பெருக்கெடுக்கும் கிரிக்கெட் சூதாட்ட ஊழல்!- ஐசிசி. ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிக்கே சூதாட்டத் தரகருடன் தொடர்பா?

By ஆர்.முத்துக்குமார்

கிரிக்கெட்டில் சூதாட்டம் என்பது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதன் தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட வர்களைத் தண்டிக்கும் நடைமுறை ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டி ருந்தாலும் சூதாட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு உதாரணமே இப்போது வந்துள்ள இந்தச் செய்தி.

ஐசிசி தனது ஊழல் ஒழிப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்து வரும் நிலையில், இந்த ஊழல் ஒழிப்புப் பிரிவின் முதன்மை அதிகாரி ஒருவருக்கு சூதாட்டத் தரகருடன் நெருக்கமான தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த மார்ச் - ஏப்ரலில் டாக்காவில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின்போது இந்த ஐசிசி அதிகாரி இந்திய சூதாட்டத் தரகருடன் தொடர்பு கொண்டு உரையாடியதாக ஏஜென்சி செய்திகள் கூறியுள்ளன.

டாக்காவில் இயங்கும் தொலைக் காட்சி ஒன்று முதன்மை ஐசிசி அதிகாரி தரம்வீர் சிங் யாதவ் மற்றும் இந்திய சூதாட்டத் தரகர் என்று கருதப்படும் அடானு தத்தா ஆகியோரிடையே நடந்ததாகக் கருதப்படும் ஆடியோ உரை யாடலை வரிக்கு வரி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூதாட்டத் தரகர் டாக்காவில் அப்போது கைது செய்யப்பட்டதாகவும் ஆனால் இந்த ஐசிசி அதிகாரி அவரை தனது இன்பார்மர் (தகவல் அளிப்பவர்) என்று கூறி உடனடியாக விடுவிக்குமாறு கூறியதாகவும் அதே சானல் தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தி ஏஜென்சி, ஐசிசி அதிகாரி யாதவை தொடர்பு கொண்டபோது தான் எதுவும் கூறுவதற்கில்லை என்றும் ஐசிசி-யிடம் இது குறித்து கேட்டுக் கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

ஐசிசி ஊழல் ஒழிப்புக் குழுவில் உள்ள அதிகாரிக்கும், அடானு தத்தா என்ற சூதாட்டத் தரகருக்கும் இடையே நடந்ததாக வெளியிடப்பட்ட ஆடியோ உரையாடல் பதிவு இதோ:

ஐசிசி அதிகாரி யாதவ்:

இந்த முறை நீங்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று கூறியிருக் கிறேன், நீங்கள் இங்கு இல்லை என்று நான் ஏற்கெனவே அவர்களிடம் தெரிவித்துள்ளேன்.

சூதாட்டத் தரகர் அடானு தத்தா:

நீங்கள் எனக்கு முன்னரே கூறியிருந்தால் நான் இந்நேரம் கிளம்பியிருப்பேன்.

யாதவ்:

இல்லை. நான் ஏற்கனவே கூறிவிட்டேன், இங்கு நீங்கள் தங்கியிருப்பது பாதுகாப்பானது அல்ல.

தத்தா:

இன்று எதுவும் நடந்துவிட வில்லை. அந்த நபர் எனக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். நான் அவரை ஏற்கனவே அடையாளம் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு நான் சந்தேகம் வருமாறு எதுவும் செய்யவில்லை.

யாதவ்:

நீங்கள் இப்போது எங்கு இருக்கிறீர்கள்?

தத்தா:

நான் இன்னும் அங்கேயேதான் இருக்கிறேன்.

யாதவ்:

உங்களைக் காப்பாற்ற ஒரேயொரு வழிதான் உள்ளது. கூட்டத்தோடு கூட்டமாக இருந்து விடுங்கள், உங்களை அவர்கள் கவனிக்க மாட்டார்கள். உங்களை இன்னும் அவர்கள் பிடிக்கவில்லை?

அடானு தத்தா:

இல்லை... இல்லை.

யாதவ்:

அது போன்று எதுவும் நடந்துவிடவில்லை அப்படித் தானே?

தத்தா:

நான் இங்குதான் இருக் கிறேன், இப்போது நான் வெளியே போகிறேன்.

யாதவ்:

உடனே கிளம்புங்கள், மூலையில் அமரவேண்டாம். மூலையில் அமர்ந்தால் உங்களை அடையாளம் கண்டு கொள்வார்கள். மேலே கூட்டத்தோடு கூட்டமாக அமருங்கள்… உங்களை அடையாளம் கண்டு கொண்டு விட்டால் பெரிய பிரச்சினைதான்.

தத்தா:

ஆமாம்; இங்கு பிரச்சனை இருப்பதால் நான் உடனடியாக இந்தியா செல்கிறேன், நான் பேருந்தில் செல்கிறேன்.

யாதவ்:

ஆம்! அதுதான் சரி! இப்போது உங்களை அடையாளம் கண்டு கொண்டு விட்டால் பெரும் பிரச்சினைதான்

தத்தா:

நான் இப்போதே கிளம்பி விடுகிறேன். இன்று எதுவும் நடைபெறவில்லை. நான் பாதுகாப்பாக சென்று விடுகிறேன்...

இவ்வாறு அந்த ஆடியோ உரையாடலில் கூறப்பட்டுள்ளதாக அந்த தொலைக்காட்சி சானல் செய்தி வெளியிட்டுள்ளது.

முதன்முதலாக ஆஸ்திரேலிய வீரர்கள் மார்க் வாஹ், சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் ஆகியோர் சூதாட்டத் தரகர்களிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு அணி வீரர்கள் விவரம், டாஸ் விவரம், பிட்சின் நிலவரம் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டதாக செய்தி வெளிவந்தபோது, முதலில் மறுத்த அவர்கள் பிறகு மன்னிப்பு கேட்டனர். அப்போது முதல் ஐசிசி ஆகட்டும் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியமாகட்டும் வீரர்களைக் காத்து கவசம் அளித்து வந்துள்ளதே தவிர பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

பிறகு 2000-ல் தென் ஆப்பிரிக்க கேப்டன் ஹேன்சி குரோனியே விவகாரம் பூதாகாரமாக கிளம்பிய பிறகுதான் இது வீரர்களின் எவ்வளவு பெரிய அறச்சீரழிவிற்கும், ஒழுக்கச் சீரழிவிற்கும் இட்டுச் சென்றது என்று தெரிய வந்தது. இந்தியாவின் முகமது அசாருதீனுக்கு ஆயுள்தடையும், ஜடேஜாவுக்கு 5 ஆண்டு தடையும் விதிக்கப்பட்டன. பாகிஸ்தானில் சலீம் மாலிக்கிற்கு தடை விதிக்கப்பட்டது.

அதன் பிறகு வீரர்கள் ஈடுபடும் சூதாட்டம் பற்றிய கவனக்குவிப்பு இருந்து வந்தாலும் ஒரு சில வீரர்களே அகப்பட்டனர். அதிலும் பத்திரிகைகள் சில இதில் தீவிர கவனம் செலுத்தி சூதாட்டத்தில் வீரர்கள் ஈடுபட்டு கோடி கோடியாக பணம் ஈட்டுவது வெளியே வர, பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆமிர், முகமது ஆசிப் ஆகியோருக்கு சிறைத் தண்டனை யுடன் தடைகளும் விதிக்கப்பட்டன.

இதன் பிறகும் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் ஆடிய பாகிஸ்தான் லெக்-ஸ்பின்னர் டேனிஷ் கனேரியா சூதாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரியவர ஆயுள் தடை விதிக்கப்பட்டார்.

இந்தியாவில் கடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்ட விவகார விசாரணைகள் இன்னும் முடிந்தபாடில்லை. சாந்த் இந்தியாவிற்கு இனி விளையாட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

இந்த விவகாரங்களே இன்னும் முற்றிலும் முடிவுறாத நிலையில் நியூஸிலாந்து முன்னாள் வீரர் லூ வின்சென்ட் சூதாட்டப்புகாரில் சிக்கினார். இவர் ஐசிசி சாட்சியமாக மாற ஒப்புக் கொண்டு சூதாட்டம் நடைபெற்ற போட்டிகள், ஈடுபட்ட வீரர்கள், ஈடுபட்ட விதம், பணம் கை மாறிய விதம் என எல்லா தகவல்களையும் ஐசிசிக்கு அளித்து வருகிறார்.

இதில்தான் நியூஸிலாந்து அணியின் தற்போதைய கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் பெயரும் அடிபட்டது. ஆனால் அவர் தானாகவே முன்வந்து 2008 ஐபிஎல் போட்டியிலும் அதன் பிறகு நியூஸிலாந்து அணி இங்கிலாந்து சென்றபோதும், தன்னை சூதாட்டத்தில் ஈடுபட வலியுறுத்திய வீரர் ஒருவர் பெயரை ஐசிசி விசாரணையில் தெரிவித்துள்ளார்.

லூ வின்சென்ட், மெக்கல்லம் அளித்துள்ள வாக்குமூலங்கள், மேலும் விரிவடையும் விசாரணைகள் என்று இந்த விவகாரம் அடுத்த 15 அல்லது 20 மாதங்களுக்கு வெடித்துக் கிளம்பும் என்று எதிர்பார்க்கும் நிலையில், ஊழலைத் தடுக்கவேண்டிய ஐசிசி ஊழல் தடுப்புக் குழுவிலேயே அதிகாரி ஒருவருக்கு சூதாட்டத் தரகருடன் நெருங்கிய தொடர்பிருப் பதாக வந்துள்ள செய்தி நிச்சயம் அதிர்ச்சி அலைகளை எழுப்பும் என்று எதிர்பார்க்கலாம்.

ஐசிசி தனது ஊழல் ஒழிப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்து வரும் நிலையில், இந்த ஊழல் ஒழிப்புப் பிரிவின் முதன்மை அதிகாரி ஒருவருக்கு சூதாட்டத் தரகருடன் நெருக்கமான தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

மெக்கல்லம் வாக்குமூலம் கசிவு: விசாரணையை தொடங்கியது ஐசிசி

ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் அளித்த வாக்குமூலம் வெளியானது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி ரிச்சர்ட்ஸன் கூறியிருப்பதாவது:

மெக்கல்லத்தின் வாக்குமூலம் வெளியில் கசிந்தது மிகவும் தீவிரமான விஷயமாகும். அது எப்படி ஊடகத்திற்கு தெரிந்தது என்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். கிரிக்கெட்டில் உள்ள ஸ்பான்சர்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் மீண்டும் உறுதியளிக்கிறோம். கிரிக்கெட் விளையாட்டின் நேர்மையை பாதுகாக்கும் வகையில் ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்பின் மீது அனைத்து பங்குதாரர்களும் தொடர்ந்து நம்பிக்கை வைக்கலாம். தற்போது எழுந்துள்ள பிரச்சினை பங்குதாரர்களிடையே மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியிருக்கும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

அதேநேரத்தில் மெக்கல்லம் விசாரணை வளையத் தில் இல்லை. அவருக்கு நாங்கள் தனிப்பட்ட முறை யில் ஆதரவு தெரிவிக்கிறோம். ஆனால் வெளிப் படையாக ஆதரவளிக்க முடியாது. ஒரு தொழில் முறை வீரராக ஊழல் தடுப்பு பிரிவின் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளித்தார் மெக்கல்லம் என்றார்அவர். முன்னதாக ‘டெய்லி மெயில்’ பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தியில், “மெக்கல்லத் திடம் ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தியது. அதில் சூதாட்டத்தரகர்கள் தன்னை அணுகியதாகவும் தாங்கள் கூறியபடி விளை யாடினால் ரூ.1.5 கோடி தருவதாகவும் கூறினர். ஆனால் நான் மறுத்து விட்டேன் என மெக்கல்லம் கூறியதாகத் தெரிகிறது. 2008 ஐபிஎல் சீசனின்போது முன்னாள் வீரர் ஒருவர் மெக்கல்லத்தை அணுகியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்” என அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்