மும்பை நிர்ணயித்த 184 ரன்கள் இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு, ஸ்மித் - மெக்கல்லம் இணை, இந்த ஐபிஎல் இதுவரை காணாத அதிரடி துவக்கத்தைத் தந்தனர். முதல் ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டும் வர அடுத்த 5 ஓவர்களில் 84 ரன்கள் அதிவிரைவில் சேர்ந்தன. மும்பை பந்துவீச்சாளர்களின் பந்தை வலைப் பயிற்சியில் ஆடுவது போல எதிர்கொண்ட மெக்கல்லம், ஸ்மித் ஜோடி, முதல் 7 ஓவர்கள் வரை சராசரியாக ஒரு ஓவருக்கு 15 ரன்களுக்கு குறையாமல் குவித்தன.
மெக்கல்லம் 20 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸரோடு 46 ரன்களும், ஸ்மித் 30 பந்துகளில் 8 பவுண்டரி 6 சிக்ஸர்களோடு 62 ரன்களும் சேர்த்தனர்.
8-வது ஓவரை வீசிய ஹர்பஜன் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தார். ஆனால் அந்த சூழலில் சென்னை அணி வெற்றிப் பாதையில் பாதுகாப்பான பயணத்தில் இருந்தது. தொடர்ந்து வந்து டூ ப்ளெஸ்ஸி 11 ரன்கள், தோனி 3 ரன்கள் என ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் இருந்த ரெய்னா பொறுப்பாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். தேவையான ரன்களும் ஒரு ஓவருக்கு சராசரி 6 -க்கு குறைவாகவே இருந்ததால், விக்கெட் இழப்பு சென்னை அணியை பாதிக்கவில்லை.
இறுதியில் 16-வது ஓவரின் 4-வது பந்தை பிராவோ சிக்ஸருக்கு விளாச, சென்னை அணி 184 ரன்கள் இலக்கை 20 பந்துகள் மீதம் வைத்து வென்றது. சிறப்பாக பந்துவீசிய சென்னையின் ஆஷிஷ் நேஹ்ரா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக டாஸ் வென்ற மும்பை பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. முதல் ஓவரிலேயே படேல் ஆட்டமிழக்க, ஆண்டர்சன் 3-வது ஓவரில் 4 ரன்களுக்கு வீழ்ந்தார். இரண்டு விக்கெட்டுகளையுமே தனது துல்லியமான பந்துவீச்சால் நேஹ்ரா கைப்பற்றினார். தொடர்ந்து சிம்மன்ஸும் ஆட்டமிழக்க, அதிரடி ரன் சேர்க்க ஹர்பஜன் களமிறக்கப்பட்டார். 24 ரன்களை 21 பந்துகளில் சேர்த்தாலும் ஹர்பஜனின் அதிரடி நீடிக்கவில்லை.
10 ஓவர்களில் 62 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற நிலையில் பொல்லார்ட், ரோஹித் சர்மா இருவரும் மும்பையை சரிவிலிருந்து மீட்டனர்.
இருவரும் பார்ட்னர்ஷிப்பில் 75 ரன்களை சேர்த்தனர் (33 பந்துகள்). குறிப்பாக ரவீந்திர ஜடேஜா வீசிய 14-வது ஓவரில் 3 சிக்ஸர்கள் உட்பட 26 ரன்களை பொல்லார்ட் குவித்தார். ரோஹித் சர்மா 30 பந்துகளில் அரை சதம் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஆடவந்த ராயுடு, பொல்லார்டுக்கு ஈடு கொடுக்க, மும்பை அணி 20 ஓவர்களில் 183 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்தது.
ராயுடு 16 பந்துகளில் 29 ரன்களும், பொல்லார்ட் 30 பந்துகளில் 64 ரன்களையும் எடுத்து 20-வது ஓவரில் ஆட்டமிழந்தனர்.