ஆஸி., நியூஸி.யை அச்சுறுத்தும் இந்தியாவின் ஆதிக்க வெற்றி

By இரா.முத்துக்குமார்

உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் வங்கதேசத்தை 109 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, தனது தொடர்ச்சியான ஆதிக்கத்தை நிரூபித்தது. | வாசிக்க ->உலக் கோப்பை காலிறுதி: இந்தியா - வங்கதேசம் போட்டி பதிவுகள் |

ஒன்றை முதலில் கூறிவிடுவது சிறப்பு. நேற்று இலங்கை அணி ஏமாற்றமளித்தைத் தொடர்ந்து அனைத்து காலிறுதிப் போட்டிகளுமே அப்படித்தான் காற்றைப் பிடுங்கி விட்ட சைக்கிள் டியூப் போல் ஆகிவிடும் என்று தோன்றியது. வங்கதேச அணி, இலங்கை அணி அளவுக்கு மோசம் போய்விடவில்லை. குறிப்பாக 'பாடி லாங்க்வேஜ்' நன்றாக இருந்தது. ஆனால், பேஸ்மென்ட் வீக் ஆனதால் அந்த பாடி லாங்வேஜால் இந்தியாவை அசரடிக்கச் செய்ய முடியாமல் போனது.

இந்தக் காலிறுதியில் அவர்களுக்கான தருணங்கள் இருந்தன. குறிப்பாக, இந்திய அணி பேட் செய்தபோது. அந்த அணி நடுவில் சற்றே அச்சுறுத்தியது என்றுதான் கூற வேண்டும்.

7 போட்டிகள், 7 அணிகள், 70 விக்கெட்டுகள்:

இந்த உலகக் கோப்பை போன்று இந்தியா தொடக்கம் முதலே இவ்வளவு ஆதிக்கம் செலுத்திய உலகக் கோப்பை வேறு இல்லை என்றே கூறிவிடலாம்.

பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடங்கிய ஆதிக்கம், இன்று காலிறுதிப் போட்டியில் வங்கதேசம் வரை நீடித்து 7 போட்டிகளில் 7 அணிகளை ஆல் அவுட் செய்து 70 விக்கெட்டுகளை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. உலகப் பந்துவீச்சாளர்களே திணறி வரும் இன்றைய பேட்ஸ்மென் ஆதிக்க ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய பவுலர்கள் ஆதிக்கம் செலுத்துவதில் முரண் எதுவும் இல்லை.

நல்ல அளவு, திசை மற்றும் கட்டுக்கோப்புடன் வீசி, நல்ல களவியூகம், அருமையான கேப்டன்சி என்று அனைத்தும் கை கூடினால் பவுலர்கள் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதை இந்திய அணி நிரூபித்துக் காட்டியுள்ளது. இயன் சாப்பல் சொன்னது போல், கேப்டன்சியில் தோனி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளார். அதுதான் நடு ஓவர்களில் விக்கெட்டுகளைக் கைப்பற்றும் உத்தி. இந்த உலகக் கோப்பையில் அது ஒன்றுதான் வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதை உணர்ந்த தோனி, அதற்குத் தக்கவாறு களவியூகம் அமைத்து, பந்துவீச்சிலும் சாதுர்யமான மாற்றங்களைக் கொண்டு வந்து அசத்தி வருகிறார்.

3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு கோட்டைவிட்ட வங்கதேசம்:

டாஸ் வென்ற அணி பேட்டிங்தான் செய்ய வேண்டும் என்பது இந்த மைதானத்தின் விதி. அதையே தோனியும் செய்தார்.

மஷ்ரபே மோர்டசா தொடக்கத்தில் சரியாக வீசவில்லை. அவர் வீசிய முனையில் டஸ்கின் அமகதை கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், இவர் பிடிவாதமாக அந்த முனையில் வீசி, டஸ்கினை கட் வேறு செய்தார்.

மோர்டசா 120-125 கிமீ வேகத்தில் பந்து வீசியது இந்த பிட்சில் நிச்சயம் கைகொடுக்காது. ஷேன் வார்ன் வர்ணனை செய்து கொண்டிருந்த போது, மோர்டசாவின் பவுலிங்கை எள்ளி நகையாடினார்.

முயற்சி எடுத்து அவர் வீசவில்லை என்றும், அவர் முயற்சி எடுத்து வீசும் பந்தும் மற்ற பந்துகளை விட மெதுவாக வருகின்றன என்றும் ஷேன் வார்ன் கடும் கிண்டலடித்தார். அவர் அப்படி கிண்டலடிப்பதற்கு மோர்டசாதான் காரணம்.

இந்திய அணியின் நல்ல துவக்கம்:

இந்திய அணி அருமையாகத் தொடங்கியது. ஷிகர் தவன், ரோஹித் ஜோடி 75 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஆனால் அதற்கு முன்னர் 10 ஓவர்களில் 51 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணியை வங்கதேசம் கட்டுப்படுத்தி 6.3 ஓவர்களில் 25 ரன்களையே கொடுக்க ஷிகர் தவன் பதற்றமடைந்தார்.

இந்த நிலையில்தான் அவர் 30 ரன்களில் ஷாகிப் அல் ஹசன் பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்று ஃபிளைட்டில் மோசம் போனார். ஸ்டம்ப்டு ஆனார். முஷ்பிகுர் ரஹீமின் அருமையான ஸ்டம்பிங்காக அது அமைந்தது.

சோபிக்காது ஏமாற்றமளித்த கோலி:

விராட் கோலி பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே 51,000 ரசிகர்களின் ஆரவாரத்தில் களமிறங்கினார். ஆனால் 3 ரன்கள் எடுத்து ரூபல் ஹுசைன் வீசிய சற்றே வெளியே சென்ற பந்து ஒன்று அவரத் மட்டையை இழுத்துச் சென்றது. விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது. மைதானத்தில் இந்திய ரசிகர்கள் கப்சிப். வங்கதேச ரசிகர்களின் உற்சாகம் கரைபுரண்டது.

10 ஓவர்களுக்கு முன்பாக கடைசியாக வந்த பவுண்டரிக்குப் பிறகு ரோஹித் 15-வது ஓவர் முடிவில் அடித்த சிக்ஸ். அதன் பிறகு 11 ஓவர்கள் வங்கதேசம் இந்திய அதிரடி வீரர்களை கட்டிப் போட்டது.

18-வது ஓவரில் 79/2 என்று இருந்த இந்திய அணி 28-வது ஓவர் முடிவில் 115 ரன்கள் என்று கட்டுப்படுத்தப்பட்டது. 10 ஓவர்களில் வெறும் 36 ரன்கள்தான். ஆனால் 37 பந்துகளைச் சந்தித்த ரஹானே ஒரு பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்த நிலையில் அப்போதுதான் அவுட் ஆனார். மிட் ஆஃப் உள்ளே இருந்தவுடன் தூக்கி அடிக்க நினைத்து டக்சின் அகமது பந்தில் மிட் ஆஃபில் ஷாகிபிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க இந்தியா 115/3 என்று ஆனது. அப்போது ரோஹித் சர்மா 73 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்சருடன் 56 ரன்களில் இருந்தார்.

ரோஹித் சர்மா, ரெய்னாவிடம் உடைந்துபோன வங்கதேசம்:

28 ஓவர்களில் 115/3. சற்றே நெருக்கடியான நிலை. இந்தக் கட்டத்தில் வங்கதேசம் கொஞ்சம் அலட்சியமாக ஆடியதாகவே தோன்றியது. அடுத்த 17 ஓவர்கள் ஆட்டத்தின் போக்கே மாறிப்போனது.

ரெய்னா களமிறங்கியவுடன் ஷார்ட் பைன்லெக், மற்றும் ஸ்லிப் வைத்து ஷார்ட் பிட்ச் பந்தை முயன்றிருக்க வேண்டும். ரெய்னாவும் ஒரு பந்தை எட்ஜ் செய்து பவுண்டரி அடித்தார். ஆனால் கேட்ச் பிடிக்க ஸ்லிப் இல்லை. இப்படியாக ரோஹித் சர்மாவும் சில ஷாட்களை ஆடினார்.

மேலும் வட்டத்துக்குள் நிற்கும் பீல்டிங் நிலை அறியாமல் வங்கதேச பவுலர்களும் லெக் திசையிலும் ஷார்ட் ஆகவும் வீசி ரெய்னா, ரோஹித்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டனர்.

அடுத்த 15.5 ஓவர்களில், அதாவது 95 பந்துகளில் 122 ரன்கள் குவிக்கப்பட்டது. 10 ஓவர்களில் 51/0, 35-வது ஓவரில் 155/3. அதன் பிறகு 15 ஓவர்கலில் மேலும் 147 ரன்கள்!! இங்குதான் வங்கதேசத்தின் தோல்வி தொடங்கியது.

பவர் பிளேயின் முதல் ஓவரில் மீண்டும் மோர்டசா வந்தார். மோசமாக வீசினார் ரெய்னா 2 பவுண்டரிகளுடன் விளாசலை ஆரம்பிக்க 40-வது ஓவர் முடிவில் ஸ்கோர் 205 ஆனது. பவர் பிளேயில் 50 ரன்கள். விக்கெட் இல்லை. 40 ஓவர்களில் 205/3 என்ற நிலையிலிருந்து வங்கதேச பீல்டிங் மோசமாகப் போக அடுத்த 10 ஓவர்களில் 97 ரன்கள்.

ஆனால் ரோஹித் சர்மா 90களின் அருகில் இருந்த போது ரூபல் ஹுசைன் புல்டாஸை ஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்தார். ஆனால் நடுவர் அதனை நோ-பால் என்றார். இடுப்புக்கு மேல் சென்ற பந்து என்று தீர்ப்பளிக்கப்பட்டது. நாட் அவுட். இது வங்கதேசத்துக்கு பெரிய அடியாக மாறியது. அதன் பிறகு ரோஹித் 47 ரன்களை விளாசினார். அந்த மார்ஜினல் நோ-பால் இல்லையெனில் இந்தியாவை இன்னும் 10-20 ரன்கள் குறைவாகக் கூட வங்கதேசம் கட்டுப்படுத்தியிருக்கும்.

கடைசியில் ஜடேஜா மிகவும் சாதுரியமான சில பவுண்டரிகளை அடிக்க இந்தியா 302 ரன்கள் குவித்தது.

தோனியின் கேப்டன்சிக்கு முன்னால் சரிந்த வங்கதேசம்

தொடக்கத்தில் தமிம் இக்பால், மொகமது ஷமியை தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் விளாச, சரி நல்ல ஒரு விரட்டல் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால் உமேஷ் யாதவ் வீசிய அருமையான பந்தில் அவர் ஆட்டமிழக்க, அதே ஓவரில் சவுமியா சர்க்கார் வேடிக்கைப் பார்க்க ஜடேஜாவின் அருமையான பீல்டிங் மற்றும் த்ரோவுக்கு இம்ருல் கயேஸ் ரன் அவுட் ஆனார்.

33/2 என்ற நிலையில் சவுமியா சர்க்கார், 2 சதங்கள் கண்ட மஹமுதுல்லா இணைந்து நல்ல சில பவுண்டரிகளை அடித்தனர். ஆக்ரோஷம் காட்டினர். ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அங்கு உருவாகிக் கொண்டிருந்தது. ஸ்கோர் 17-வது ஓவரில் 73/3 என்று உயர்ந்தது.

ஷிகர் தவன், தோனியின் அசாத்திய கேட்ச்:

அப்போதுதான் மொகமது ஷமி மீண்டும் பந்து வீச அழைக்கப்பட்டார். 17-வது ஓவரின் கடைசி, ஷார்ட் பிட்ச் பந்தை மஹமுதுல்லா அற்புதமாக ஹூக் ஆடினார். பந்து சிக்சருக்குச் சென்றது. எல்லைக்கோட்டிற்கு மிக அருகே தவன் அதனை கேட்ச் பிடிக்க முயன்றார். பந்து கையில் பட்டு எகிறியது. மீண்டும் பந்தை பிடித்தார் ஆனால் எல்லைக் கோட்டை கடந்து விடும் அச்சத்தில் பந்தை மேலே தூக்கி எறிந்து எல்லைக்கோட்டுக்கு வெளியே சென்று பிறகு உள்ளே வந்து பிடித்தார். மிகவும் அருமையான கேட்ச்.

இதனைத் தொடர்ந்து சவுமியா சர்க்காரும் மொகமது ஷமி பந்தை தொட பந்து 2-வது ஸ்லிப்பிற்குச் சென்றது. தோனி அருமையான டைவ் அடிதுப் பிடித்து ஒரு கையில் பிடித்தார். இதோடு வங்கதேசம் ஆட்டம் முடிந்தது என்றே கூற வேண்டும்.

அதன் பிறகு முஷ்பிகுர், நசீர் ஹுசைன் சபிர் ரஹ்மான் கொஞ்சம் நின்று பார்த்தனர், அடித்துப் பார்த்தனர், ஆனால் 45வது ஓவரில் 193 ரன்களுக்குச் சுருண்டது வங்கதேசம். உமேஷ் யாதவ் 9 ஓவர்களில் 1 மெய்டன் 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள். அஸ்வின் விக்கெட் எடுக்காவிட்டாலும் வங்கதேச வீரர்களின் மரியாதையைச் சம்பாதித்துக் கொண்டார். அவர் 10 ஓவர்களில் 30 ரன்களித்தான் விட்டுக் கொடுத்தார்.

ஜடேஜா கொஞ்சம் வாங்கிக் கட்டிக் கொண்டாலும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷமி முக்கிய கூட்டணியை உடைத்தார்.

பீல்டிங் இன்று உண்மையில் அபாரமாக அமைந்தது. ஷிகர் தவன் ஒரு கேட்சை கடைசியில் விட்டார், அது வங்கதேசம் தோல்வி நிலைக்கு வந்த பிறகு.. அதனால் ஒன்றும் ஆகிவிடவில்லை. மொத்தத்தில் பார்த்தால் ஜடேஜா இன்று தடுத்த ரன்கள் மட்டும் 30 ரன்களுக்கும் மேல் இருக்கும்.

அஸ்வின் வீசும் போது நிறைய சிங்கிள்கள் மிட் ஆனில் தடுக்கப்பட்டன. நிறைய 3 ரன்கள் 2 ஆக குறைக்கப்பட்டது. இப்படியாக ஆல்ரவுண்ட் ஆட்டத்திறனை இந்தியா மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டியது.

அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டாலும், பாகிஸ்தானை எதிர்கொண்டாலும் கவலையில்லை என்பதாகவே இந்திய ஆட்டம் இதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. அத்துடன், பலம் பொருந்திய நியூஸிலாந்துக்கும் அச்சுறுத்தலை தந்திருக்கும் இந்தியாவின் இந்த ஆதிக்க வெற்றி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 mins ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்