அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு கால்பந்து போட்டிகளில் சுமார் ரூ.641 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) துணைத் தலைவர் உள்ளிட்ட 7 பேர் ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து உலகக் கால்பந்து கூட்டமைப்பான பிஃபா தலைவர் செப் பிளாட்டர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று உலக நாடுகளின் பல்வேறு ஊடகங்கள் விளாசியுள்ளன.
கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவில் நடந்த பல்வேறுபோட்டிகளுக்கு அனுமதி வழங்குவதற்காக ஊடகங்கள், விளையாட்டு விளம்பர நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள், பிஃபா நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளனர். அதற்கு ஈடாக போட்டியைஒளிபரப்பும் உரிமை, மார்க்கெட்டிங், ஸ்பான்சர்ஷிப் உரிமைஉள்ளிட்டவற்றை பெற்றிருக்கிறார்கள்.
2018, 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான உரிமை ரஷ்யா மற்றும் கத்தாருக்கு வழங்கப்பட்டதில் முறைகேடு நிகழந்துள்ளது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஸ்விட்சர்லாந்து போலீஸார்,
பிஃபா தலைமை அலுவலகத்தில் நேற்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது முக்கிய ஆவணங்கள் மற்றும் இ-மெயில்தகவல்களை போலீஸார் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் 2010 உலகக் கோப்பை கால்பந்தை தென் ஆப்பிரிக்காவுக்கு அளித்துள்ளதிலும் லஞ்சம் விளையாடியுள்ளதாகவும் வெளியான செய்திகள் கால்பந்து உலகினை உலுக்கியுள்ளது.
இந்நிலையில், ஜோசப் பிளாட்டர் விலக வேண்டும் என்று பல்வேறு ஊடகங்கள் விளாசியுள்ள விவரம் வருமாறு:
பிஃபா தலைமைச் செயலகம் உள்ள சுவிட்சர்லாந்தின் பத்திரிகையான லே மாடின் “பிளாட்டர் வெளியேற வேண்டும்” என்று கூச்சல் தலைப்பிட்டுள்ளது.
அவர் மீதான நம்பகத்தன்மை இழக்கப்பட்டுள்ளது. சக பத்திரிகையான லே டெம்ப்ஸ் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு இத்தனையாண்டு காலம் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வந்த தண்டனையிலிருந்து விலக்கு பெறும் நிலைக்கு முடிவு கட்டப்பட்டது என்று கைதுகளை கொண்டாடியுள்ளது.
கால்பந்து ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 14 பேரில் 9 அதிகாரிகள் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி என்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள். இந்த ஊழலில் சுமார் 150மில்லியன் டாலர்கள் தொகை லஞ்சமாக கைமாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
17 ஆண்டுகளாக பிஃபா-தலைவராக இருந்து வரும் பிளாட்டர் வெள்ளியன்று நடைபெறும் தேர்தலில் மறுதேர்வுக்காக நிற்கவுள்ள நிலையில் அவரது பெயர் ஊழல் செய்தவர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.
2010-ம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பையை நடத்த தென் ஆப்பிரிக்க அதிகாரிகள் பிஃபா அதிகாரிகளுக்கு சுமார் 10 மில்லியன் டாலர்கள் தொகை லஞ்சம்பாக கொடுத்ததாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தென் ஆப்பிரிக்க டைம்ஸ் பத்திரிகை, “மோசடி உலகக் கோப்பை, தென் ஆப்பிரிக்கா போட்டியை நடத்த வென்றிருந்தாலும் மோசடி மோசடியே” என்று செய்தி வெளியிட்டுள்ளது
பிரிட்டனின் தி டைம்ஸ் பத்திரிகை தலையங்கத்தில் பிஃபாவுக்கு “ரெட் கார்ட்” வழங்கியுள்ளதோடு, செப் பிளாட்டர் உலகக் கால்பந்து விளையாட்தின் மரியாதையைக் கெடுத்து விட்டார். அவர் ராஜினாமா செய்து பெரிய மாற்றங்களுக்கு வழிவிட வேண்டும் என்று கூறியுள்ளது.
தி கார்டியன் இதழ், “ஊழலின் துர்நாற்றம்” என்று சாட, சன் டாப்லாய்ட் “செப்டிக் பிளாட்டர்” என்று வர்ணித்து “அழகான கால்பந்தாட்டத்தின் இருதயத்தில் புற்று நோயை வளர்த்திருக்கிறார் பிளாட்டர்” என்று சாடியுள்ளது. மேலும் சன் பத்திரிகை 2018 உலகக் கோப்பையை பிரிட்டனுக்கு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த தி பில்ட் என்ற இதழ் ‘கெட் அவுட் பிளாட்டர்’ என்று கொதித்துப் போயுள்ளது.
மேலும் இந்தப் பத்திரிகையில் பிளாட்டருக்கு இதில் தொடர்பில்லாவிட்டாலும், இதனை வளர்த்து விட்டதன் மூலம் அவர் தனது அதிகாரத்தை தக்க வைத்துள்ளார் என்று கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
கால்பந்து வெறி பிடித்த நாடான இத்தாலியின் லா ரிபப்ளிகா பத்திரிகை, “பிளாட்டரின் பிஃபாவை பூகம்பம் ஒன்று சாய்த்துள்ளது. இது அதிகாரபூர்வமானது: உலக் கால்பந்து உலக திருடர்களின் கூட்டணியாகிவிட்டது என்று ஆவேசக் கூச்சலிட்டுள்ளது.
பிளாட்டருக்கும் பிஃபாவுக்கும் எதிராக பல ஊடகங்களும் கொதிப்படைந்தாலும், ரஷ்ய அரசு இதழில், “பிஃபாவை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பார்க்கிறது. ஒரு சர்வதேச விளையாட்டு அமைப்பாக பிஃபா சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளது. மேலும் 2018 உலகக் கோப்பையை ரஷ்யாவுக்கு வழங்கியதை தடுக்க அமெரிக்க செனேட்டர்கள் செய்த முயற்சி பலிக்கவில்லை என்றும் இதனால் பிஃபா மீது கரி பூசப்படுகிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago