பெருந்தன்மையுடன் கோப்பையைத் திருப்பிக் கொடுத்த இந்தியா!

By ஆர்.முத்துக்குமார்

சமீபகால தொடர் தோல்விகள், ஒட்டுமொத்தமாக சீர்குலைந்த ஆட்டத்திறன், பலவீனமான பந்துவீச்சு... இத்தகைய சுமைகளுடன் 2015 உலகக் கோப்பை போட்டிகளைச் சந்தித்தது தோனி தலைமையிலான இந்திய அணி.

லீக் ஆட்டங்களில் தாங்குமா? என்று எழுந்த எள்ளல்களுக்கு தனது எழுச்சியால் பதில் சொல்லி, அரையிறுதி வரை அபாரமாக முன்னேறி, ஆஸ்திரேலியாவை இறுதிக்கு அனுப்பியிருக்கிறது இந்தியா.

இந்த உலகக் கோப்பையில் ஒட்டுமொத்தமாக, இந்திய அணியின் செயல்திறனைப் பார்க்கும்போது, கோப்பையை பெருந்தன்மையுடன் திருப்பிக் கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

அரையிறுதியில் அடைந்த தோல்விகளினால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருக்கலாம். காரணம் போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலிய இந்நாள், முன்னாள் வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாக வார்த்தைகளை அள்ளி வீசினர். அதற்கு பதிலடி கொடுக்கவாவது இந்திய அணி கரியைப் பூச வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அதனால் இது ஒரு ஏமாற்றமே தவிர, வருந்துவதற்கு ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது.

உலகக் கோப்பை போட்டிகளில் 11 தொடர் வெற்றிகளைச் சாதித்துள்ளது தோனி தலைமை இந்திய அணி. இன்று அதிக தீவிரம் காட்டிய சிறந்த ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி தழுவியுள்ளது.

ஆஸ்திரேலிய தீவிரத்துக்கு இணையாக தீவிரம் காட்டாத இந்திய அணி:

பரபரப்பாக தொடங்கிய சிட்னி அரையிறுதியில் டாஸில் மைக்கேல் கிளார்க் வென்றவுடனேயே ஒரு ஆயாசம் எழுந்தது. டாஸில் தோற்றதே, போட்டியில் தோல்வியடைவதற்கான முன் அறிகுறியாக பலராலும் நோக்கப்பட்டது.

பிட்ச் பற்றிய அனைத்து எதிர்பார்ப்பும் உடைந்தது. ஸ்பின்னுக்கு லாயக்கற்ற பிட்ச் இது என்று ஷேன் வார்ன் காலையிலேயே கூறிவிட்டார். மிகவும் கடினமான தரை அது. இதில் பந்துகள் திரும்பாது என்றார் ஷேன் வார்ன். இந்தியாவுக்கு சாதகமான பிட்ச் என்றெல்லாம் கிளப்பிவிட்டு கடைசியில் ஆப்பு வைத்தது ஆஸ்திரேலியா.

ஆனால், தொடக்க ஓவர்களை இந்திய அணி சீராகவே வீசியது. அதுவும் உமேஷ் யாதவ் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை வீச அதனை வார்னர் மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடிக்க, சரி, இன்று சாத்துமுறைதான் நடக்க போகிறது என்று நினைத்த தருணத்தில் அருமையான ஒரு பந்தை பிட்ச் செய்து எழுப்ப புல் ஆட முயன்ற வார்னரின் மட்டையின் விளைம்பில் பட்டு கவர் திசையில் கோலியிடம் தஞ்சமடைந்தது. வார்னர் விக்கெட் மிகப்பெரிய விக்கெட்.

ஒரு முனையில் ஏரோன் பின்ச் தடவிக்கொண்டிருந்தார். இந்நிலையில் வார்னர் விக்கெட் விழுந்தது. தொடக்கத்தில் உமேஷ் வீசிய பந்து 148 கிமீ வேகம் வர பிஞ்சை அந்தப் பந்து ‘ஸ்கொயர்’ ஆக்கியது, எட்ஜ் நேராக கல்லி வழியாகச் சென்றது. தோனி, கல்லியில் ஆளை நிறுத்தியிருந்தால் அது கேட்ச் ஆகியிருக்கும்.

ஃபிஞ்ச், ஸ்மித் ஜோடி சேர இந்தியா தனது தீவிரத்தை அதிகப்படுத்தவில்லை. ஸ்மித்துக்கு சோதனைகள் கொடுக்கவில்லை. இதனால் அவர் உடனேயே உமேஷ் யாதவ் வீசிய 10-வது ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார்.

மொகமது ஷமி, மோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பந்துவீச்சு ஏமாற்றமளிக்க அந்த பார்ட்னர்ஷிப் பரிமளிக்கத் தொடங்கியது. இடையில் ஜடேஜா பந்தில் ஃபிஞ்ச் எல்.பி. என்று தவறாக ரிவியூ செய்யப்பட்டு ஒரு ரிவியூவையும் இழந்தோம்.

பிறகு மோஹித் சர்மா பந்தில் பிஞ்ச் காலில் வாங்கினார். ரிப்ளேயில் பந்து ஸ்டம்பைத் தாக்கியது தெரிந்தது. ஆனால் நாட் அவுட் என்று தீர்மானிக்கப்பட்டது.

32 ஓவர்களில் ஸ்கோரை இருவரும் இணைந்து 167 ரன்களுக்கு உயர்த்தினர். இந்தப் பகுதிகளில் இந்தியா தீவிரம் காட்டாததால் ஸ்மித், ஃபிஞ்ச் ஆதிக்கம் தலைதூக்கியது.

பவர் பிளேயில் ஆட்டத்தை இழந்த இந்திய அணியின் பந்துவீச்சு; ஸ்மித்தின் அபார சதம்

33-வது ஓவரில் பவர் பிளே எடுக்கப்பட்டது. ஷமி முதல் ஓவரை மோசமாக வீச ஸ்மித் 2 பவுண்டரி 1 சிக்சர் விளாசினார். 14 ரன்கள் வந்தது. ஸ்மித், ஷமியின் ஷார்ட் பிட்ச் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி சதத்தை எடுத்தார். இந்த தொடரில் இந்திய அணியை காய்ச்சிய ஒரு பேட்ஸ்மென் உண்டென்றால் அது ஸ்மித் என்பதில் மறுகேள்விக்கு இடமில்லை என்றே கூற வேண்டும்.

105 ரன்களில் உமேஷ் யாதவ் வீசிய தலை உயர பவுன்சருக்கு ரோஹித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன் பிறகு நடந்ததுதான் கொடுமை. மேக்ஸ்வெல் களமிறங்கி பிய்த்து உதறத் தொடங்கினார். யாதவ்வை ஒரே ஓவரில் 2 பவுண்டரிகள் ஒரு சிக்சர். 14 பந்துகலில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 23 ரன்கள் எடுத்து ஸ்கோரை 400-க்கு கொண்டு செல்வேன் என்று மிரட்டிய மேக்ஸ்வெல் அஸ்வின் பந்தில் அவுட் ஆனார். அஸ்வினின் அருமையான பிளைட் பந்து அது.

உமேஷ் பாய்ச்சல்:

231/2 என்ற நிலையில் உமேஷ் யாதவ் புகுந்தார். முதலில் 81 ரன்கள் எடுத்த பிஞ்சிற்கு ஒரு கூர்மையான ஷார்ட் பிட்ச் பந்தை வீச மார்புயரம் வந்த பந்தை மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்தார். ஸ்மித், பிஞ்சை வீழ்த்தி உமேஷ் மிரட்டினார்.

அடுத்ததாக மைக்கேல் கிளார்க் 10 ரன்களில் மோஹித் சர்மாவின் ஷார்ட் பிட்ச் பந்தை அருகிலேயே ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

43 ஓவர்களில் 250/5 என்று இருந்த ஆஸ்திரேலியாவை அடுத்த 7 ஓவர்களில் 40-45 ரன்களுக்கு மட்டுப்படுத்த வேண்டிய இந்திய அணி 7 ஓவர்களில் 78 ரன்களை விட்டுக் கொடுத்தது. இதில் வாட்சன் 28 ரன்களையும், பாக்னர் 21 ரன்களையும், அனைத்துகும் மேலாக ஜான்சன் 9 பந்துகளில் 4 பவுண்டரிகல் 1 சிக்சருடன் 27 ரன்களையும் விளாச ஸ்கோர் வெற்றி ரன்களான 328 ரன்களுக்குச் சென்றது.

மத்திய ஓவர்களில் எப்போதும் விக்கெட்டுகள் எடுத்து வந்த இந்திய அணி; இந்தப் போட்டியில் அதனைச் செய்யத் தவறியது. ஆனால் ஸ்மித் ஆட்டமும் இதற்கு ஒரு காரணம், ஆனால் பிஞ்சை வீழ்த்தியிருக்கலாம். தீவிரமில்லாததால் முடியவில்லை.

ஷமி, ஜடேஜா நிரம்ப ஏமாற்றமளித்தனர். மோஹித் சர்மா 10 ஓவர்களில் 75 ரன்களை விட்டுக் கொடுத்தார். வேகப்பந்து வீச்சாளர்கள் குறிப்பாக ஷமி, மோஹித் சர்மா கொஞ்சம் எச்சரிக்கையாக வீசியிருந்தால் ஸ்கோர் 300 ரன்கள்தான். ஆனாலும் இந்தியா, ஆஸ்திரேலியாவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தியது என்றே கூற வேண்டும்.

அபாரத் தொடக்கத்துக்குப் பிறகு ஆஸி. பந்துவீச்சுக்கு சரணடைந்த இந்திய பேட்டிங்:

329 ரன்கள் இலக்கு இந்தக் காலக்கட்டத்தில் எட்ட முடியாத ரன்கள் அல்ல. ஆனால் ஆஸ்திரேலிய பந்துவீச்சு, அவர்கள் பீல்டிங் எப்போதும் கடினங்களைக் கொடுக்கும். அதுதான் இன்று நடந்தது.

ரோஹித் சர்மாவும் ஷிகர் தவனும் அருமையான வெற்றித் தொடக்கத்தை கொடுத்தார்கள் என்றால் மிகையாகாது. 77 பந்துகளில் 76 ரன்கள் இதைவிட என்ன தொடக்கம் வேண்டும்.

ஆனாலும் 45 ரன்கள் எடுத்து நன்றாக ஆடி வந்த நிலையில் எக்ஸ்ட்ரா கவர் பீல்டர் கையில் குறிபார்த்து அடிக்க வேண்டிய தேவை தவனுக்கு இல்லை. ஆனாலும் முயன்றார் ஆட்டமிழந்தார்.

ஏமாற்றமளித்து ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான விராட் கோலி:

இந்த உலகக்கோப்பயில் பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த சதத்திற்குப் பிறகு குறைந்த ரன்களில் அவுட் ஆகி வந்த கோலியை இன்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஏனெனில் விரட்டலில் விராட் சிறந்த வீரர் என்ற நம்பிக்கையே காரணம்.

ஆனால், அவரோ வந்தது முதல் தன்னம்பிக்கையுடன் ஆடவில்லை. தடவினார் 13 பந்துகளில் 1 ரன் எடுத்து ஜான்சன் வீசிய ஊர்பட்ட ஷார்ட் பிட்ச் பந்தை ஹூக் செய்கிறேன் என்று டாப் எட்ஜ் செய்தார். அது தூரம் செல்லவில்லை. ஹேடினே சென்று பிடித்த்து விட்டார். ஆட்டம் உண்மையில் ஆஸ்திரேலியா பக்கம் திரும்பிய கணம் இது.

இந்தச் சூழலில் இந்த ஷாட்டை அவர் ஆடியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம் வந்தவுடன் 145 கிமீ வேகப்பந்தை சுலபமாக புல் ஆடும் அளவுக்கான தன்னம்பிக்கையில் அவர் இல்லை. 25-30 பந்துகளை அவர் ஆடியிருக்க வேண்டும், இன்னிங்ஸை கட்டமைத்திருக்க வேண்டும். செய்யவில்லை. அவரது இந்த ஷாட்டிற்காக அவர் வாழ்நாள் பூராவும் வருந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ரசிகர்களின் கோபத்துக்கும் அவர் ஆளாகியுள்ளார்.

ஷார்ஜாவில் சேத்தன் சர்மா, ஜாவேத் மியாண்டட்டிற்கு கடைசி பந்தில் சிக்ஸ் கொடுத்த போது இருந்த ரசிகர்களின் கோபத்தை விட கோலி மீது கோபம் அதிகமாக உள்ளது. ட்விட்டரில் அவரை ஏற்கெனவே கிழிக்கத் தொடங்கி விட்டனர்.

அப்போது முதல் ஆஸ்திரேலிய பந்துவீச்சில் தீவிரம் பிடித்துக் கொண்டது. ரோஹித் சர்மா, மிட்செல் ஜான்சனை அபாரமாக சிக்ஸ் ஒன்றை அடித்தார். ஆனால் அடுத்த பந்து நல்ல வேகத்தில் உள்ளே யார்க்கர் லெந்த்தில் வர மட்டையை மெதுவே கீழே இறக்க பந்து உள்விளிம்பில் பட்டு ஸ்டம்பைத் தாக்கியது.

ரெய்னாவுக்கு 7 ரன்களில் பாக்னர் அவருக்கு ஒவ்வாத பந்தை வீசினார். சற்றே எழும்பியது எட்ஜ் செய்து வெளியேறினார். இந்தியா 108/4 என்று ஆனது.

ரஹானே, தோனி அளித்த மெலிதான நம்பிக்கை:

அதன் பிறகு தோனியின் வழிகாட்டுதலில் ரஹானே ஆட இருவரும் ஸ்கோரை அடுத்த 13.2 ஓவர்களில் 178 ரன்களுக்கு உயர்த்தினர், இருவரும் 70 ரன்களைச் சேர்த்தனர். அப்போது ரஹானே ஸ்டார்க்கின் அற்புதமான ஆஃப் திசை பந்துக்கு இரையானார். கிளார்க் மிக அருமையான ஒரு ரிவியூவை கேட்டார். ஏனெனில் அது சாதாரண கண்களுக்குத் தெரியாத அவுட். தொழில்நுட்பத்தின் தீர்க்கமான லென்ஸ்கள் ரஹானே எட்ஜைக் காண்பித்துக் கொடுத்தது.

அதன் பிறகு, ஜடேஜா, ஸ்மித்தின் நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார்.

தோனியினாலேயே துரத்த முடியாத அளவுக்கு ஓவருக்கு 15.45 ரன்கள் தேவைப்பட்டது. அவர் வாட்சனை இரண்டு அபாரமான சிக்சர்கள் அடித்து நம்பிக்கை அளித்தார். கிளார்க், ஒரு கேட்சையும் தோனிக்குக் கோட்டைவிட மீண்டும் இந்திய ரசிகர்களுக்கு ஒரு நப்பாசை, தோனி எப்படியும் வெற்றி பெறச் செய்து விடுவார் என்று. ஆனால் அவரும் 65 ரன்களில் ஒரு ரன் எடுக்க ஓடி மேக்ஸ்வெலின் த்ரோவுக்கு இரையானார்.

அவர் ஆட்டமிழந்த பிறகு சம்பிரதாயங்கள் 2 ரன்களில் தெளிவாக முடித்து வைக்கப்பட இந்தியா 233 ரன்களில் சுருண்டது. நிச்சயம் பலமான ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி தழுவி வெளியேறியது என்றே கூற வேண்டும்.

இந்திய அணியின் பவுலர்களையும் பேட்ஸ்மென்களையும் இந்த 4 மாத காலங்களில் அதிகம் பார்த்துள்ளனர் ஆஸ்திரேலிய வீரர்கள். பலவீனங்களை சரியாகப் பயன்படுத்தினர் என்றே கூற வேண்டும்.

உலகக் கோப்பையை நியூசிலாந்து முதன் முதலில் வெல்வதற்கு நாம் வாழ்த்துவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

நம் ஊரில் நாம் வெற்றி பெற்றோம். அவர்கள் ஊரில் அவர்கள் வெற்றி பெறுவதுதான் இப்போதைய டிரெண்ட் போல. ஒருவேளை 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்து இறுதிக்குச் சென்றாலும் செல்லக் கூடும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்