உலகக்கோப்பைகளை வெல்வது எப்படி என்பதை தோனி நன்கு அறிவார்: மைக்கேல் வான்

By செய்திப்பிரிவு

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் உலகக்கோப்பை அரையிறுதியில் வெற்றி வாய்ப்புகள் இரு அணிகளுக்கும் 50-50 என்று கூறிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், வெற்றியை தீர்மானிக்கும் ஒரு பெரிய காரணியாக இந்திய கேப்டன் தோனியைக் குறிப்பிட்டுள்ளார்.

சிட்னியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய மைக்கேல் வான், “உலகக்கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலியா, இந்திய அணியை வீழ்த்திக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது உலகக்கோப்பையில் இந்திய அணி தோற்காமல் வந்துள்ளது, காரணம் தோனி. அணியில் மாற்றம், மனநிலையில் மாற்றம். தோனி என்ற காரணியே இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளைஅதிகரிக்கிறது.

உலகக்கோப்பைகளை வெல்வது எப்படி என்பதை தோனி நன்கு அறிவார்.

சிறப்பாக பந்துவீசினாலும், பேட்டிங்கில் சிறப்பாக ஆடினாலும் முதல் 15 ஓவர்களில் இவற்றைச் சிறப்பாக செய்த அணி அடுத்த கட்டத்துக்கு முன்னேறி வந்துள்ளதைப் பார்க்கிறோம்.

இரு அணிகளிடத்திலும் நல்ல வேகப்பந்து வீச்சு உள்ளதால் முதல் 15 ஓவர்களில் பொறிபறக்கும்.

இந்திய வீரர்களில் அஜிங்கிய ரஹானே நல்ல உத்தியை தன்வசம் வைத்திருப்பவர். அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளில் ரஹானே ஒரு சிறந்த வீரராக எழுச்சியுறுவார். அப்போது நாம் அவரைப்பற்றி நிறைய பேசுவோம்.

ரஹானே தனது முன்காலை குறுக்காக நீட்டி விளையாடுவதில்லை, அவர் பந்துகளை மட்டைக்கு வரவிட்டு விளையாடுகிறார். இதனால் பின்னங்காலில் சென்று ஆடுவதில் அவருக்கு நல்ல சமநிலை கிடைக்கிறது. அதனால்தான் அவர் கட் மற்றும் புல் ஷாட்களை திறம்பட ஆட முடிகிறது. மேலும் நேராகவும் விளையாடுகிறார்.

இப்படிப்பட்ட உத்திகள் கொண்ட வீரருக்கு பீல்ட் அமைப்பது கடினம். நேராக ஆடுவதற்கு களம் அமைக்க முடியாது.

இந்திய அணியில் ஒருநபரை குறிவைத்து கவனம் செலுத்த முடியாது. 1 முதல் 11 வரை திறமை உள்ள அணி இந்திய அணி” இவ்வாறு கூறியுள்ளார் மைக்கேல் வான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE