின் ஆட்டத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால் சராசரியாக 13 ஆட்டத்துக்கு ஒரு முறை ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார்.

ஆனால் கடைசியாக விளையாடிய 38 ஆட்டங்களில் அவர் ஒன்றில்கூட ஆட்டநாயகன் விருதைப் பெறவில்லை. ஆக மொத்தத்தில் கேப்டன் பதவியை இழந்தால், அணியில் தனக்கான இடத்தையும் இழக்கும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் தோனி.

அணி தேர்வில் பாரபட்சம்

சர்வதேச அளவில் 50 ஓவர் உலகக் கோப்பை, மினி உலகக் கோப்பை (சாம்பியன்ஸ் டிராபி), டி20 உலகக் கோப்பை என மூன்றையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் தோனி. அதற்கு அவர் பெற்ற திறமையான வீரர்கள் அடங்கிய அணிதான் முக்கியக் காரணம்.

ஆனால் இன்றைய இந்திய அணி அப்படி இருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை. அணி தேர்வு விஷயத்தில் தோனி சிலருக்கு ஆதரவாக செயல்பட்டது அப்பட்ட மாக அனைவரும் அறிந்ததுதான். குறிப்பாக ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து சொதப்பி வந்தாலும் இன்று வரை அணியில் நீடிக்கிறார்.

ஜடேஜாவுக்கு ஆதரவு

இந்திய அணியின் வெற்றியில் ரவீந்திர ஜடேஜாவின் பங்களிப்பு என்பது மிகமிகக் குறைவு. ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப் பளித்து வரும் தோனி, அவரை காப்பாற்றுவதில் இப்போதும் தீவிர மாக இருக்கிறார். ஆல்ரவுண்டர் இடத்தை நீண்ட நாட்களாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஜடேஜாவே, இந்திய அணியின் மிக முக்கியமான வீரர் என இப்போதும் பேசிக்கொண்டிருக்கிறார்.

சில நேரங்களில் ஜடேஜா பந்துவீசு வதில்லை. பேட்டிங்கிலும் அவர் செயல்பாடு மெச்சும்படியில்லை. ஆனால் தோனியோ, ஜடேஜா 7-வது வீரராக களமிறங்குகிறார். அந்த இடத்தில் ரன் குவிப்பது கடினமானது என சப்பைக்கட்டு கட்டுகிறார்.

மிட்செல் ஜான்சன், ஜேம்ஸ் பாக்னர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் 6, 7, 8, 9-வது இடங்களில் களமிறங்கி அதிரடியாக ரன் குவித்து ஆஸ்திரேலியாவுக்கு பல்வேறு போட்டிகளில் வெற்றி தேடித்தந்திருக்கிறார்கள். 2013-ல் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் கடைசி ஒருநாள் போட்டியில் ஜேம்ஸ் பாக்னர் 7-வது பேட்ஸ்மேனாக களமிறங்கித்தான் 73 பந்துகளில் 116 ரன்கள் குவித்தார்.

தோல்விக்கு காரணம்

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் இடத்தைப் பொறுத்தவரையில் ஜடேஜாவைத் தவிர வேறுயாருக் கும் வாய்ப்பளிப்பதை தோனி விரும்பவில்லை. அதனால்தான் அக் ஷர் படேல் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் உலகக் கோப்பை போன்றவற்றில் ஒதுக்கியே வைக் கப்பட்டார்கள். மோஹித் சர்மா வின் பந்துவீச்சில் ‘லைன் அண்ட் லென்த்’ இல்லை என வெளிப்படை யாகவே விமர்சித்தார் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி.

ஆனாலும் மோஹித் சர்மா இப்போது வரை இந்திய அணியில் விளையாடிக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளும், பரீட்சார்த்தமுறையில் மற்றவீரர் களுக்கு வாய்ப்பளிக்காததும் தான் வங்கதேசத்திடம் இந்தியா மண்ணை கவ்வியதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில் வங்கதேச வீரர்கள் மிகச்சிறப்பாக ஆடியதை யும் மறந்துவிடக்கூடாது. மொத் தத்தில் இந்திய அணியில் சரியாக விளையாடாத ஜடேஜா போன்ற வர்களை நீக்கிவிட்டு திறமையான வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டிய தருணம் இது.

அதேநேரத்தில் கேப்டன் பொறுப் பிலிருந்து தோனியை மாற்றலாமா என்பது தற்போதைய தருணத்தில் விவாதப் பொருளாக இருந்தாலும், அது சரியான முடிவாக இருக்காது. அடுத்த சில தொடர்களுக்கு இந்திய அணியின் கேப்டனாக தோனி தொடர்வதே இந்திய கிரிக்கெட்டுக்கு நன்மை பயப்பதாக அமையும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்