உலகக்கோப்பை காலிறிதிப் போட்டிகள் ஓரளவுக்கு எதிர்பார்த்த முடிவுகளையே அளித்துள்ள நிலையில் அரையிறுதி மீது தற்போது கவனக்குவிப்பு அதிகரித்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் கடைசி காலிறுதிப் போட்டியில் எதிர்பார்த்தபடியே நியூசிலாந்து அணி மே.இ.தீவுகளை வீழ்த்தியது. அதுவும் மார்டின் கப்தில் தனிவீரராக மே.இ.தீவுகள் பந்துவீச்சை எட்டு திக்குகளுக்கும் சிதற அடித்தார்.
காலிறுதிப் போட்டிகளில் தோல்வி அடைந்த அணிகளில் இலங்கை நீங்கலாக, வங்கதேசம், பாகிஸ்தான், மே.இ.தீவுகள் ஆகிய அணிகளுக்கான தருணங்கள் இருந்தன என்பது கவனிக்கத்தக்கதாக இருந்தாலும், காலிறுதி முடிவுகள் ஓரளவுக்கு எதிர்பார்ப்புகளுக்கு இணங்கவே அமைந்தது. இந்நிலையில் அரையிறுதிப் போட்டிகளின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. காரணம் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவையும், இந்தியா, ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்கிறது. இதில் வெற்றி தோல்விகள் பற்றி அவ்வளவாக கணிப்புகளை வெளியிடுவது கடினமே.
ரன் மழையிலும் ஜொலித்த நியூசி. வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட்:
மொத்தம் 80 ஓவர்களில் 643 ரன்கள் குவிக்கப்பட்டு 16 விக்கெட்டுகள் விழுந்த இந்தப் போட்டியிலும், கிறிஸ் கெய்ல் உட்பட மே.இ.தீவுகள் சிக்சர்கள், பவுண்டரிகளாக விளாசித் தள்ள, வெட்டோரி, சவுதி ஆகியோர் சாத்து வாங்கிக் கொண்டிருக்க இடது கை வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் தனது அனாயசமான ஸ்விங் மற்றும் அபாரமான வேகம் ஆகியவற்றைக் கொண்டு 10 ஓவர்களில் 44 ரன்களூக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது ஒரு மிகப்பெரிய சாதனை. நியாயமாகப் பார்த்தால் அவருக்குத்தான் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். இவர் சார்ல்ஸ், சிம்மன்ஸ், சாமுயெல்ஸ், ராம்தின் ஆகியோரை வரிசையாக வீழ்த்தினார். அதுவும் சாமுயெல்ஸ், ராம்தின்னை ஒரே ஓவரில் வீழ்த்தினார். ஆனால் சாமுயெல்ஸுக்கு வெட்டோரி பவுண்டரியில் பிடித்த கேட்ச் அசாத்தியமானது, அதிர்ச்சிகரமானது.
ஒரு முனையில் கெய்ல் அதிரடியையும் மீறி டிரெண்ட் போல்ட் மே.இ.தீவுகளை தன் அபாரப் பந்துவீச்சினால் 80/4 என்று சரியச் செய்தார்.
மார்டின் கப்தில் 237 நாட் அவுட். மே.இ.தீவுகள் 250 ஆல் அவுட். ஆனால் மார்டின் கப்தில் எதிர்கொண்ட பந்துகள் 163. மே.இ.தீவுகள் ஒட்டுமொத்த அணியும் சந்தித்த பந்துகள் 183. கப்தில் 111 பந்துகளில் 100 அதன் பிறகு 52 பந்துகளில் மேலும் 137 ரன்கள். 35-வது ஓவர் வரை மே.இ.தீவுகள் ஆட்டத்தில் இருந்தது. ஆனால் அவர்கள் செய்த தவறு விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிகளையே மேற்கொள்ளவில்லை என்பதே.
சுலபமான ரன்களை அனுமதித்தனர். மெக்கல்லத்தை எடுத்தாகிவிட்டது இனி கவலையில்லை என்று நினைக்கப் போக மார்டின் கப்தில், கடைசி 15 ஓவர்களில் மெக்கல்லத்தையும் கதிகலங்கச் செய்யும் ஒரு இன்னிங்ஸை ஆடி விட்டார். யார்க்கர்கள் வீசவில்லை. சிறிய மைதானத்துக்கான எந்த வித கட்டுக்கோப்பும் மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர்களிடத்தில் இல்லை. 35 ஓவர்கள் முடிவில் 185/2 என்று இருந்த நியூசிலாந்து அடுத்த 15 ஓவர்களில் 208 ரன்களை விளாசித் தள்ளியது.
2-வது முறையாக கடைசி 15 ஓவர்களில் 200 ரன்களை விட்டுக் கொடுத்திருக்கிறது மே.இ.தீவுகள் என்றே தெரிகிறது. 45-வது ஓவரில் களமிறங்கும் ஒரு வீரர் கூட சதம் எடுக்கலாம் என்று எண்ணத்துடன் மே.இ.தீவுகளுக்கு எதிராக களமிறங்கலாம் என்றே தோன்றுகிறது. கிரிக்கெட் பேட்ஸ்மென்களூக்குச் சாதகமாக சென்றுவிட்டதுதான்; உண்மைதான்; ஆனால் அதனை மே.இ.தீவுகள் பந்துவீச்சு இவ்வளவு கேலிக்கூத்தாக்கி விடும் என்று ஒருவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
மெக்கல்லம் எனும் ‘டீசர்’
டாஸ் வென்ற நியூசிலாந்து ஓரளவுக்கு நல்ல பிட்சில் பேட் செய்ய முடிவெடுத்தது. மெக்கல்லம் என்ற ஒரு அச்சுறுத்தலை அனைத்து அணிகளும் மனதில் நிறுத்தி வைத்துக் கொண்டுள்ளன. அவரை வீழ்த்திவிட்டால் நியூசிலாந்து சப்பையாகிவிடும் என்று தப்புக் கணக்கை அணிகள் போட்டுவிடுகின்றனர்.
ஆனால், அவரது உத்தி ஒரு டீசர். மாட்டினால் எனக்கு மாட்டாவிட்டால் உங்களுக்கு என்ற அவரது அணுகுமுறை மீது எதிரணிகள் அதிக கவனம் செலுத்த வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் அவரை வீழ்த்திவிட்டால் போதும் என்ற மன நிலை தொற்றி விடுகிறது. அதன் விளைவுதான் இன்று மார்டின் கப்தில் விளாசியது, மற்ற போட்டிகளில் கேன் வில்லியம்சன் தொடர்ந்து சிறப்பாக ஆடியது. எனவே தென் ஆப்பிரிக்கா அடுத்து அரையிறுதியில் மெக்கல்லம்மை எதிர்கொள்ளும் போது அவர் ஒரு டீசர் என்ற மன நிலையில் களமிறங்க வேண்டியதுதான். அவரை வீழ்த்துவது மட்டும் போதாது என்று கிரிக்கெட்டின் பிற நுணுக்கங்களில் கவனம் செலுத்துதல் அவசியம்.
அதிக விலை கொடுக்க வேண்டியதாகிப் போன மர்லன் சாமுயெல்ஸ் விட்ட கேட்ச்:
அதிகம் இல்லை ஜெண்டில்மேன்! முதல் ஓவர். பரபரப்பான காலிறுதி ஆட்டம் தொடங்கி முதல் ஓவரில் மார்டின் கப்திலுக்கு மர்லன் சாமுயெல்ஸ் கேட்சை கோட்டைவிட்டார்.
முதல் பந்தே மே.இ.தீவுகளின் ஆமை வேக பீல்டிங் தெரிந்தது. டெய்லர் வீசிய பந்தை கப்தில் மிட் ஆனில் தள்ளி விட பென், ஹோல்டர் பந்தை துரத்தும் முயற்சி கொஞ்சம் கூட இல்லாமல் இருந்தனர். பந்தே நின்றுவிடும் போல் இருந்தது பிறகு உருண்டு பவுண்டரியைத் தொட்டது. முதல் பந்து கூட ஒரு அணி சுறுசுறுப்பாக இயங்கவில்லை என்றால் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவது நியாயமாகாது.
இந்நிலையில் 3-வது பந்து, லெக் ஸ்டம்பில் ஓவர் பிட்சாக விழுந்த பந்து கப்தில் அடித்தார் நேராக ஸ்கொயர்லெக்கில் சாமுயெல்ஸிடம் கேட்ச்சாகச் சென்றது ஆனால் அவரை யாராவது அங்கு எழுப்பியிருக்க வேண்டும், கேட்ச் வரும் என்று எதிர்பார்த்தது போல் தெரியவில்லை. சற்றே தாழ்வாக வந்த எளிதான கேட்சை கோட்டைவிட்டார். கப்தில் அப்போது 4 ரன்கள் பிறகு அதற்கு கொடுக்க வேண்டிய விலை காலிறுதிப் போட்டி மற்றும் கூடுதலாக ஒரு வீரருக்கு மட்டும் 233 ரன்கள். மிக மோசமான தொடக்கம். இப்படியொரு காலிறுதிப் போட்டியில் மந்தமான தொடக்கம் கண்டது மே.இ.தீவுகள்.
அந்த அணி தோல்விக்கு இந்த கேட்ச் ஒன்றையே காரணமாகக் கூறமுடியும் என்ற அளவுக்கு சாமுயெல்ஸின் மோசமான அணுகுமுறை இருந்தது.
மே.இ.தீவுகள் மெக்கல்லத்தை கண்டு எவ்வளவு பயந்தது என்பது அவருக்கு ஓடிப்போய் ஜேசன் ஹோல்டர் பிடித்த கேட்ச் நிரூபித்தது. எனவே கவனம் முழுதும் மெக்கல்லம் என்ற நபர் மீதே இருந்தது. இல்லாவிட்டால் முதல் ஓவரில் ஓட முடியாமல் நின்று கொண்டிருந்த ஹோல்டர் மெக்கல்லமுக்கு வாழ்நாளில் இதை விட்டுவிடக்கூடாது என்ற நினைப்பில் ஓடி கேட்ச் பிடிக்க வேண்டிய தேவை என்ன? ஆகவே மெக்கல்லமின் மீது இருந்த கவனத்தில்தான் இன்றைய நாயகன் கப்திலுக்கு கேட்சை விட்டார் மர்லன் சாமுயெல்ஸ்.
மெக்கல்லம் ஆட்டம் இழந்த பிறகு வில்லியம்சன் சில டெஸ்ட் தர ஷாட்களை ஆடி 5 பவுண்டரிகளை அடித்தார். 33 ரன்களில் இருந்த போது ரஸல் வீசிய மெது பந்தை கெய்லிடம் கேட்ச் கொடுத்தார். மிகவும் எதிர்பாராத அவுட் இது. டெய்லரும், கப்திலும் இணைந்து கொண்டு சென்றனர். 12-வது ஓவரில் பவுண்டரி அடிக்கப்பட்ட பிறகு 19-வது ஓவர் கடைசி பந்து வரை பவுண்டரி இல்லாமல் இருந்தது. இதுதான் மே.இ.தீவுகளின் பிரகாசமான தருணம். டெய்லர் 42 ரன்களை எடுத்தார். திருப்திகரமான இன்னிங்ஸ் என்று கூற முடியாது, ஆனால் பங்களிப்பு செய்தார் என்று கூற வேண்டும்.
கடைசி 10 ஓவர்களில் நியூசி. எடுத்த 153 ரன்கள். இதில் கப்தில் மட்டும் 92 ரன்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் 2-வது சிறந்த கடைசி 10 ஓவர் ரன் குவிப்பாகும்.
தென் ஆப்பிரிக்கா இதே மே.இ.தீவுகளுக்கு எதிராக கடைசி 10 ஓவர்களில் 163 ரன்கள் குவித்ததே ஒருநாள் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. கப்தில் 24 பவுண்டரிகள் 11 சிக்சர்கள். ஒரு சிக்சர் மைதானத்தின் கூரைக்குச் சென்றது. இவர் அடித்த ஷாட்கள் அனைத்தும் முறையான கிரிக்கெட் ஆட்ட ஷாட்கள் என்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். அரைசதம் 64 பந்துகளில், சதம் 111 பந்துகளில், அதன் பிறகு இரட்டைச் சதம் 41 பந்துகளில். எங்கு போட்டாலும் சிக்ஸ், அல்லது பவுண்டரி.
மே.இ.தீவுகள் பீல்டிங் படு மோசம். ஒரு தொழில் நேர்த்தியுள்ள அணியாக அந்த அணி ஆடவில்லை. கடந்த சில உலகக்கோப்பை போட்டிகளில் சில அணிகளை நாம் பார்த்திருக்கிறோம், குறிப்பாக அசோசியேட் அணிகள். கனடா போன்ற அணி இப்படி ஆடும். வெறும் ஒற்றை நபர் பேட்டிங்கை நம்பி களமிறங்கும், அவரும் ரன் அடிப்பார், ஆனால் பந்துவீச்சு, பீல்டிங் படுமோசமாக இருக்கும், அது போன்ற ஒரு அணியாகத்தான் இன்று மே.இ.தீவுகள் இருந்தது.
393 ரன்கள் என்ற இலக்குக்குப் பிறகு மே.இ.தீவுகள் ஆட்டம் கணிக்கக் கூடியதாக மாறிவிட்டது.
சிக்சர்களில் ‘டீல்’ செய்த கிறிஸ் கெய்ல்
ஒரு புறம் டிரெண்ட் போல்ட் பந்துவீச்சில் பொறி பறந்தாலும். கிறிஸ் கெய்ல், சவுதியை தேர்வு செய்தார். முதலில் சற்றே வேகமாக ஒரு மிட்விக்கெட் சிக்ஸ். அடுத்து ஒரு பவுண்டரி. 7வது ஓவர் வெட்டோரி அழைக்கப்பட்டார், இதுவரையிலான வெட்டோரியின் மரியாதை குலைந்தது. ஆன் திசையில் ஸ்வீப் போன்ற ஷாட்களில் 3 சிக்சர்கள். போல்ட் பந்திலும் நேராக ஒரு சிக்ஸ் அடித்தார். இது ஒருமாதிரியான ஷாட். பந்து ஷார்ட் பிட்ச். ஆனாலும் நேராக சிக்ஸ்.
மீண்டும் சவுதி சிக்கினார். பவுன்சரை சிக்ஸ் அடித்தார். அடுத்து லெந்த் பந்தில் நேராக சிக்ஸ். பிறகு மில்ன பந்தில் பைன் லெக் திசையில் பவுண்டரி அடித்து 28 பந்துகளில் 2 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 53 ரன்கள் எடுத்தார் கெய்ல். பிறகு கடைசியாக மில்ன பந்தை மீண்டும் அலட்சியமாக ஒரு சிக்ஸ். ஆனால் மில்ன கடைசியில் தனது ஆக்ரோஷமான அதிவேக பந்தை 150 கிமீ வேகத்தில் வீச, கெய்ல் சுழற்றினார், ஆனால் சிக்கவில்லை. பவுல்டு ஆனார். 16-வது ஓவரில் கெய்ல் அவுட் ஆக மே.இ.தீவுகள் 120/5. கெய்லுக்கு ஒரு அந்தரங்க மகிழ்ச்சி. ரசிகர்களுக்கு குதூகலம். அவ்வளவே.
போல்ட் இதில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஓவருக்கு 8 ரன்களுக்கும் மேல் சென்று கொண்டிருக்கும் ஆட்டத்தில் அவர் 10 ஓவர்களில் 44 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மே.இ.தீவுகளை வீட்டுக்கு அனுப்பினார்.
கடைசியில் ஹோல்டர் மீண்டும் தான் 8 ஓவர்களில் விட்டுக் கொடுத்த 76 ரன்களுக்கு பதிலடியாக 26 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 42 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக வெட்டோரியிடம் அவுட் ஆனார்.
இந்த ரன் விருந்தில் மே.இ.தீவுகளில் டேரன் சமி 8 ஓவர்களில் 38 ரன்கள் என்று சிக்கனம் காட்டினார். நியூசி. அணியில் டிரெண்ட் போல்ட் 44/4 என்று ஆதிக்கம் செலுத்தினார்.
நியூசிலாந்து இதற்கு முன்னர் 6 முறை உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். ஆனால் இந்த முறை ஒரு வித்தியாசம். நியூசிலாந்தும், தென் ஆப்பிரிக்காவும் மோதும் அரையிறுதியில் வெற்றி பெறும் அணி முதல் முறையாக உலகக்கோப்பை இறுதிக்குள் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago