நல்ல பந்துவீச்சுக்கு எதிராக மீண்டும் மூச்சுத்திணறி வீழ்ந்த தென்னாப்பிரிக்கா

By இரா.முத்துக்குமார்

ஆக்லாந்தில் நடைபெற்ற மிக முக்கியமான பிரிவு-பி உலகக்கோப்பை லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா மீண்டும் ஒரு நல்ல பந்துவீச்சுக்கு எதிராக பாகிஸ்தானிடம் தோல்வி தழுவியது.

உலகக்கோப்பையை வெல்லும் அணி என்று கூறப்படும் ஒரு பலமான தென்னாப்பிரிக்க அணி, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளிடம் குறிப்பாக நல்ல பந்துவீச்சுக்கு தோல்வி தழுவியுள்ளது.

தோல்விக்குப் பிறகு டிவில்லியர்ஸ் கூறும் போது, “நாங்கள் இன்னமும் இந்தப் பிரிவில் நல்ல நிலையில்தான் இருக்கிறோம். ஆனால் எனக்கு தோற்பது பிடிக்காது. பேட்டிங்கில் நாங்கள் அதிர்ச்சிகரமாக ஆடுகிறோம் என்பதில் ஐயமில்லை. கடந்த சில ஆண்டுகளில் நெருக்கடியிலிருந்து மீண்டு மேல் நிலைக்கு வந்துள்ளோம். இன்னமும் நாங்கள் நல்ல அணிச்சேர்க்கையுடன் உலகக்கோப்பையை நிச்சயம் வெல்வோம் என்றே பலமாக நம்புகிறோம். விளக்கு வெளிச்சத்தில் பேட்டிங் எளிதானதல்ல. இலக்கைத் துரத்துவதற்கு ஏதுவான பிட்ச்தான் இது. வெற்றிபெறாததற்கு எந்த ஒரு காரணத்தையும் கூற முடியாது.” என்றார்.

கேப்டன்சியில் சொதப்பிய டிவில்லியர்ஸ்

“தோற்பது எனக்கு பிடிக்காது” இது டிவில்லியர்ஸ் கூறும் வார்த்தை. ஆனால் அவர் அணிச்சேர்க்கையில் மீண்டும் தவறு செய்தார். பந்துவீச்சு மாற்றங்களிலும் சொதப்பினார். வெர்னன் பிலாண்டரை அணியில் சேர்த்திருந்தால் நிச்சயம் பிட்சில் கொஞ்சம் ஸ்விங் இருந்ததற்கு பாக். பேட்டிங்கை இன்னமும் விரைவிலேயே வீழ்த்தியிருக்க முடியும், ஆனால் அவர் இம்ரான் தாஹிரை அதிகம் நம்பினார். பகுதி நேர பவுலர்களான டுமினியை விரைவில் கொண்டு வந்து தவறு செய்தார். மேலும் தானே பந்து வீச முடிவெடுத்து சொதப்பினார். இம்ரான் தாஹிர் சோபிக்கவில்லை.

முதல் 10 ஓவர்களில் 35 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்று பாகிஸ்தானைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த அவர் கேப்டன்சி முடிவுகளில் செய்த தவறினால் பாகிஸ்தான் ரன் விகிதம் சரமாரியாக அதிகரித்தது. தொடக்கதில் ஷெசாத்துக்கு டேல் ஸ்டெய்ன் பிடித்த கேட்ச் அபாரமானது. ஓடிச் சென்று வலது புறம் பறந்து தாவிப்பிடித்தார்.

யூனிஸ் கான் வேகப்பந்து வீச்சுக்கு குதித்து குதித்து ஆடுபவர். இந்தியாவுக்கு எதிராக குதித்து குதித்தேதான் அவுட் ஆனார். ஆனால் இன்று அவர் இறங்கியவுடன் ஸ்பின்னர்களை கொண்டு வந்து அவரை ரன்கள் எடுக்க அனுமதித்தார். இம்ரான் தாஹிர் வந்தவுடனேயே யூனிஸ் கான் 2 பவுண்டரிகளை விளாசினார். டிவில்லியர்ஸ் ஓவரில் 2 பவுண்டரிகள்.

சர்பராஸ் அகமட் ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராக ஒரு அருமையான பேட்ஸ்மென், இது தெரியாமல் டுமினியை அவர் தொடர்ந்து கொடுக்க 16-வது ஓவரில் சர்பராஸ் அகமட் மேலேறி வந்து ஆன் திசையில் 2 அருமையான சிக்சர்களை விளாசினார். சரி அவ்வள்வுதான் என்று பார்த்தால் சர்பராஸ் மேலும் தைரியமாக டுமினியை இலக்காக்கி இன்னொரு சிக்சரையும் விளாசினார். 10-வது ஓவர் முடிவில் 24 பந்துகளில் 10 ரன்கள் என்று இருந்த சர்பராஸ் அகமட், டிவில்லியர்ஸின் தவறான கேப்டன்சியை நன்றாகப் பயன்படுத்தி 16-வது ஓவர் முடிவில் 46 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் என்று விறுவிறுப்பு காட்டினார்.

10 ஓவர்களில் 35 என்று இருந்த பாகிஸ்தான் 16-வது ஓவர் முடிவில் 90/1 என்று ஆனது. இங்குதான் தென்னாப்பிரிக்கா தனக்கே சூனியம் வைத்துக் கொண்டது தொடங்கியது. சர்பராஸ் அகமட் 49 ரன்களில் ரன் அவுட் ஆனார். ஸ்கொயர் லெக் திசையில் மிக குறுகிய பவுண்டரி அங்கு அடித்துவிட்டு 2வது ரன் எடுக்க முயன்று அவர் மில்லரின் அபாரமான த்ரோவுக்கு இரையானார். இவரைத்தான் உட்கார வைத்து வேடிக்கைப் பார்த்தார் மிஸ்பா.

மீண்டும் ஸ்டெய்ன் கொண்டு வரப்பட்டார். மிஸ்பா உல் ஹக் 7-வது ரன்னை எடுக்கும் போது ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்களை எடுத்தார்.

ஆனால், மீண்டும் டிவில்லியர்ஸுக்கு பந்துவீச்சு ஆசைப் பீடிக்க, வந்தார், மிஸ்பா 2 பவுண்டரிகளை விளாசினார். ஆனால், யூனிஸ் கான் 37 ரன்களில் டிவில்லியர்ஸிடம் விக்கெட்டைக் கொடுத்தது அபத்தம். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்சூத் 8 ரன்களில் கைல் அபாட் பந்தை நேராக பாயிண்டில் கேட்ச்கொடுத்தார். மிஸ்பா 37 ரன்களை 60 பந்துகளில் எடுக்க உமர் அக்மல் 8 ரன்களில் இருக்க பாகிஸ்தான் 35 ஓவர்களில் 167/4. அதாவது 10 ஓவர்களில் 35/1 பிறகு அடுத்த 25 ஓவர்களில் 132 ரன்கள் மேலும் 3 விக்கெட்டுகள், 10-வது ஓவரிலிருந்து 16-வது ஓவர் வரை நடத்திய சாத்துமுறையின் விளைவு அப்படியே தக்கவைக்கப்பட்டது. உமர் அக்மல் 13 ரன்களில் வெளியேறினார். அப்ரீடி 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 22 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மிஸ்பா மீண்டும் ஒரு அரைசதம் எடுத்து 56 ரன்கள் சேர்த்தார்.

மழை குறுக்கிட்டதால் ஓவர்கள் 47-ஆகக் குறைக்கப்பட விக்கெட்டுகள் விழத் தொடங்கின. பாகிஸ்தான் 167/4 என்ற நிலையிலிருந்து 222 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்டெய்ன் 10 ஓவர்களில் 30 ரன்கள்தான் 3 விக்கெட்டுகள். அபாட், மொர்கெல் தலா 2 விக்கெட்டுகள். இம்ரான் தாஹிர், டிவில்லியர்ஸ், டுமினி ஆகியோர் வீசிய 18 ஓவர்களில் 115 ரன்கள். ஸ்டெய்ன், மோர்கெல், அபாட் வீசிய 28.4 ஓவர்களில் வெறும் 100 ரன்கள். இதனால்தான் பிலாண்டர் இருந்திருந்தால் பாகிஸ்தான் இன்னமும் மோசமான ரன்களையே எடுத்திருக்க வாய்ப்பிருந்தது. பாகிஸ்தான் 222 ரன்களுக்குச் சுருண்டது.

திருத்தப்பட்ட இலக்கும் பாகிஸ்தானின் அபார பந்துவீச்சும்:

மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டதால் தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்கு 47 ஓவர்களில் 232 ரன்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது.

குவிண்டன் டி காக் என்பவரின் மோசமான ஃபார்ம் தொடர்கிறது. அவர் ரன் எடுக்காமல் 7 அடி உயர மொகமது இர்பானின் அபாரமான பந்துக்கு விக்கெட் கீப்பர் சர்பாரிசிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன் பிறகு பாகிஸ்தான் பந்துவீச்சு கொஞ்சம் திசையை இழக்க டுபிளெஸ்ஸி மற்றும் ஆம்லா அணியை மீட்டனர். 6-வது ஓவரில் சொஹைல் கான் வீசும் போது ஆம்லா மிக அருமையாக 3 பவுண்டரிகளை அடித்தார். 7-வது ஓவரை மொகமது இர்பான் வீச லெக் திசை பந்தை டுபிளெஸ்ஸி பவுண்டரி அடித்தார். பிறகு அதே ஓவரில் ஆம்லாவுக்கு இரண்டு தவறுகளைச் இர்பான் செய்ய இரண்டும் பவுண்டரிக்குப் பறந்தது. ஒன்று லெக் திசை பந்து, மற்றொன்று ஷாட் பிட்ச்.

முதல் விக்கெட் 0-வில் விழுந்த சுவடு தெரியாமல் 7 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா 51 ரன்கள். அடுத்த ஓவரை இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரஹத் அலி வீச ஒரு பந்து லெக் திசையில் பவுன்சர் மிக எளிதாக புல் ஆடி சிக்சருக்கு விரட்டினார் டுபிளெஸ்ஸி, மீண்டும் ஒரு ஷாட் பிட்ச் பந்து லெக் திசையில் ஒரு பவுண்டரி. பாகிஸ்தான் பந்து வீச்சு மிகவும் கட்டுக்கோப்பை இழந்து வந்த தருணம் இது. இந்த நிலையில்தான் ரஹத் அலி, ஒரு அருமையான பந்தை வீசி டுபிளெஸ்ஸியின் எட்ஜைப் பிடித்தார். 27 ரன்களில் அவர் அவுட் ஆனது திருப்பு முனை ஏற்படுத்தியது.

11-வது ஓவரில் அருமையான இடது கை வீச்சாளர் வஹாப் ரியாஸ் அழைக்கப்பட, 27 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடி வந்த ஆம்லா. கவனம் சிதறிய ஒரு தருணத்தில் ரியாஸ் பந்தை அவர் ஆட பந்து தாழ்வாக விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது. 67/3 என்ற நிலையில் பாகிஸ்தான் பந்துவீச்சு உத்வேகம் பெற்றது.

ரைலி ரூசோவ் இறங்கி ஒரு பவுண்டரி அடித்தார். பிறகு வஹாப் ரியாஸின் அருமையான, துல்லிய ஷாட் பிட்ச் பந்தை சரியாக அடிக்காமல் நேராக டீப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரூசோவ்.

மில்லர் களமிறங்கியவுடன் பாகிஸ்தான் பந்துவீச்சில் நெருப்புப் பொறி பறந்தது. மில்லருக்கு பந்துகளை நேராக ஆடிப் பழக்கமில்லை என்று தெரிந்தது. மட்டை எப்போதும் ஃபைன்லெக் திசையிலிருந்து இறங்கியது. இதனால் அவர் தட்டுத் தடுமாறினார். நிறைய ஷாட் பிட்ச் பந்துகளை அவருக்குப் போட்ட ரஹத் அலி திடீரென ஒரு அருமையான பாதம் பெயர்க்கும் யார்க்கரை வீச, அது பின்னங்காலைத் தாக்க எல்.பி.ஆனார். தேவையில்லாமல் ரிவியூ செய்து ஒரு ரிவியூவையும் காலி செய்தார்.

டுமினி களமிறங்கி 2 பவுண்டரிகள் அடித்து 12 ரன்களில் இருந்த போது மொகமது இர்பான் மீண்டும் பந்து வீச வர, பவுன்சர் வீசினார், ஹூக் ஷாட் ஆடினார், தேவையான உயரம் கிடைக்கவில்லை பந்து நேராக வஹாபிடம் கேட்ச் ஆனது. தெ.ஆ. 103/6. ஓவர்கள் 20 முடிந்திருந்தது.

டிவில்லியர்ஸ் தனிநபர் போராட்டம்: (58 பந்துகளில் 7 பவுண்டரிகள் 5 சிக்சர்களூடன் 77 ரன்கள்)

டேல் ஸ்டெய்ன் களமிறங்க டிவில்லியர்ஸ் ரிஸ்க் எடுக்க ஆரம்பித்தார். இதில் வஹா ரியாஸ் சிக்கினார். முதலில் மிட்விக்கெட்டில் ஒரு அருமையான பவுண்டரி. பிறகு அவர் பாணியில் நகர்ந்து நகர்ந்து ரியாஸின் லைன், லெந்தைக் காலி செய்து இரண்டு லெக் திசை மிகப்பெரிய சிக்சர்கள். 34-வது ரன்னை டிவில்லியர்ஸ் எடுக்கும் போது உலகக்கோப்பை போட்டிகளில் 1000 ரன்கள் இலக்கை எட்டினார்.

அதன் பிறகு டேல் ஸ்டெய்ன் புகுந்தார். மொகமது இர்பான் பந்தை 2 பவுண்டரிகள் அடித்தார். ஆனால் அதே ஓவரில் மிட்விக்கெட்டில் ஆட நினைத்து எட்ஜ் செய்ய கீப்பரிடம் கேட்ச் ஆனது.

ஷாகித் அப்ரீடியை, பிறகு டிவில்லியர்ஸ் மேலேறி வந்து இரண்டு அற்புதமான சிக்சர்களை விளாச ஒரு முனை ஆட்டமாக மாறியது. பாகிஸ்தானுக்கும் வெற்றிக்கும் இடையில் டிவில்லியர்ஸ் சுவராக நின்று கொண்டிருந்தார். 47 பந்துகளில் 56 ரன்கள்.

கைல் அபாட் 12 ரன்கள் எடுத்து ரஹத் அலியின் பந்தில் யூனிஸ் கானின் அற்புதமான கேட்சிற்கு அவுட் ஆனார். 177/8.

டிவில்லியர்ஸ் தொடர்ந்தார். வஹாப் ரியாஸ் வீசிய தாழ்ந்த புல்டாஸை சிக்சர் விளாசி பிறகு எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி.

33-வது ஓவரில் சொஹைல் கானை மீண்டும் ஒரு பவுண்டரி. ஆனால் அதே ஓவரில் தேவையில்லாமல் மேலேறி வந்து மிட் ஆனின் மேல் தூக்கி அடிக்க நினைத்தார், பந்து ஷாட் பிட்ச், எட்ஜ் ஆனது, சர்பராசுக்கு மீண்டும் ஒரு கேட்ச். 201/9 பிறகு 202 ஆல் அவுட்.

ஆட்ட நாயகனாக சர்பராஸ் அகமட் தேர்வு செய்யப்பட்டார். 49 ரன்களுடன் 6 கேட்ச். பாக். தரப்பில், மொகமது இர்பான், வஹாப் ரியாஸ், ரஹத் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

சுருக்கமாகக் கூற வேண்டுமெனில் பிலாண்டரைத் தேர்வு செய்யாமல் இம்ரான் தாஹீரைத் தேர்வு செய்தது, 10-வது ஓவர் முடிந்த பிறகு செய்த கேப்டன்சி தவறுகள் பிறகு பேட்டிங்கில் 7 ஓவர்களில் 51/1 என்ற நிலையிலிருந்து சரிவு கண்டது. இதுதான் தென்னாப்பிரிக்கா மீண்டும் வீழ்ந்த கதை.

தென்னாப்பிரிக்கா பிரிவு -பி-யில் இன்னமும் 2வது இடத்தில் உள்ளது. பாக், தெ.ஆ இரு அணிகளும் 6 புள்ளிகள் என்றாலும் நிகர ரன் விகிதம் தென்னாப்பிரிக்காவுக்கு +ல் உள்ளது. பாக்.கிற்கு மைனஸில் உள்ளது. இந்தப் பிரிவில் 4வது அணியாக அயர்லாந்தா, மே.இ.தீவுகளா என்பதைப் பார்க்க வேண்டும், ஜிம்பாப்வேயையும் ஒதுக்கி விட முடியாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்