சுழற்பந்து வீச்சு இந்திய அணிக்கு பெரிய அனுகூலம்: இயன் சாப்பல்

By பிடிஐ

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய சுழற்பந்து வீச்சு இந்திய அணிக்கு பெரிய அனுகூலமாக திகழும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி சானல் ஒன்றில் இயன் சாப்பல் தெரிவிக்கும் போது, “சிட்னி பிட்சில் எப்போதும் பந்துகள் திரும்பும். இலங்கை-தென் ஆப்பிரிக்கா போட்டியின் போது பந்துகள் அவ்வளவாகத் திரும்பாதது பற்றி அனைவரும் பேசினர். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் வீசியது மெதுவாக வீசும் பவுலர்களேயன்றி ஸ்பின்னர்கள் அல்லர்.

ஆனால், அஸ்வின் பந்தில் விஷயத்தை வைத்திருப்பவர். நிச்சயம் அவர் சிட்னி ஆட்டக்களத்திலிருந்து சுழற்பந்துக்கான அனுகூலங்களை பெறுவார்.

மேலும் இந்திய அணியில் ஒரு உயர் தர இடது கை சுழற்பந்து வீச்சாளர் இருந்தால் ஆஸ்திரேலியா நிச்சயம் பிரச்சினைகளைச் சந்திக்கும். ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் எப்போதும் உயர்தர இடது கை சுழற்பந்துகளில் கடும் பிரச்சினைகளைச் சந்தித்துள்ளனர்.

சுழற்பந்துவீச்சு இந்திய அணியின் மிகப்பெரிய பலம். வேகப்பந்து ஆட்டக்களமாக இருந்தால் ஆஸ்திரேலியாவுக்கு அனுகூலம். இம்முறை இரு அணிகளுக்குமான வெற்றி வாய்ப்பை சமபகுதியாகவே நான் பிரிக்கிறேன்” என்றார்.

இதே நிகழ்ச்சியில் பிரையன் லாரா, இந்திய-ஆஸ்திரேலிய மோதல் பற்றி கூறும் போது, “வேகப்பந்து ஆட்டக்களங்களில் ஆஸ்திரேலியாவுக்கு அனுகூலங்கள் அதிகம் என்பதை ஒப்புக் கொள்கிறேன், ஆனால் இந்திய வேகப்பந்து வீச்சையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஷமி, யாதவ், மோஹித் சர்மா ஆகியோருடன் இந்திய அணி ஒவ்வொரு அணியையும் முழுதும் ஆட்டமிழக்கச் செய்துள்ளது.

இயன் சாப்பல் கூறுவது போல் ஆட்டம் இருதரப்புக்கும் சரிசம வாய்ப்பையே கொண்டுள்ளது.

ஆனால், முதல் முறையாக இந்தத் தொடரில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை உறுதியாகக் கூற முடியாத சூழல் உள்ளது.

பிட்ச் ஒரு முக்கியமான விஷயம். நான் கேப்டனாக இருந்தால் மைதானத்தில் இறங்கும் வரை முன் கூட்டியே தீர்மானம் எடுக்க மாட்டேன். அனைத்து பிரிவுகளிலும் இரு அணிகளும் நன்றாகத் திகழகின்றன. ஸ்பின்னைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு கூடுதல் அனுகூலம். ஆஸ்திரேலியாவோ வேகப்பந்துவீச்சின் மீது நம்பிக்கை வைத்துள்ள அணி.” இவ்வாறு கூறினார் பிரையன் லாரா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE