வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா: சிலிர்ப்பூட்டும் வெற்றியுடன் நியூஸிலாந்து இறுதிக்கு தகுதி

By செய்திப்பிரிவு

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், எல்லியட்டின் அபார பேட்டிங்கின் துணையுடன், தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய நியூஸிலாந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இப்போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியை நியூஸிலாந்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு உலகக் கோப்பை ஆட்டங்களிலேயே ரசிகர்களை சிலிர்க்க வைத்த மிக முக்கிய போட்டியாக இது திகழ்ந்தது.

வரலாறு படைத்தது நியூஸி.

ஏழாவது முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறிய நியூஸிலாந்து அணி, முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்தது.

அதேவேளையில், 4-வது முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ள தென் ஆப்பிரிக்கா இம்முறை ஒரு மெல்லிய கோட்டில் இறுதி வாய்ப்பை இழந்தது.

நியூஸிலாந்து தரப்பில் விவரிக்க முடியாத குதூகலமும், தென் ஆப்பிரிக்கா தரப்பில் சொல்லணா துயரமும் இந்த அரையிறுதிப் போட்டி மூலம் தொற்றிக் கொண்டுள்ளது.

ஆட்ட நாயகன் எல்லியட்

இப்போட்டியில் 43 ஓவர்களில் 298 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து 42.5 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 299 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இக்கட்டான நிலையில் களமிறங்கிய எல்லியட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 73 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவரே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மறுமுனையில் விட்டோரி 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆட்டத்தின் துவக்கத்தில் மெக்கல்லமின் அதிரடி ஆட்டம், நியூஸிலாந்துக்கு வலு சேர்த்தது. மத்தியில் ஆண்டர்சன் மற்றும் டெய்லரின் நிதானம் கைகொடுத்தது.

பரபரப்பான கடைசி ஓவர்:

கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில், சிலிர்க்க வைக்கும் ஆட்டமாக உருபெற்றது இந்தப் போட்டி. அந்தக் கடைசி ஓவரை ஸ்டெயின் வீசினார். முதல் பந்தில் ஒரு ரன், இரண்டாவது பந்தில் ரன் ஏதும் இல்லை. மூன்றாவது பந்து வீசுவதற்கு முன்பு ஸ்டெயினுக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது.

அதன்பின், மூன்றாவது பந்து பவுண்டரி ஆனது. நான்காவது பந்தில் ஒரு ரன். ஐந்தாவது பந்தில் எல்லியட் சிக்ஸ் விளாசினார். வெற்றி!

இந்தப் போட்டி 'டை' ஆகிவிட்டால், நியூஸிலாந்து இறுதிக்கு முன்னேறும் நிலை. ஏனெனில், லீக் போட்டிகளின் பட்டியலில் அந்த அணி டாப்பில் இருந்ததே காரணம்.

மிக மோசமான ஃபீல்டிங்குக்கு முத்தாய்ப்பாக, 42-வது ஓவரின் கடைசி பந்தில் எல்லியட்டின் கேட்ச்சை தவறவிட்டது தென் ஆப்பிரிக்க அணி.

தவறவிட்ட மற்றுமொரு ரன் அவுட்

40.3-வது ஓவரில் எலியட் 2 ரன்கள் எடுத்தார். அப்போது, விக்கெட் கீப்பர் டி காக் அவரை ரன் செய்யும் வாய்ப்பைத் தவறவிட்டார். ரூசோவின் த்ரோவை தவறவிட்டு, வெறும் கையால் ஸ்டம்பை தட்டினார். நல்ல வாய்ப்பு தவறியது.

40.1-வது ஓவரில் ஸ்டெயின் பந்துவீச்சில் ரூஸோவிடம் கேட்ச் கொடுத்து ராஞ்சி ஆட்டமிழந்தார். அவர் 7 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்தார்.

'உயர்ந்த' கேட்ச்

37.5-வது ஓவரில் மோர்கல் பந்துவீச்சில் ஆண்டர்சன் விளாசினார். அந்தப் பந்து மிக உயரத்தில் எழுந்தது. அந்தப் பந்தை டூபிளெஸ்ஸி அற்புதமாக கேட்ச் பிடித்தார். பந்து மிக உயரத்தில் எழும்பியதால், முடிவு மூன்றாவது நடுவருக்குச் சென்றது. காரணம், ஸ்பைடர் கேமராவின் ஒயர்களில் பந்து பட்டிருந்தால், அது 'டெட் பால்' ஆகியிருக்கும். ஆனால், அப்படி நிகழவில்லை என்பதால், அது அவுட். ஆண்டர்சன் 57 பந்துகளில் 58 ரன்கள் எடுத்திருந்தார்.

தடுமாறிய டிவில்லியர்ஸ்... தப்பிய ஆண்டர்சன்

31.3-வது ஓவரில் ஒரு ரன் எடுக்க முயன்றார் எல்லியட். எதிர்முனையில் இருந்த ஆண்டர்சன் தான் அவரை அழைத்தார். பின்னர், சட்டென முயற்சியைக் கைவிட்ட இலியட், ஆண்டர்சனை திருப்பி அனுப்பினார். அதற்குள் தன் கையில் சிக்கிய பந்தை ஸ்டம்பில் அடிக்க முயன்றார் டிவில்லியர்ஸ். ஆனால், அந்தப் பந்து கையை விட்டு நழுவியது. அவரது கை பட்டதால் ஸ்டம்பின் பைல்ஸ் இரண்டும் கீழே விழுந்தன. அதன்பின், பந்தை மீண்டும் எடுத்து ஸ்டம்பில் தட்டினார். அப்போது, ஆண்டர்சன் கிரீஸை எட்டியிருக்கவில்லை. ஆனால், ஏற்கெனவே பைல்ஸ் விழுந்துவிட்டதால் அது ரன் அவுட் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

டிவில்லியர்ஸ்சின் தடுமாற்றத்தால் ஆண்டர்சன் தப்பினார். இது, மிக முக்கிய விக்கெட்டாக கருதப்படுகிறது. தென் ஆப்பிரிக்க கேப்டனின் இந்த ஃபீல்டிங் தவறு, ஆட்டத்தின் போக்கையை மாற்றிவிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டமிழந்தார் டெய்லர்

21.4 ஓவரில் டுமினி பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ராஸ் டெய்லர். அவர் 39 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்திருந்தார்.

கப்தில் ரன் அவுட்

இம்ரான் தாஹிர் வீசிய 17.1-வது ஓவரில் ஒரு ரன் எடுக்க முயன்றார் டெய்லர். எதிர்முனையில் இருந்த கப்தில் கிரீஸைத் தொடுவதற்கு சற்று முன்பு சிறப்பாக ரன் அவுட் செய்யப்பட்டார். ஆம்லாவின் அற்புதமான த்ரோ தென் ஆப்பிரிக்காவுக்கு கை கொடுத்தது. கப்தில் 38 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

அதிரடி மெக்கல்லம் அவுட்

நியூஸிலாந்து அணியின் கேப்டன் மெக்கல்லம் அட்டகாசத் துவக்கத்தைத் தந்தார். முதல் ஓவரில் 4-வது பந்தில் சிக்ஸர் அடித்ததன் மூலம் அதிரடியை ஆரம்பித்த அவர், தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவின் ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் சொல்லி அடித்தார்.

ஸ்டெயின், ஃபிலாண்டர், மோர்கல் என எவரது யுக்தியும் எடுபடாமல் போனது. குறிப்பாக ஸ்டெயின் வீசிய ஆட்டத்தின் 5-வது ஓவரில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளோடு 24 ரன்களை மெக்கல்லம் சேர்த்தார். இதோடு 22 பந்துகளில் அரை சதத்தையும் கடந்தார்.

6-வது ஓவரில் இம்ரான் தாஹிரின் சுழலை சந்தித்த மார்டின் கப்டில், ஆடத் திணறினார். 5 ஓவரில் 71 ரன்கள் குவித்திருந்த நியூஸிலாந்துக்கு 6-வது ஓவரில் ரன் ஏதும் வராமல் போனது. இது சற்று அழுத்தத்தை கொடுத்தது. 7-வது ஓவரின் முதல் பந்தில் மெக்கல்லம் ஆட்டமிழந்தார்.

மோர்கல் வீசிய அந்தப் பந்தை மிட் ஆன் திசையில் இருந்த ஃபீல்டரின் தலைக்கு மேலே அடிக்க மெக்கல்லம் முயற்சித்தார். ஆனால் பந்து அங்கு நின்றிருந்த ஸ்டெய்ன் கைகளில் உட்கார்ந்தது. அவர் 26 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து, 8.5-வது ஓவரில் மோர்கல் பந்துவீச்சில் வில்லியம்சன் 11 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில் பவுல்ட் ஆனார்.

தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ்:

மில்லர் அதிரடி: நியூஸி.க்கு 43 ஓவர்களில் 298 ரன்கள் இலக்கு

மில்லரின் கடைசி நேர அதிரடியின் துணையுடன் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, நியூஸிலாந்து அணிக்கு 43 ஓவர்களில் 298 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்க அணி.

மழையின் குறுக்கீடு காரணமாக 7 ஓவர்கள் குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 43 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது.

டிவில்லியர்ஸ் 45 பந்துகளில் 65 ரன்களும், டுமினி 4 பந்துகளில் 8 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை.

டூபிளெஸ்ஸி, டிவில்லியர்ஸ் மற்றும் மில்லர் ஆகியோரின் உறுதுணையுடன் தென் ஆப்பிரிக்காவின் ரன் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது.

மில்லர் மிரட்டல் அடி:

மில்லர் 42.2 ஓவரில் ஆண்டர்சன் பந்துவீச்சில் ராஞ்சியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 18 பந்துகளில் 49 ரன்களை விளாசினார். மில்லரின் மிரட்டல் அடியின் காரணமாக, நியூஸிலாந்துக்கு ஓரளவு வலுவான இலக்கை நிர்ணயிக்க முடிந்தது.

டூபிளெஸ்ஸி அவுட்:

ஆட்டம் 43 ஓவர்களாக குறைக்கப்பட்ட பின், 39-வது ஓவரை வீசிய கோரே ஆண்டர்சன், இரண்டாவது பந்திலேயே சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டூ ப்ளெஸ்ஸியை பெவிலியனுக்கு அனுப்பினார். ரோஞ்சியிடம் கேட்ச் கொடுத்த டூபிளெஸ்ஸி 107 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்திருந்தார்.

முந்தைய பதிவுகள்:

மழையின் குறுக்கீடு காரணமாக, போட்டியின் ஓவர்கள் 43 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எனவே, இன்னும் 5 ஓவர்கள் மட்டுமே உள்ளது. தென் ஆப்பிரிக்க இன்னிங்ஸில் இனி பவர் ப்ளேவும் கிடையாது. நியூஸிலாந்து தரப்பில் பவுலர்களுக்கு தலா ஒரு ஓவர் குறைகிறது. | டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, நியூஸிலாந்துக்கு இலக்கும் மாற்றியமைக்கப்படும்.

தென் ஆப்பிரிக்காவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி, மழையின் குறுக்கீடு காரணமாக தொடர்வதில் தாமதம் ஆனது.

மழையின் வருகைக்கு முன்பு வரை, தென் ஆப்பிரிக்கா 38 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் என்ற சற்றே உறுதியான நிலையில் இருந்தது. டூபிளெஸ்ஸி 82 ரன்களுடனும், டிவில்லியர்ஸ் 60 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மழை காரணமாக ஒரு மணி நேரமாக ஆட்டம் தடைபட்டுள்ளது.

முன்னதாக, ஆம்லா 10 ரன்கள் எடுத்திருந்தபோது, போல்ட் பந்துவீச்சில் பவுல்ட் ஆனார். அவரைத் தொடர்ந்து மற்றொரு துவக்க ஆட்டக்காரரான டி காக் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். போல்ட் பந்துவீச்சில் சவுத்தியிடம் கேட்ச் கொடுத்து அவர் பெவிலியன் திரும்பினார்.

துவக்க ஆட்டக்காரர்களை இழந்த நிலையில், டூபிளெஸ்ஸி - ரூசோ இணை பொறுப்புடன் நிதானமாக பேட் செய்து அணியை சரிவில் இருந்து மீட்டது. சற்றே அதிரடியாக ஆடத் தொடங்கியபோது, ரூசோ ஆண்டர்சனின் பந்துவீச்சில் கப்திலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 39 ரன்களைச் சேர்த்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, ஜோடி சேர்ந்த டூபிளெஸ்ஸி - டிவில்லியர்ஸ் இணை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணிக்கு வலு சேர்க்கும் வகையில் ரன் குவிக்கத் தொடங்கியது. டூபிளெஸ்ஸி அரைசதத்துக்குப் பின் அதிரடியில் ஈடுபட்டார். டிவில்லியர்ஸோ களம் இறங்கியது முதல் அதிரடி ரன் வேட்டையில் ஈடுபட்டார் என்பது கவனிக்கத்தக்கது.

ஆக்லாந்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட் செய்ய தீர்மானத்து களமிறங்கியது.

போல்ட் சாதனை

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2-வது விக்கெட்டை எடுத்தபோது, ஓர் உலகக் கோப்பையில் அதிக விக்கெட் (21) வீழ்த்திய நியூஸிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார் டிரென்ட் போல்ட். 1999 உலகக் கோப்பையில் ஜெஃப் அலாட் 20 விக்கெட் வீழ்த்தியதே நியூஸிலாந்து பவுலர் ஒருவரின் முந்தைய சாதனையாக இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்