மும்பை இந்தியன்ஸ் மோசமான பீல்டிங்: கொல்கத்தா வெற்றி

By செய்திப்பிரிவு

ஐபிஎல் கிரிக்கெட் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மும்பை அணி முதலில் பேட் செய்து ரோஹித் சர்மா (98), கோரி ஆண்டர்சன் (55) ஆகியோரின் அதிரடியுடனும், கொல்கத்தா விட்ட 3 கேட்ச்களுடனும் 37/3 என்ற நிலையிலிருந்து 168 ரன்களை எடுக்க, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் விட்ட கேட்ச்களின் கைங்கர்யத்துடன் 170/3 என்று முதல் வெற்றியை ருசித்தது.

உலகக்கோப்பை போட்டிகளில் சிறிய அணிகள் என்று அழைக்கப்படும் அணிகள் நல்ல திறமைகளை பீல்டிங்கிலும் வெளிப்படுத்தின. நெருக்கடியில் சோடை போயின. இது சகஜம். ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் ஒரு பொழுதுபோக்கு கிரிக்கெட், இதில் நெருக்கடிகள் இல்லை. இருப்பினும் கேட்ச்கள் கோட்டை விடப்படுகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட்டின் தரநிலை பற்றி உலக அரங்கில் எதிர்மறை விமர்சனங்கள் எழுவது இதனாலேயே. மும்பை அணியின் பந்துவீச்சில் ஒன்றுமேயில்லை. மோசமான பீல்டிங். இதனால் கொல்கத்தா சுலபத்தில் வெற்றி பெற்றது. உலகக்கோப்பையில் ஆக்ரோஷம் காண்பித்த உமேஷ் யாதவ் ரொம்பவும் ஜெண்டிலாக வீசினார். எல்லோருமே ஜெண்டிலாக வீசினர். மோர்னி மோர்கெல் மட்டுமே உண்மையான கிரிக்கெட் வீர்ர் போல் வீசினார். மற்றவர்களெல்லாம் ஏதோ ஜாலி கிரிக்கெட் என்பது போல் வீசுகின்றனர்.

சுனில் நரைன் திருத்தப்பட்ட பந்துவீச்சிலும் நன்றாக வீசினார். அவரது 4 ஓவர்கள் 28 ரன்களே வந்தது. 14 ஓவர்களில் மும்பை 80/3 என்று இருக்க இவரது பந்துவீச்சு ஒரு காரணம். கடைசி 6 ஓவர்களில் மீண்டும் ஜெண்டில்மேன் பந்து வீச்சு தொடர 88 ரன்களை விளாசினர் ரோஹித் சர்மாவும், கோரி ஆண்டர்சனும்.

மும்பை 168/3 என்று சவாலான இலக்கை நிர்ணயித்தது.

ஆனால் கொல்கத்தா களமிறங்கியவுடன், கவுதம் கம்பீர் 1 ரன்னில் இருந்த போது மும்பை வீரர் ஆதித்ய தாரே கேட்சை கோட்டைவிட்டார்.

உத்தப்பாவுக்கும் கேட்ச் விடப்பட்டது. ஆனால் உத்தப்பா ஆண்டர்சன் வீசிய கால்திசை பந்தை மிக அருமையாக பிளிக் செய்து சிக்ஸ் அடித்தார். ஆனால் அவர் நீடிக்கவில்லை. அதே ஓவரில் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளரின் குறுக்காகச் செல்லும் பந்தை தொட்டார் கெட்டார்.

மணிஷ் பாண்டே, ஹர்பஜன் பந்தை தூக்கி அடிக்க ஆண்டர்சன் அதனை தவறாகக் கணித்து கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டார். முன்னதாக பாண்டே, ஆண்டர்சன் பந்து ஒன்றை லெசாக மண்டி போட்டு பவுலர் தலைக்கு மேல் அடித்த சிக்ஸர் டிவிலியர்ஸை நினைவு படுத்திய ஷாட். பிராக்யன் ஓஜாவை கம்பீர் மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடித்தார். ஹர்பஜன் சிங்கின் ஜெண்டில் பந்துவீச்சை கம்பீர் தண்டித்தார். முதல் ஓவரிலேயே 13 ரன்கள். ஓஜாவை பாண்டே ஒரு சிக்ஸ் அடித்தார் கொல்கத்தா 9 ஓவர்களில் 74/1.

அப்போது ஹர்பஜன் பந்துவீச்சில் ஆண்டர்சன், பாண்டேயிற்கு கேட்ச் விட்டார். 11-வது ஓவரில் மலிங்கா வந்தார். மோசமான புல்டாஸ் ஒன்றை வீச பாண்டே அதனை டீப் ஸ்கொயர் லெக் திசைக்கு சிக்ஸ் அடித்தார். பாண்டே பிறகு 24 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 40 ரன்கள் எடுத்து ஹர்பஜனிடம் அவுட் ஆனார்.

சூர்யகுமார் யாதவ் இறங்கியவுடன் வினய் குமார் பந்தை சிக்ஸ் அடித்தார். ஹர்பஜன் சிங் அடுத்த ஓவரை வீச அவரிடமே வந்த ஒரு கடினமான கேட்சை கோட்டை விட பந்து பவுண்டரிக்குச் சென்றது கம்பீர் அரைசதம் எடுத்தார். கம்பீர் 43 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் அவுட் ஆனார்.

சூர்யகுமார் யாதவ், ஒன்றுமேயில்லாத மும்பை பந்து வீச்சில் 5 சிக்சர்களுடன் 20 பந்துகளில் 46 ரன்களை விளாசினார். யூசுப் பதான் 1 பவுண்டரி ஒரு சிக்சருடன் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 18.3 ஓவர்களில் சம்பிரதாயங்கள் முடிந்தன.

கிரிக்கெட் ஆட்டத்தின் பொழுதுபோக்கு அம்சமே அது விளையாடப்படும் சவாலான தன்மையினால்தான். எந்த ஒரு காட்சிப் போட்டியையும் ரசிகர்கள் விரும்புவதில்லை. ஐபிஎல் கிரிக்கெட் வெறும் காட்சி போட்டியாக மாறி வருகிறதோ என்ற சந்தேகம் நேற்றைய போட்டி மூலம் வலுக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்