தகர்ந்த நியூஸி.யின் கனவும் 5 முறை சாம்பியனான ஆஸி.யும்!

By ஆர்.முத்துக்குமார்

அருமையான கேப்டன்சி, பந்து வீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் மூலம் 2015 உலகக் கோப்பையை மைக்கேல் கிளார்க் தலைமையில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

நியூஸிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தி உலகக் கோப்பையை 5-வது முறையாக வென்றது.

தனது கடைசி ஒருநாள் போட்டியில் கேப்டன் மைக்கேல் கிளார்க் அருமையான கேப்டன்சி செய்ததோடு, பேட்டிங்கில் 74 ரன்கள் எடுத்து தலைமைத்துவத்துக்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.

1999-ஆம் ஆண்டு, தென் ஆப்பிரிக்கா அரையிறுதியில் கடைசியில் சொதப்பிய பிறகே, பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தானை நசுக்கியது ஆஸ்திரேலியா, அது ஓர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி போலவே இல்லமல் ஆனது.

2003-ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தொடர் வெற்றிகளைப் பெற்று வந்த இந்தியா நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பதிலடி கொடுக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, இந்தியப் பந்து வீச்சை புரட்டி எடுத்து 359 ரன்களைக் குவிக்க, இந்தியா 39 ஓவர்களில் 234 ரன்களுக்குச் சுருண்டது. இதுவும் ஒரு நசுக்கும் வெற்றிதான்.

2007 உலகக் கோப்பை இறுதியிலும் இலங்கையை பந்தாடியது ஆஸ்திரேலியா. தற்போது 2015-ம் ஆண்டு, என்னதான் உலக ரசிகர்கள் பலரும் தங்கள் இருதயபூர்வ ஆதரவை நியூஸிலாந்துக்கு அளித்தாலும், நிச்சயம் சிந்திக்கும் மனம் ஆஸ்திரேலியாதான் வெல்லும் என்று நினைத்திருக்க வாய்ப்புள்ளது.

ஓர் அணியாக திரண்டு தொழில் நேர்த்தியாக இந்தத் தொடர் முழுதும் ஆடியதும், மைக்கேல் கிளார்க்கின் கற்பனை வளம் மிகுந்த கேப்டன்சியும் வீரர்களின் அசாதாரண ஒத்துழைப்பும் ஆஸ்திரேலிய அணியின் உலகக் கோப்பை ஆதிக்கத்தை இன்றும் ஒருமுறை நிறுவியது.

கடைசியில் பார்த்தால் ஆஸ்திரேலியாவுக்கு ஓர் அச்சுறுத்தலைக் கொடுத்தது பாகிஸ்தானே என்று கூற வேண்டியுள்ளது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் லேசாக அன்று அரையிறுதியில் அச்சுறுத்தினர். ஆனால் மீண்டும் மைக்கேல் கிளார்க் ஓர் அருமையான பீல்ட் செட்-அப் செய்ய தவன் ஆட்டமிழக்க, அதன் பிறகு கோலியை ஒன்றுமில்லாமல் செய்து இந்தியாவை எளிதாகவே வீழ்த்தியது என்று கூற வேண்டும்.

மெக்கல்லம் கொஞ்சம் நிதானித்திருக்கலாம்...

மெல்போர்னில் இன்று மெக்கல்லம் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த போது நிச்சயம் குறைந்தது 280 ரன்களையாவது நியூசிலாந்து எடுக்கும் என்றே நினைத்தனர். 280 ரன்கள் என்றால் ஆஸ்திரேலியா திணறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பிட்ச் கடினமாக இருந்தது. ஸ்பின் எடுப்பது கடினம். நல்ல பேட்டிங் விக்கெட், ஆனாலும் கொஞ்சம் கூடுதல் முயற்சி மேற்கொண்டால் பவுலர்களுக்கும் ஆதரவு இருக்கும் பிட்ச். ஓர் ஆஸ்திரேலியத் தன்மை பிட்ச். மெல்போர்னில் மதியம் கொஞ்சம் எப்பவும் ஸ்விங் ஆகும்.

ஆனால்... மிட்செல் ஸ்டார்க் மாற்றி யோசித்தார். மெக்கல்லம் தனது வழக்கமான பாணியைக் கைவிட்டு கொஞ்சம் நிதானித்திருக்கலாம். ஆனால், அவர் பிடிவாதமாக அதிரடி முறையைக் கடைபிடித்தார்.

ஆஸ்திரேலியா எப்படியிருந்தாலும் தனக்கு எதிராக அதிரடி செயல் திட்டத்துடன் இறங்குவார்கள் என்பதை மெக்கல்லம் எதிர்பார்த்திருக்க வேண்டும். இப்படியெல்லாம் அடிக்க வேண்டிய அவசியமேயில்லை. ஏற்கெனவே ஸ்டார்க் பந்தில் பீட்டன் ஆன அவர் அடுத்த பந்தை மேலேறி வந்து அடிக்கப் போனார். பந்து மட்டைக்கும், காலுக்கும் இடையே வேகமாகச் சென்றது.

அடுத்த பந்து பவுன்சராக இருக்கலாம் என்பது போல் 'டீசர்' உருவாக்கினார் கிளார்க். சில 'சும்மா' பீல்டிங் மாற்றம் செய்தார். கிரீஸில் நின்ற மெக்கல்லமுக்கு வந்ததோ 148-149 கிமீ வேக யார்க்கர் லெந்த் பந்து மட்டையை விரைவில் இறக்க முடியவில்லை. முன் காலும் சரியாக குறுக்காக வரவில்லை, ஆஃப் ஸ்டம்ப் பந்து நேராக ஆஃப் ஸ்டம்பைத் தாக்கியது. மைதானத்தில் கலப்பான உணர்வுகள். ஆஸ்திரேலிய ரசிகர்கள் எழுச்சியுற்றனர், மெக்கல்லம் அவுட். இதுதான் வெற்றிக்கான அருமையான தொடக்கமாக அமைந்தது.

மார்டின் கப்டில், ஹேசில்வுட் வீசிய பவுன்சரை டாப் எட்ஜ் செய்து சிக்ஸ் அடித்தார். ஆனால் ஆட்டத்தின் 12-வது ஓவரில் சற்றும் எதிர்பாராமல் கிளென் மேக்ஸ்வெல்லை கொண்டு வந்தார் கிளார்க். இறுக்கமான களவியூகம். சிங்கிளைத் தடுக்கும் களவியூகமும் இருந்தது. ஆனால் அருகில் பீல்டர்கள் இல்லை.

மேக்ஸ்வெல் வீசிய ஆஃப் ஸ்டம்ப் நேர் பந்தை முன்னால் வந்து ஆடாத கப்தில் பின்னால் சென்று ஸ்டம்பை விட்டு ஒதுங்கி கட் செய்ய முயன்றார் பவுல்டு ஆனார்.

வில்லியம்சன் ஒரு முக்கியமான வீரர், ஆனால் அவருக்கு சில அருமையான பந்துகளை மிட்செல் ஜான்சன் வீசினார், அவரை கிளார்க் தனது களவியூகத்தினால் கட்டுப்படுத்தி 33 பந்துகளில் அவரால் 12 ரன்கள்தான் எடுக்க முடிந்தது. கடைசியில் மிட்செல் ஜான்சன் ஒரு இன்ஸ்விங்கரை லெக் அண்ட் மிடிலில் வீச பந்து கொஞ்சம் நின்று வந்தது. பவுன்சும் இருந்தது. நேராக ஜான்சனிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். 39/3.

கிராண்ட் எல்லியட்-ராஸ் டெய்லர் அளித்த நம்பிக்கை

39/3 என்ற நிலையில் அரையிறுதி நாயகன் கிராண்ட் எல்லியட், ராஸ் டெய்லர் இணைந்தனர். 23 ஓவர்களில் 111 ரன்களைச் சேர்த்தனர்.

ஆனாலும் ரன்கள் சுலபமாக வரவில்லை. ஹேசில்வுட், பாக்னர், மேக்ஸ்வெல் என்று அனைவரும் சிக்கனம் காட்டினர். ஆனாலும் இருவரும் இணைந்து 35-வது ஓவர் வரை நிதானமாகக் கொண்டு சென்றனர். 35-வது ஓவர் முடிவில் 150/3 என்று ஒரு அருமையான நிலையில் இருந்த்து. அங்கிருந்து கடைசி 15 ஓவர்களில் குறைந்தது 100 ரன்களை அடித்திருந்தால் கூட ஸ்கோர் 250 என்று ஒரு சவாலை ஏற்படுத்தியிருக்கும்.

அருமையான கேப்டன்சி, பாக்னர் ஏற்படுத்திய திருப்பு முனை:

36-வது ஓவர் பாக்னரைக் கொண்டு வந்தார் கிளார்க், நல்ல களவியூகம். ஆனால் டெய்லரை அவர் வீழ்த்திய பந்து பெரிய பந்துவீச்சல்ல. வைடாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே யார்க்கர் லெந்த்தில் விழுந்த பந்தை நின்ற இடத்திலிருந்து மட்டையை நீட்டி தொட்டார், ஹேடின் அதனை அருமையாக தாழ்வாகப் பிடித்தார்.

அதிரடி வீரர் கோரி ஆண்டர்சன் களமிறங்கி ஒரு பந்தை எதிர்கொண்டு அதே பாக்னர் ஓவரில் அருமையான ஒரு பந்தில் 0-வில் பவுல்டு ஆனார்.

கடைசியாக கிராண்ட் எல்லியட்டுக்கு ஆதரவளிக்க இருந்த விக்கெட் கீப்பர் லூக் ரோன்க்கியை ஸ்டார்க் வீழ்த்தினார். இங்குதான் கிளார்க்கின் கேப்டன்சி நிற்கிறது.

ஸ்டார்க்கைக் கொண்டு வந்து, ஸ்லிப்பில் தானே வந்து நின்றார். ரோன்க்கி அது தெரியாமல் மோசமான ஷார்ட்டை தேர்வு செய்து கிளார்க்கிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். வெட்டோரிக்கு ஜான்சன் வீசிய பந்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை பவுல்டு ஆனார்.

எல்லியட் கடைசியில் ஆளில்லாமல் 83 ரன்களில் அடிக்கப் போய் பாக்னர் பந்தில் ஹேடினிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கடைசி 33 ரன்களில் 7 விக்கெட்டை 10 ஓவர்களில் இழந்த நியூசிலாந்து 45 ஓவர்களில் 183 ரன்களை எடுத்தது.

1983 உலகக் கோப்பை... 183 ரன்கள் சென்டிமென்ட்டை உடைத்த ஆஸ்திரேலியா

1983 உலகக் கோப்பையில் இந்தியா 183 ரன்கள் எடுத்து மே.இ.தீவுகளை வீழ்த்தி சாம்பியன் ஆனது. நியூசிலாந்தும் இன்று அதனை ஆஸ்திரேலியாவுக்குச் செய்யும் என்ற சென்டிமென்ட் நிலவியது.

ஆனால், மிகக் குறைந்த இலக்கைத் தோற்கும் அளவுக்கு ஆஸ்திரேலியா சமீப காலங்களில் பலவீனமான அணியைக் கொண்டிருக்கவில்லை.

மெக்கல்லம் தன்னால் இயன்ற தாக்குதல் முறை களவியூகம் மற்றும் பந்து வீச்சு மாற்றங்களைச் செய்து பார்த்தார்.

ஆனால் ஏரோன் பிஞ்ச் ஆட்டமிழந்த பிறகு வார்னருக்கு சரியாக வீசவில்லை, ஷார்ட் பிட்ச் வீசினர் அவர் அதிரடியாக 45 ரன்களை எடுத்து அவுட் ஆனார்.

கிளார்க் களமிறங்கி தனது கடைசி ஒருநாள் போட்டியில் ஓர் அற்புதமான இன்னிங்ஸை ஆடி 74 ரன்களை எடுத்து கடைசியில் வெற்றிக்கு 9 ரன்கள் இருக்கும் போது ஹென்றி பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார். கிளார்க் அடித்த 10 பவுண்டரிகளில் 2 மட்டும் ரிஸ்க் ஷாட். மற்றபடி அத்தனையும் அழகான பவுண்டரிகள். வெட்டோரியை ஓர் அருமையான லாங் ஆஃப் சிக்ஸ் என்று கேப்டன்சியை முழுமையுடன் நிறைவு செய்தார் கிளார்க்.

இறுதிப் போட்டியில் முதன் முதலாக நுழையும் நியூஸிலாந்து அதற்கான தன்மையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் ஆடியது. இதுவும் இன்னொரு ஆட்டமே என்பது போல் இருந்தது அதன் அணுகுமுறை. அதனால்தான் மெக்கல்லம் தனது ஆட்டத்தை மாற்றிக் கொள்ளாமல் ஆடினார். பெரிய அணிகளை, குறிப்பாக ஆஸ்திரேலியாவை இறுதிப் போட்டிகளில் எதிர்கொள்வது எப்படி என்பதை தற்போதைய அணிகள் சிந்தித்து திட்டமிட வேண்டிய தேவையுள்ளது.

முதல் முறையாக இறுதிக்கு முன்னேறி, கடைசியில் தன் கனவைத் தானே தகர்த்துக் கொண்டாலும்கூட, நியூஸிலாந்துக்கு இது முடிவல்ல... ஆரம்பம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்