ஒரே நாளில் 763 ரன்கள் விளாசப்பட்ட த்ரில்லர் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி

By ஆர்.முத்துக்குமார்

ஓவலில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை நியூஸிலாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 398 ரன்கள் விளாச, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து இன்னிங்ஸில் பிற்பகுதியில் மழை குறுக்கிட டக்வொர்த் முறைப்படி 46 ஓவர்களில் 379 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து 9 விக்கெட்டுகளை இழந்து 365 ரன்களை எடுத்து மகாவிரட்டல் செய்து தோற்றுப் போனது.

பொதுவாக துணைக்கண்டங்களில் 350 ரன்களுக்கு மேல் இந்தியாவோ, இலங்கையோ அடிக்கும் போது 'Sub-continent mine-field' என்று இங்கிலாந்து ஊடகங்களும் முன்னாள் வீரர்களும் கேலி பேசுவர். ஆனால் தொடர்ந்து 2-வது ஒருநாள் போட்டியில் ஸ்கோர் 400 ரன்களை தொட்டுள்ளது. அவர்கள் பேட்டிங்குக்குச் சாதகமான ஆட்டக்களம் இட்டு அதில் இரு அணிகளும் 400 ரன்கள் பக்கம் விளாசினால் அது ‘எபிக் மேட்ச்’ என்றும் அதே துணைக்கண்டத்தில் அதேபோன்று நடந்தால் அது ‘புழுதியும், தூசியும் கொண்ட மட்டை பிட்ச்’ இதுதான் மேற்கத்திய ஊடகங்களின், முன்னாள் வீரர்களின் கருத்து. சரி போகட்டும்..

ராஸ் டெய்லர் 96 பந்துகளில் 10 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் விளாசி தனது 13-வது ஒருநாள் சதத்தை எடுக்க, கேன் வில்லியம்சன் 88 பந்துகளில் 93 ரன்களை அருமையான முறையில் எடுக்க, மெக்கல்லம் தன் வழக்கமான அதிரடி அனாயாசத்தில் 22 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 39 ரன்களையும், மார்டின் கப்தில் 50 ரன்களையும், கிராண்ட் எலியட் (15 பந்தில் 32 ரன்கள்), லூக் ரோங்கி (33, 16 பந்துகள், 2 பவுண்டரி 3 சிக்சர்கள்) ஆகியோர் கடைசியில் பின்னி எடுக்க நியூஸிலாந்து தங்களது 2-வது அதிக ஒருநாள் ஸ்கோரான 398 ரன்களை எடுத்தது.

இலக்கைத் துரத்தும் போது, இங்கிலாந்து இன்னிங்சில் 37 பந்துகளில் 54 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. 3 விக்கெட்டுகள் கையில் இருந்தன. பவர் ஹிட்டர்களான அடில் ரஷீத், லியாம் பிளங்கெட் ஆகியோர் கிரீசில் இருந்தனர். ஆனால் 50 நிமிடங்கள் மழை கொட்டிய பிறகு 13 பந்துகளில் 34 ரன்கள் என்று இலக்கு மாறியது.

முன்னணி பவுலர்கள் ஓவர்கள் முடிந்து விட நேதன் மெக்கல்லம் எஞ்சியிருந்தார். அவரை பார்வையாளர் பகுதிக்கு ஒரு சிக்சர் அடித்தார் பிளங்கெட், பிறகு 30 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்த பிளங்கெட்டை, நேதன் மெக்கல்லம் வீழ்த்தினார்.

திருப்பு முனை ஏற்படுத்திய எல்லைக் கோடு அருகே அபாரமான கேட்ச்:

ரஷீத் 26 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த போதுதான், நியூஸிலாந்தின் அற்புதமான பீல்டிங் திறமை வெளிப்பட்டது, இது வெற்றிக்கு வித்திட்டது.

கடைசி ஓவருக்கு முதல் ஓவரின் கடைசி பந்தை அடில் ரஷீத் சிக்சருக்குத் தூக்கினார். பந்து லாங் ஆனை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சவுதீ நீண்ட தூரம் கவர் செய்து இருகைகளாலும் பந்தை பிடிக்கும் நிலையில் தான் எல்லைக்கோட்டுக்கு வெளியே சென்று விடுவோம் என்று உணர்ந்த சவுதீ, சமயோசிதமாக லாங் ஆஃபிலிருந்து அங்கு ஓடி வந்த போல்ட் அருகில் நிற்க அவரிடம் தட்டி விட்டார். போல்ட் கேட்சைப் பிடிக்க இங்கிலாந்து கதை முடிந்தது.

போல்ட் அதனை ஒரு கையில் பிடித்தார். மிகவும் அற்புதமான கேட்ச், அதுவும் நெருக்கடி தருணத்தில் தோல்வி ஏற்படும் அழுத்தத்தில் மிகவும் அருமையான கேட்ச் இது. சர்வதேச மட்டத்தில் இதுவரை பிடிக்கப்பட்ட அற்புத கேட்ச்கள் பட்டியலில் இதற்கும் ஒரு இடம் நிச்சயம் உண்டு.

கடைசி 46-வது ஓவரை கிராண்ட் எலியட் வீசும்போது இங்கிலாந்து வெற்றிக்கு 24 ரன்கள் தேவை என்ற சாத்தியமாகாத நிலை ஏற்பட்டது.

ஒரே ஒருநாள் போட்டியில் 763 ரன்கள்! இங்கிலாந்தில் 2002-ம் ஆண்டு லார்ட்ஸில் அந்த ‘எபிக்’ துரத்தலில் இந்தியா வெற்றி பெற்ற போட்டியில் இருஅணிகளும் 651 ரன்கள் எடுத்ததே இங்கிலாந்து மைதானத்தில் அதிக பட்ச ரன் எண்ணிக்கையாகும்.

399 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ராய் (39), அலெக்ஸ் ஹேல்ஸ் (49 பந்தில் 54) ஆகியோர் 75 பந்துகளில் 85 ரன்கள் என்ற அபாரத் தொடக்கம் கொடுத்தனர். சவுத்தி, போல்ட்டால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஸ்பின்னர் சாண்ட்னர் வந்த பிறகு 3 பந்துகளில் ஹேல்ஸ், ரூட்டை காலி செய்தார்.

இயன் மோர்கன் அதிரடியில் ஏற்பட்ட வெற்றி வாய்ப்பு:

அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய 16-வது ஓவர் முடிவில் 100/3 என்ற நிலையில் கேப்டன் மோர்கனின் அபாரமான அதிரடி இங்கிலாந்து வெற்றி வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்தது. அவர் 47 பந்துகளில் 6 பவுண்டரிகள் 6 சிக்சர்களை விளாசி 88 ரன்கள் எடுத்தார்.

மோர்கனின் 6 சிக்சர்கள் வருமாறு: சாண்ட்னரை ஸ்லாக் ஸ்வீப் செய்து லாங் ஆனில் முதல் சிக்ஸ். பிறகு நேதன் மெக்கல்லமை இறங்கி வந்து நேராக சிக்ஸ். மீண்டும் நேதன் மெக்கல்லமை லாங் ஆனில் சிக்ஸ். சாண்ட்னரை நேராக சைட் ஸ்க்ரீன் மீது ஒரு சிக்ஸ். அதே ஓவரில் மீண்டும் அதே இடத்தில் ஒரு சிக்ஸ். பிறகு எக்ஸ்ட்ரா கவரில் ஒரு அருமையான சிக்ஸ்.

கடைசியில் 33-வது ஓவரில் மெக்லீனாகன் பந்தை மீண்டு சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் டீப் பாயிண்டில் கிராண்ட் எலியட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

ஒரு நேரத்தில் அன்று 61 பந்துகளில் சதம் அடித்து அதிவேக சதத்துக்கான இங்கிலாந்து சாதனை படைத்த ஜோஸ் பட்லர் சாதனையை மோர்கன் முறியடிப்பார் என்றே தோன்றியது.

பவர் பிளே முன்பு 35 ஓவர்களில் 273/5 என்று இருந்தது இங்கிலாந்து. போல்ட் மீண்டும் வந்து 38 பந்துகளில் 41 ரன்களுடன் அச்சுறுத்திய ஜோஸ் பட்லரை எட்ஜ் செய்ய வைத்தார். சாம் பைலிங்ஸையும் அடுத்ததாக வீழ்த்தினார். அதன் பிறகுதான் பிளங்கெட், ரஷீத் ஜோடி மிரட்டினர். அதனை சவுத்தி-போல்ட் இணை கேட்ச் முடிவுக்கு கொண்டு வந்தது.

நேதன் மெக்கல்லம் 9 ஓவர்கள் 86 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட். போல்ட், மெக்லீனாகன், சாண்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள்.

முன்னதாக இங்கிலாந்து பவுலர்களில் கிறிஸ் ஜோர்டான் 9 ஓவர்களில் 97 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மெக்கல்லம் இவரை ஒரே ஓவரில் 20 ரன்கள் விளாசியதிலிருந்து ஜோர்டானுக்கு நேரம் சரியில்லை. அதுவும் ஒரு ஷாட் கிரவுண்டுக்கு வெளியே சென்றது. டெய்லரும், வில்லியம்சனும் 121 ரன்களை 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். வில்லியம்ன்சன் 93 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்தில் அவுட் ஆனார். ஆனால் நோ-பால் என்று அம்பயர் கூறி பிறகு மாற்றிக்கொள்ளப்பட்டது.

ராஸ் டெய்லர் 119 ரன்களை விளாசினாலும் 7 மற்றும் 40 ரன்களில் வாய்ப்புகள் வழங்கினார். கடைசியில் எலியட், ரோங்கி 5 முறை எல்லைக்கோட்டுக்கு வெளியே அடிக்க நியூஸிலாந்து 398 ரன்கள் குவித்தது. இதற்கு முன்பாக அயர்லாந்துக்கு எதிராக 2008-ம் ஆண்டில் இதை விட அதிக ஸ்கோரை அடித்திருப்பதால் இது 2-வது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் ஆகும்.

ஆட்ட நாயகனாக ராஸ் டெய்லர் தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்