தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் சிறப்பு நேர்காணலில் தன் காலத்திய சிறந்த 5 பேட்ஸ்மென்கள் யார், ஏன் என்பதை காரணங்களுடன் விளக்கியுள்ளார் மெக்ரா.
ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் இந்நாளைய எம்.ஆர்.எப். வேகப்பந்து அகாடமியின் இயக்குநருமான கிளென் மெக்ரா, 5 பெரிய பேட்ஸ்மென்களை பட்டியலிட்டுள்ளார்.
இது குறித்து ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் சிறப்பு பேட்டியளித்த போது சச்சின், லாரா, பாண்டிங், திராவிட், ஸ்டீவ் வாஹ் ஆகிய 5 பேட்ஸ்மென்களை தன் காலத்திய சிறந்த பேட்ஸ்மென்கள் என்று கூறியுள்ளார்.
"இந்தப் பெயர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட வரிசைத்தொடர்களின் படி அமைக்கப்படவில்லை. நான் மிகவும் மதிக்கக் கூடிய என் காலத்திய 5 பேட்ஸ்மென்கள் இவர்கள் ஆவார்கள்.
சச்சின் டெண்டுல்கர்: இவர் பெயர் இங்கு குறிப்பிடப்படுவது வெளிப்படை, அவர் அவ்வளவு தரம் வாய்ந்த பேட்ஸ்மென். உத்தி ரீதியாக மிகச் சிறப்பாக ஆடக்கூடியவர். மிக இளம் வயது முதல் தன் கையில் மட்டையுடன் இருப்பவர். மனரீதியாக மிகவும் பலமானவர். 24 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடியிருப்பது பெரிய விஷயம். ஆட்டத்தின் மீது உண்மையான நேயமும், ஆசையும் இல்லாமல் இவ்வளவு ஆண்டுகள் ஆட முடியாது.
எந்த ஒருபந்து வீச்சையும் அடித்து நொறுக்கும் உத்தி இவரது சிறப்பம்சம். அதே வேளையில் நாள் முழுதும் விளையாடும் பொறுமையும் இவரது தனிச்சிறப்பு. ஒரு மிகச்சிறந்த வீரர் என்பது ஏதோ ஒரு விஷயம் மட்டும் தனிச்சிறப்பாக வெளிப்படுவது அல்ல, மாறாக அனைத்தும் ஒருசேர அமைவது. இவர் ஒருமுழுமையான பேட்ஸ்மென்.
பிரையன் லாரா: இடது கை வீரர், மிகவும் அனாயசமாக ஆடக்கூடியவர். ஷாட்களை ஆட விரும்புவர். நான் வீசியதிலேயே கட்டுப்படுத்த முடியாத, அல்லது அவரது ஆட்டப்போக்கை மாற்ற முடியாத ஒரு பேட்ஸ்மென். சச்சின் டெண்டுல்கர் கூட நன்றாக வீசினால் மோசமான பந்துக்காக அவர் காத்திருப்பார். ஆனால் லாரா ஷாட்களை ஆடவே விரும்புவார். அவரது இந்தக் குணத்தைப் பயன்படுத்தி இவரை சில முறைகள் நான் வீழ்த்தியிருக்கிறேன், ஃபுல் லெந்தில் கொஞ்சம் வைடாக வீசினால் அவர் மட்டையைக் கொண்டு விளாசச் செல்வார். இதனால் மட்டை விளிம்பில் பட நல்ல வாய்ப்பு. ஸ்லிப்களில் கேட்ச் செல்ல வாய்ப்பு, இவ்வாறு இவரை சிலமுறை வீழ்த்தியுள்ளேன்.
இன்னொரு புறம் இவர் மிகப்பெரிய சதங்களையும், இரட்டைச் சதத்தையும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக எடுத்தார். பந்துவீச்சை ஆதிக்கம் செலுத்த விரும்பும் வகையான வீரர் இவர். பந்து வந்த பிறகு ஆடுவார். இவரை புரிந்து கொள்வது கடினம். சில சமயங்களில் என்னவாயிற்று என்று தெரியாத அளவுக்கு தடுமாறுவார். சில சமயங்களில் அதீத கவனத்துடன் பேட் செய்வார். பணம் கொடுத்து ஒரு வீரரின் ஆட்டத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பினால் அது பிரையன் லாராவாகவே இருக்க முடியும். இவர் கிரிக்கெட்டை பொழுதுபோக்கு அம்சத்துடன் ஆடுபவர். அனைத்து ஷாட்களையும் ஆடுவார். அவரது கால்நகர்வுகள் அபாரம். இவரது பேக்லிஃப்ட் கூடுதலானது. நிறைய பேட்ஸ்மென்கள் இவர் அளவுக்கு மட்டையை உயர்த்திப் பிடிப்பதில்லை. ஆனால் இதனால்தான் அவரால் நினைத்த ஷாட்களை ஆட முடிகிறது.
ராகுல் திராவிட்: தரம் வாய்ந்த ஒருபேட்ஸ்மென். தன் ஆட்டம் குறித்து கடின உழைப்பை இடுபவர். நாள் முழுதும் ஆட தயாராக இருப்பவர். பெரிய சதம் பிறகு இரட்டைச் சதம் என்று போய்க்கொண்டேயிருப்பவர். இவரது தடுப்பாட்டம் உறுதியானது, இவரை வீழ்த்துவது அவ்வளவு சுலபமல்ல. கவனம் பெற்றுவிட்டால் அவர் ஆடிக்கொண்டேயிருப்பார். உத்திரீதியாகவும் மனரீதியாகவும் சிறந்தவர். இவரிடம் ஏதாவது பலவீனம் உள்ளது என்று நான் கருதவில்லை. நான் இவருக்கு ஆஃப் ஸ்டம்ப் லைனில் பந்தை ஸ்விங் செய்து, பவுன்ஸ் செய்தால் இவர் அந்தச் சவாலுக்கு எப்போதும் தயாராகவே இருப்பார்.
கடைசி காலக்கட்டத்தில் அவர் கால்களுக்கு இடையில் புகுந்து பந்து சில முறை ஸ்டம்ப்களை தாக்கியுள்ளது. ஆனால் அவர் என்ன சாதித்தாரோ அதற்கான மதிப்புக்கு தகுதியானவரே.
ரிக்கி பாண்டிங்: நான் ரிக்கியுடன் நிறைய ஆடியிருக்கிறேன், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவிக்கும் வீரராக பாண்டிங் இருப்பார் என்றே நான் கருதினேன், ஆனால் சச்சின், எந்த ஒருவர் தொடமுடியக்கூடிய எல்லைக்கப்பால் அந்தச்சாதனையை கொண்டு சென்று விட்டார். இளம் வயது முதலே சிறந்த உத்தி, எதிர்கால ஆஸ்திரேலிய கேப்டன் என்ற முத்திரை குத்தப்பட்டவர். கேப்டன்சியின் பொறுப்புகள் இருந்தாலும் ஆக்ரோஷமாகவே ஆடக்கூடியவர். ஷார்ட் பிட்ச் பந்தை இவர் அளவுக்கு சிறப்பாக ஆடியவரை நான் பார்த்ததில்லை. புல் ஷாட்களை முன்னால் வந்தாலும் ஆட முடியும் இவரால், பின்னால் சென்றும் ஆடும் உத்தி இவரிடம் உள்ளது. அவர் விரைவாக செயல்படக்கூடியவர். இவரை வீழ்த்திவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்படலாம். ஆனால் அவரிடம் தன்னம்பிக்கையும் உறுதியும் ஆதிக்க மனோபாவமும் அதிகம். பவுலர்கள் லைன் மற்றும் லெந்தில் இவருக்கு எதிராக நிலைபெற்று விட முடியாது.
இந்த வகையில் வேறு சில ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களும் உள்ளனர், ஆடம் கில்கிறிஸ்ட், மேத்யூ ஹெய்டன். ஆகியோரும் போட்டியை எதிரணியிடமிருந்து விரைவில் பறிக்கும் வல்லமை உடையவர்கள்.
ஸ்டீவ் வாஹ்: ஸ்டீபன் மிகக் கடினமான ஒரு பேட்ஸ்மென், மற்றெல்லோரையும் விட பேராசைக்காரர். கடினமான வேலைகளைச் செய்யக்கூடியவர். நெருக்கடி தருணங்களில் தனது விக்கெட்டை அவ்வளவு சுலபத்தில் விட்டுக் கொடுக்க மாட்டார். அவருடைய மனபலமும், உறுதியும் இவரது பலங்கள். ஷார்ட் பிட்ச் பந்துகளில் இவர் தடுமாறுவது உண்மையென்றாலும் அதில் அவுட் ஆகமாட்டார். கிரீஸில் தன் ஆட்டம் அழகாக இருக்கிறதா என்பது பற்றியெல்லாம் கவலைப்படாத மனிதர். மிகப்பெரிய தைரியசாலி.
இவ்வாறு கிளென் மெக்ரா இந்த நேர்காணலில் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago