உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு இந்தியா என்னும் குதிரை மீது பந்தயம் கட்ட யாரும் தயாராக இல்லை. வழக்கம்போல ஆஸ்திரேலியாவுக்குக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகச் சொல்லப் பட்டது. தென்னாப்பிரிக்காவும் நியூஸிலாந்தும் ஆஸ்திரேலியாவு க்குச் சவாலாக விளங்கும் என்று கணிக்கப்பட்டது. இங்கிலாந்தும் இலங்கையும் புறக்கணிக்க முடியாத சக்திகள் என்றும், மேற்கிந்தியத் தீவுகளும் பாகிஸ்தானும் கணிக்க முடியாத சக்திகள் என்றும் சொல்லப்பட்டன.
இந்தியா? கிரிக்கெட் நிபுணர் களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவின் மீது நம்பிக்கை வைக்கத் தயாராக இல்லை. ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு அமீரகம், அயர்லாந்து ஆகிய மூன்று அணிகளை வென்றாலே கால் இறுதிக்கு வந்துவிட வாய்ப்புள்ளது என்பதால் இந்தியா கால் இறுதிக்கு வரும் என்று கணித்த பண்டிதர்கள், அரை இறுதிக்கு இந்தியாவுக்கு ஆசி வழங்கத் தயாராக இல்லை.
யூகத்தை மாற்றிய இந்தியா
ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளும் அனைவரது தேர்விலும் தவறாமல் இடம் பிடித்தன. நான்காவது அணி பற்றிய ஊகத்துக்கு இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளுக்குப் பிறகுதான் இந்தியாவுக்கு ‘வாய்ப்பு’ வழங்கப்பட்டது. “திறமையான அணிதான் ஆனால்…” என்ற பல்லவிதான் பலராலும் சத்தமாகப் பாடப்பட்டது.
ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா கடந்த சில மாதங்களாக ஆடிவரும் விதம்தான் இதற்குக் காரணம். இந்தியாவின் பந்து வீச்சு பலவீனமாக உள்ளது, அதன் மட்டையாளர்கள் தன்னம்பிக்கையோ, தீவிரமோ இல்லாமல் காணப்படுகிறார்கள். இப்படி இருக்கும்போது எப்படிக் கோப்பைக் கனவு காண முடியும் என்னும் கேள்வி எழுப்பப்பட்டது.
இரண்டே வாரங்களில் நிலைமை மாறிவிட்டது. இன்று இந்தியா அரை இறுதியைத் தாண்டி, இறுதிப் போட்டிக்கு வரக்கூடிய அணியாகவும் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் அதிதீவிர ஆதரவாளர்கள்கூடத் தொடரின் தொடக்கத்தில் இத்தனை நம்பிக்கையோடு இல்லை. இப்போது அவர்கள் இந்திய அணி வீரர்கள் விளம்பரத்தில் சொல்வதுபோல “திருப்பித் தர மாட்டோம்” என்று தெம்புடன் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
இரண்டே ஆட்டங்களில் இந்தியாவின் நிலைமை மாறிவிட்டது. பாகிஸ்தானையும் தென்னாப்பிரிக்காவையும் வென்றதும் அந்த வெற்றிகள் வந்த விதமும் இந்தியாவின் மீதான நம்பிக்கையைப் புதுப்பித்திருக்கின்றன. வலுவான அணிகளுக்கு எதிராகத் திணறாமல், தடுமாறாமல் பெற்ற இந்த நேர்த்தியான வெற்றிகள் இந்தியாவைப் பற்றிய ஐயங்களைச் சிதற அடித்தன.
வலிமையை மீட்ட வீரர்கள்
இரண்டு போட்டிகளிலும் இந்தியாவுக்கு முதலில் மட்டை பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியா மட்டை வலு கொண்ட அணி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த வலிமை வலுவாக வெளிப்பட்டு நாளாகிறது என்பதும் தெரியும். இலக்கைத் துரத்தும் நெருக்கடி இல்லாமல் அந்த வலிமையை மீட்டெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்தது. மட்டையாளர்கள் அதைச் செவ்வனே பயன்படுத்திக்கொண்டார்கள்.
இரண்டு போட்டிகளிலும் வலுவான பந்து வீச்சுக்கு எதிராக மட்டையாளர்கள் பிரகாசித் தார்கள். ஏழடி உயரம் கொண்ட முகம்மது இர்ஃபான், புயல் வேக ஸ்டெயின் ஆகிய அச்சுறுத்தல்களை அமைதியாக எதிர்கொண்டார்கள். அக்கினிப் பரீட்சைக்கு உட்பட்டுப் புடம் போட்ட தங்கமாக ஜொலித்தார்கள்.
கடுமையாகத் தடுமாறி வரும் ஷிகர் தவன் தன்னம்பிக் கையையும் தன் மீதான பிறரது நம்பிக்கையையும் மீட்டுக்கொண் டார். சிறப்பாக ஆடிவரும் விராட் கோலி தன் மீது பிறர் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கும் வகையில் ஆடினார். அயல் மண்ணில் அதிகம் சோபிக்காத சுரேஷ் ரெய்னா அந்த அவப் பெயரைத் துடைத்து எறிந்தார். அயல் மண்ணில் சிறப்பாக ஆடிவரும் அஜிங்க்ய ரஹானே தன் திறமையை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தினார்.
அசத்திய ரஹானே
முதல் முப்பது ஓவர்களுக்குள் அதிக விக்கெட்களை இழக்காமல் இருந்தால் கடைசி 20 ஓவர்களில் அதிக ரன்களை அறுவடை செய்யலாம் என்பது எல்லாருக்கும் தெரியும். இந்த விஷயத்தில் சொதப்புவதை வழக்கமாகக் கொண்ட இந்தியா இந்த முறை கச்சிதமாக ஆடியது. தொடக்கத்தில் ரன் குவிக்கும் பதற்றம் இன்றி இன்னிங்ஸை நிலைபெறச் செய்வதில் கவனம் செலுத்தியது.
சீரான வேகத்தில் ரன் விகிதம் உயர்த்தப்பட்டது. கண்மூடித்தனமான ஆவேசம் இன்றி 300 ரன்களைக் கடந்தது. இந்திய மட்டை வலு தரமான வேகப்பந்து வீச்சுக்கு எதிராக ஆசிய மண்ணுக்கு வெளியிலும் ரன் குவிக்கும் என்பதை இந்திய மட்டையாளர்கள் காட்டிவிட்டார்கள். டேல் ஸ்டெயின், மோர்ன் மோர்கல் ஆகியோரை தவனும் ரஹானேயும் கையாண்ட விதம் அற்புதமான மட்டை வீச்சுக்குச் சான்றாக இருந்தது.
கட்டுக் கோப்பான பந்துவீச்சு
மட்டை வலு தன் மீதிருந்த சந்தேகத்தைப் போக்கிவிட்டது என்றால், பந்து வீச்சு தன் மீது இல்லாதிருந்த நம்பிக்கையைப் பெற்றுவிட்டது. பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க மட்டையாளர்களுக்கு 300 என்பது அசாத்தியமான இலக்கு அல்ல. பந்து வீச்சில் சற்றே சுணக்கம் இருந்தாலும் கடுமையான தண்டனையைப் பரிசளிக்கக்கூடிய மட்டையாளர்கள் அந்த அணிகளில் இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்காத விதத்தில் இந்தியப் பந்து வீச்சாளர்கள் வீசினார்கள். வேகப் பந்து வீச்சாளர்களின் கட்டுக்கோப்பு அபாரமாக இருந்தது. வேகம் மட்டுமின்றித் துல்லியமும் கூடியிருந்தது. எகிறு பந்துகளைப் பயன்படுத்திய விதத்தில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.
சுழல் பந்தில் முனைப்பும் தீவிரமும் இருந்தன. களத் தடுப்பிலும் தீவிரமும் வேகமும் கூடியது. எதிரணி மட்டையாளர்கள் முடக்கப் பட்டார்கள். இரண்டு பெரிய அணிகளை இந்தியா எளிதாக வென்றது என்று சொல்லுமளவுக்கு ஆட்டத்தின் மீது அதன் கட்டுப்பாடு வலுவாக இருந்தது.
அடுத்து ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியில் முதலில் மட்டை பிடிக்கும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை. கிறிஸ் கெய்லின் புயலுக்கோ ஏபி டிவில்லியர்ஸின் சூறாவளிக்கோ சவால் விடும் வாய்ப்பு கைநழுவியது.
என்றாலும் வலுக் குறைந்த அணியை எப்படி வெல்ல வேண்டுமோ அப்படி வென்றது. 102 ரன்னுக்குள் அவ்வணியைச் சுருட்டி, 20 ஓவர்களுக்குள் ஒரே ஒரு விக்கெட் இழப்பில் இலக்கை எட்டிக் கம்பீரமாக வென்றது.
நம்பிக்கை தரும் அணி
இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பு பற்றிப் பலரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். கால் இறுதி என்பது இரண்டாவது வாய்ப்புக் கிடைக்காத சுற்று. அதில் என்ன வேண்டுமானாலும் நிகழலாம். அது இந்தியாவுக்குச் சாதகமாகவே நிகழும் என்னும் நம்பிக்கையை இந்தியாவின் இதுவரையிலான ஆட்டம் நிரூபித்திருக்கிறது.
தேறாத அணி என்னும் அவப் பெயரை மாற்றி நம்பிக்கை தரும் அணிகளில் ஒன்றாக உருவெடுத்திருப்பதே உலகக் கோப்பைத் தொடரின் முதல் பாதியில் இந்தியா செய்த சாதனை என்று சொல்லலாம். இந்தச் சாதனைக்குப் பின் இருந்த உறுதியும் தீவிரமும் தொடர்ந்தால் “திருப்பிக் கொடுக்க மாட்டோம்” என்னும் சொல் பலிக்கலாம்.
ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்று சொல் லப்படுவதுண்டு. விளம்பரத்தில் சொல்லப்படும் சொல் வெல்லும் சொல்லாக மாறக்கூடும் என்னும் நம்பிக்கையை இந்திய அணி ஏற்படுத்தியிருக்கிறது. அந்த நம்பிக் கையை மேலும் வலுப்படுத்திக் கொண்டே போவதுதான் தோனி படையின் முன் உள்ள சவால்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago