9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாபை வென்றது கொல்கத்தா
149 ரன்களுக்கு பஞ்சாபை கட்டுப்படுத்திய கொல்கத்தா, இந்தத் தொடரில் தனது 4-வது வெற்றியைத் தேடி களமிறங்கியது. துவக்க வீரர்கள் உத்தப்பா மற்றும் காம்பீர் இருவரும் சிறப்பாக ஆடி பவர்ப்ளே ஒவர்கள் முடிவதற்குள் அணியின் ஸ்கோரை 55 ரன்களுக்கு எடுத்துச் சென்றனர்.
28 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்த உத்தப்பா அவானாவின் பந்தில் ஆட்டமிழந்து அரை சதத்தை தவறவிட்டார். தொடர்ந்து வந்த பாண்டே, காம்பீருடன் இணைந்து சூழலை கவனித்து ஆடி வெற்றியை நோக்கி அணியை வழிநடத்திச் சென்றார். மேற்கொண்டு பஞ்சாப் அணி பந்துவீச்சாளர்களின் வியூகம் எதுவும் பலனளிக்காமல் போனது. 38 பந்துகளில் காம்பீர் அரை சதம் கடந்தார்.
ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த கொல்கத்தா 18 ஓவர்களில் வெற்றி இலக்கைத் தொட்டது. காம்பீர் 63 ரன்களுடனும், பாண்டே 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்தை கொல்கத்தா பிடித்தது.
முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. பஞ்சாப் அணிக்காக களமிறங்கிய சேவாக் முதல் ஓவரிலேயே 4 பவுண்டரிகள் அடித்தார். மற்றொரு துவக்க வீரர் மன்தீப் சிங் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய சாஹா வேகமாக ரன் சேர்க்க முற்பட்டு 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய பஞ்சாபின் நம்பிக்கை நட்சத்திரம் மேக்ஸ்வெல் சிறிது நிதானித்து ஆட முயற்சி செய்தார். 14 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்த போது, சாவ்லாவின் பந்தை சிக்ஸருக்கு விரட்ட முயற்சித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து மில்லர் களமிறங்க, மறுமுனையில் சேவாக் 35 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். சேவாக் 72 ரன்களுக்கும், மில்லர் 13 ரன்களுக்கும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழக்க, அதிக ரன்கள் சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட பஞ்சாப் அணியின் ஸ்கோர் முடங்கியது.
20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை எடுத்தது.