மாயங்க் அகர்வாலின் அபார தடுப்பினால் டெல்லி அணி வெற்றி

By செய்திப்பிரிவு

விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணியை டெல்லி டேர் டெவில்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த டெல்லி டேர் டெவில்ஸ் அணி சீரற்ற பிட்சில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.

கடைசி ஓவர்: மாயங்க் அகர்வாலின் அபார தடுப்பும் கூல்ட்டர் நைலின் துல்லியப் பந்துவீச்சும்

சன் ரைசர்ஸ் விரட்டலின் போது 19-வது ஓவர் முடிவில் 158/6 என்று இருந்தது. 6 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை.

கிரீஸில் ஆஷிஷ் ரெட்டி, கரண் சர்மா ஆகியோர் உள்ளனர். டெல்லியின் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் கூல்ட்டர் நைல் வீசினார். வைடாக யார்க்கர் லெந்த்தில் வீச அடிக்கும் வாய்ப்பு குறைவானது. முதல் பந்தில் 1 ரன் மட்டுமே தேர்ட் மேன் திசையில் வந்தது.

2-வது பந்தை ஆஷிஷ் ரெட்டி எதிர்கொண்டார். மீண்டும் வைடு யார்க்கர், பந்து சிக்கவில்லை. கரண் சர்மா, ரன்னர் முனையிலிருந்து 1 ரன்னை ‘பை’ முறையில் எடுத்து ஸ்ட்ரைக்கை தன் வசம் கொண்டு வர நினைத்து ஓடினார். ஆனால் ரெட்டி தாமதமாக வினையாற்றியதால் கீப்பர் நேராக பவுலருக்கு அடிக்க கூல்ட்டர் நைல் ஸ்டம்பில் அடிக்க ஆஷிஷ் ரெட்டி ரன் அவுட் ஆனார்.

3-வது பந்தை கரண் சர்மா ஓங்கி அடிக்க லாங் ஆஃபில் 1 ரன் மட்டுமே கிடைத்தது. 3 பந்துகளில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் பிரவீண் குமாருக்கு மீண்டும் வைடு ஆஃப் ஸ்டம்பில் வீச கவர் திசையில் 1 ரன் மட்டுமே வந்தது.

5-வது பந்துதான் அந்த அருமையான தடுப்பை நிகழ்த்தினார் மாயங்க் அகர்வால், 5-வது பந்தை கூல்ட்டர் நைல் சற்றே லெந்த்தில் வீச கரண் சர்மா அதை ஸ்லைஸ் செய்தார் பந்து பாயிண்ட் திசையில் பவுண்டரிக்கு மேலாக சென்று கொண்டிருந்தது. மாயங்க் அகர்வால் அதனை சிறப்பாகக் கணித்து பதற்றமடையாமல் எல்லைக்கோட்டு கயிற்றுக்கு அருகில் சென்று நன்றாக எழும்பி பந்தை மைதானத்துக்குள் தட்டி விட்டார். 2 ரன்கள் ஆனது. மிக அருமையான பீல்டிங், ஆட்டத்தை வெற்றி பெறச் செய்த பீல்டிங்.

கடைசி பந்தும் வைட் ஆஃப் திசை பந்தாக அமைய கரண் சர்மா அதனை அடிக்க பந்து சரியாக சிக்காமல் லாங் ஆஃபில் மேத்யூஸ் வசம் கேட்ச் ஆனது. அந்த ஓவரில் 6 ரன்களே வந்தது. 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி டேர் டெவில்ஸ். அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சுரேஷ் ரெய்னா இதே போன்ற ஒரு பீல்டிங்கைச் செய்தது நினைவுகூரத் தக்கது.

பந்துவீச்சில் டுமினி அருமையாக வீசி 3 ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்து வார்னர், தவன், பொபாரா, மோர்கன் ஆகிய அதிரடி வீரர்களை பெவிலியனுக்கு அனுப்பி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் பேட்டிங்கில் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 54 ரன்களை எடுத்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார் டெல்லி கேப்டன் ஜே.பி.டுமினி.

ஸ்ரேயஸ் ஐயர்-டுமினி அபார அரைசதம்:

டெல்லி அணி முதலில் பேட் செய்ய களமிறங்கிய போது அதிரடி வீரர் மாயங்க் அகர்வால் 1 ரன்னில் புவனேஷ் குமாரிடம் அவுட் ஆகி வெளியேறினார்.

அதன் பிறகு ஸ்ரேயஸ் ஐயர், டுமினி இணைந்து 9 ஓவர்களில் 78 ரன்களை விளாசினர். இன்று சன் ரைசர்ஸ் அணியில் டேல் ஸ்டெய்ன் விளையாடினார். டுமினி விக்கெட்டை வீழ்த்தினார்.

ஸ்ரேயஸ் ஐயர் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 60 ரன்கள் விளாசினார். கடைசியில் பிரவீன் குமாரிடம் ஆட்டமிழந்தார். டுமினி 54 ரன்களில் ஆட்டமிழக்க யுவராஜ் சிங் 9 ரன்களில் ஆஷிஷ் ரெட்டி பந்தை சிக்சருக்கு தூக்கி அடிக்க பவுண்டரி அருகே வார்னர் அதனை எம்பிப் பிடித்தார். அது சிக்சருக்குப் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அபாரமாக பிடித்ததால் யுவராஜ் ஆட்டமிழந்தார்.

கடைசியில் மேத்யூஸ் 15 ரன்களையும், கேதர் ஜாதவ் 19 ரன்களையும் எடுக்க டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.

புவனேஷ் குமார் சிக்கனமாக வீசி 4 ஓவர்களில் 21 ரன்களை கொடுத்து அபாய வீரர் மாயங்க் அகர்வாலை வீழ்த்தினார்.

டுமினி அபாரப் பந்துவீச்சில் வீழ்ந்தது சன் ரைசர்ஸ்:

தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணி வார்னர், தவன் மூலம் 6 ஓவர்களில் 50 ரன்கள் என்ற விரைவு கதி தொடக்கம் கண்டது. ஆனால் டுமினி வீசிய 7-வது ஓவர் திருப்பு முனையாக அமைந்தது. 18 ரன்களில் இருந்த தவன், டுமினி பந்தை தவறாகக் கணித்து பவுல்டு ஆனார்.

அதே ஓவரில் 3-வது பந்தில் வார்ன்ரையும் வீழ்த்தினார் டுமினி. வார்னர் 20 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து அபாயகரமாக ஆடிவந்த போது பந்து ஒன்று சற்றே நின்று வர, மிட்விக்கெட்டில் ஆட நினைத்த வார்னரின் மட்டை முன் விளிம்பில் பட்டு டுமினியிடமே கேட்ச் ஆனது.

இந்திய டெஸ்ட் தொடக்க வீரர் கே.எல்.ராகுல், 2 சிக்சர்களுடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் மேத்யூஸ் பந்தை கொஞ்சம் அதிகமாக ஒதுங்கிக் கொண்டு லெக் திசையில் ஆட முயல, பந்து சிக்கவில்லை நேராக லெக் ஸ்டம்ப் காலியானது. 89/3. நமன் ஓஜாவை 12 ரன்களில் இம்ரான் தாஹிர் வீழ்த்தினார்.

ரவி பொபாரா 30 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் நம்பிககை அளித்த நிலையில் 17-வது ஓவரில் ஸ்கோர் 128 ஆக இருக்கும் போது டுமினியின் 3-வது விக்கெட்டாகச் சாய்ந்தார். அதே ஓவரில் டுமினி, இயன் மோர்கனையும் வீழ்த்தினார். 17-வது ஓவர் முடிவில் 129/6.

ஆனால் அடுத்த 14 பந்துகளில் ஆஷிஷ் ரெட்டி, கரன் சர்மா இணைந்து 30 ரன்களை விளாசினர். கரன் சர்மா 2 அபாரமான சிக்சர்களை அடித்தார். ஸ்கோர் 159 ரன்களை எட்டிய போது 4 பந்துகளில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில்தான் 5-வது பந்தை மாயங்க் அகர்வால் சமயோசிதமாக, அற்புதமாக தடுத்து 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுக்க, சன் ரைசர்ஸ் அணி தோல்வி தழுவியது.

டெல்லி அணியில் டுமினி 4 விக்கெட்டுகளைத் தவிர கூல்ட்டர் நைல் 4 ஓவர்களில் 26 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றி சிக்கனம் காட்டினார். யுவராஜ் பேட்டிங்கில் 9 ரன்கள் எடுத்து சொதப்ப, பந்து வீச்சில் ஒரே ஓவரில் 10 ரன்களைக் கொடுத்து மேலும் மோசமானார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 mins ago

விளையாட்டு

20 mins ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்