பாகிஸ்தான் அணியை ஒருநாள் தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் முதன்முதலாக வென்று புதிய சாதனை படைத்தது வங்கதேசம். 3-வது போட்டியிலும் பாகிஸ்தானை ஊதித் தள்ளியது வங்கதேசம்.
மிர்பூரில் நேற்று நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் தனது கடைசி 8 விக்கெட்டுகளை 47 ரன்களில் இழந்து 49 ஓவர்களில் 250 ரன்களை எடுத்தது. தொடர்ந்து ஆடிய வங்கதேசம் சவுமியா சர்க்காரின் அனாயாச 127 நாட் அவுட்டினால் 39.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று தொடர் முழுதிலும் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணியை முற்றொழிப்பு செய்தது.
சவுமியா சர்க்கார் 110 பந்துகளில் 10 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 127 ரன்களை அடித்து நொறுக்கினார். தமிம் இக்பால் தொடர்ச்சியான 3-வது சதத்துக்காக ஆடி வந்தபோது 64 ரன்களில் ஜுனைத் கானிடம் எல்.பி.ஆனார். மஹமுதுல்லாவுக்கு இது ஒரு மோசமான தொடராக அமைந்தது. அவர் 4 ரன்களில் ஜுனைத் கான் பந்தில் பவுல்டு ஆனார். மீண்டும் முஷ்பிகுர் ரஹிம் களமிறங்கி 43 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஆட்ட நாயகனாக சவுமியா சர்க்காரும், தொடர் நாயகனாக தமிம் இக்பாலும் தேர்வு செய்யப்பட்டனர்.
பாகிஸ்தான் அணியில் கேப்டன்/தொடக்க வீரர் அசார் அலி 112 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்தார். 5 ஆண்டுகளில் பாகிஸ்தான் கேப்டன் ஒருவர் ஒருநாள் போட்டியில் எடுக்கும் முதல் சதம் ஆகும் இது. இவர் ஆட்டமிழந்ததுதான் திருப்பு முனையாக அமைந்தது.
அசார் அலி-சமி ஆலம் ஜோடி 91 ரன்களையும், ஹாரிஸ் சோஹைலுடன் அசார் அலி இணைந்து 98 ரன்களையும் எடுக்க 39-வது ஓவரில் 203/2 என்று வலுவான நிலையில் இருந்தது பாகிஸ்தான். அறிமுக இடது கை வீரர் அஸ்லம் கவர் டிரைவ்களை லாவகமாக ஆடுகிறார். அதே போல் ஷார்ட் பிட்ச் என்றால் உடனடியாக புல் ஆடி விடுகிறார். 19-வயதான இவர் முதல் போட்டியில் 45 ரன்களை எடுத்தார். ஹாரிஸ் சோஹைல் ஸ்பின்னர்களை அடித்த 2 சிக்சர்கள் அற்புதம், இவர் 58 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 52 ரன்கள் எடுத்தார்.
அசார் அலி ஷார்ட் பிட்ச் பந்துகளை பவுண்டரி விளாசியதோடு, தேர்ட்மேன், பாயிண்ட் திசையில் பலமாகத் திகழ்ந்தார். சலீம் மாலிக் போல் சிங்கிள் எடுத்து ரன் விகிதத்தை நல்ல உயிர்ப்புடன் வைத்திருந்தார் அசார் அலி. சதம் அடித்த பிறகு ஷாகிப் அல் ஹசனின் உள்ளே திரும்பிய பந்தை கட் செய்ய முயன்றார், சிக்கவில்லை. ஆஃப் ஸ்டம்ப் தொந்தரவு ஆனது. ஒரு ஓவர் கழித்து மஷரபே பந்தை சுழற்றி ஹாரிஸ் சோஹைலும் வெளியேறினார். இந்த விக்கெட்டுகள் போலவே பவாத் ஆலம், ரிஸ்வான், வஹாப் ரியாஸ் ஆகியோரும் ஏன் அப்படி அவுட் ஆனார்கள் என்பதை விளக்க பாகிஸ்தான் வீர்ர்களின் உளவியல் தெரிந்த நிபுணர்களால் மட்டுமே முடியும். 47 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்களில் முடிந்தது. மோர்டசா, ரூபல் ஹுசைன் அராபத் சன்னி, ஷாகிப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
250 ரன்களை வெற்றிகரமாகத் தடுக்க நேற்று அஜ்மல் இல்லை. அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் தமிம் இக்பால், சவுமியா சர்க்கார் முதல் விக்கெட்டுக்காக 145 ரன்களைச் சேர்க்க அங்கேயே பாகிஸ்தான் கதை முடிந்தது. தமிம் கவனத்துடன் ஆட சவுமியா சர்க்கார் 35 பந்துகளில் 33 ரன்களை எட்டினார். மொகமது ஹபீஸ் ஒரு ஓவரில் சர்க்காரின் எட்ஜைப் பிடிக்க, விக்கெட் கீப்பர் ரிஸ்வானோ பிடியை விட்டார்.
மீண்டும் 52 ரன்களில் சர்க்கார் இருந்த போது இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுல்பிகர் பாபர் பந்தில் கிடைத்த கேட்ச் வாய்ப்பை அஸ்லம் கோட்டைவிட்டார்.
கேட்ச் விட்டதும் சுதாரித்த சர்க்கார், தமிம் அடுத்த ஹபீஸ் ஓவரில் இரண்டு சிக்சர்களை விளாசினார். ஜுனைத் கானை மேலேறி வந்து நேராக ஒரு சிக்சர் அடித்தார் சர்க்கார். ஒரு நேரத்துக்குப் பிறகு சர்க்கார் பவுலர்களை மதிக்காமல் ஆடினார். 13 பவுண்டரிகள் 6 சிக்சர்களை அவர் விளாசினார். மீண்டும் அணியில் வந்த உமர் குல் 7 ஓவர்களில் 53 ரன்கள் என்று சாத்து வாங்கினார். ஜுனைத் கான் 7 ஓவர்களில் 67 ரன்கள் என்று விளாசப்பட்டார். வஹாப் ரியாஸ் 6 ஓவர்களில் 30 ரன்கள்.
வங்கதேசம் முதல் முறையாக பாகிஸ்தானை 3-0 என்று வீழ்த்தியது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
47 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago