வெற்றியிலும் சில பாடங்கள்

By அரவிந்தன்

வெற்றியைவிடவும் தோல்வியைச் சிறந்த ஆசான் என்பார்கள். காரணம், வெற்றி தரும் பரவசம் குறைகள் தெரியாத அளவுக்குக் கண்ணை மறைத்துவிடும். தோல்வி நமது குறைகளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துக் காட்டிவிடும்.

வெற்றி மீது வெற்றி பெறும் நேரத்திலும் கவனமாகச் சுயபரிசோதனை செய்துகொண்டு குறைகளைக் கண்டறிவது மேலும் வெற்றிகளைக் குவிக்க உதவும். தவிர, வெற்றி என்பது மட்டும் சிறப்புக்கான சான்றிதழாகிவிடாது என்பதால் இந்த வெற்றியை விமர்சனபூர்வமாக அணுக வேண்டியுள்ளது.

பெரும் பதற்றத்துடன் தொடங்கிய இந்தியாவின் உலகக் கோப்பைப் பயணம் தொடர் வெற்றிகளால் இன்று தெம்புடன் இருக்கிறது. இதுவரை எந்த உலகக் கோப்பையிலும் முதல் சுற்றில் இந்தியா இவ்வளவு சிறப்பாக ஆடவில்லை. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆடுகளங்களில் மூவர்ணக் கொடிகள் உற்சாகமாகப் பறக்கின்றன.

இந்திய ரசிகர்களின் முகங்களில் உற்சாகம் தாண்டவ மாடுகிறது. கோப்பை கைக்கு வந்துவிடும் என்னும் நம்பிக்கை பிறந்திருக்கிறது. கால் இறுதியில் ஆடவிருப்பது வங்கதேசம் என்பதால் அரை இறுதியில் யாருடன் மோதல் என்பது பற்றிய யூகங்கள் வலம் வருகின்றன.

வங்கதேச அணியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. 2007-ல் முதல் சுற்றிலேயே இந்தியா வெளியேறக் காரணமான அணி அது. என்றாலும் கடந்த 6 போட்டிகளில் இந்தியா ஆடிய விதத்தைப் பார்க்கும்போது அது அரை இறுதிக்குச் செல்வதில் பெரிய பிரச்சினை எதுவும் இருக்காது என்றே தோன்றுகிறது.

தொடர்ச்சியாக ஏழாவது வெற்றியை இந்தியா பெற்றுவிடும் என நம்பலாம் என்றாலும் அடுத்த போட்டியில் வெல்வதும் அதில் வென்றால் அதற்கடுத்த போட்டியில் வெல்வதும் அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. தொடர் வெற்றிகளில் தெரிந்த சில பலவீனங்களைப் பார்க்கையில் இதிலுள்ள சவால் புரிந்துவிடும்.

வலுவான பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க அணிகளுடனான போட்டிகளில் இந்தியா கவனமாகவும் தீவிரமாகவும் போராடி வென்றது. வலுக் குறைந்த ஐக்கிய அரபு அமீரக அணியுடனான போட்டியை எளிதாக வென்றது. மேற்கிந்தியத் தீவுகள் அணியை 183 ரன்னுக்குள் சுருட்டியபோதும் அந்தப் போட்டியில் வெற்றி எளிதாக வந்துவிடவில்லை. அதே போலத்தான் ஜிம்பாப்வே அணியுட னான போட்டியும். அயர்லாந்து அணி நன்கு போராடினாலும் பெரிய சவாலாக விளங்கவில்லை.

தொடக்க ஜோடி

கண்ணைக் கூசவைக்கும் வெற்றியின் வெளிச்சத்தை ஊடுருவிப் பார்த்தால் இந்தியாவின் பலவீனங்கள் அம்பலமாகின்றன. குறிப்பாகத் தொடக்க ஜோடியின் ஆட்டம். ஷிகர் தவனும் ரோஹித் ஷர்மாவும் இணைந்து ஒரே ஒரு முறைதான் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள். அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்த ஜோடி 174 ரன்களை எடுத்தது. அதை விட்டுவிட்டால் ஐந்து ஆட்டங்களில் இவர்கள் இணைந்து எடுத்த மொத்த ரன்கள் 104.

தவன் இரண்டு சதங்களை அடித்துவிட்டார். பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து அணிகளுக்கு எதிராகச் சிறப்பாக ஆடினார். இவர் ஆட்டத்தைப் பாராட்டும் அதே நேரத்தில் தவறவிடப்பட்ட கேட்சுகளின் வடிவில் அதிருஷ்டமும் இவருக்குக் கைகொடுத்தது என்பதையும் சொல்லியாக வேண்டும்.

ரோஹித் ஷர்மாவைப் பொறுத்தவரை அதிருஷ்டமும் கைகொடுக்கவில்லை. ஆறு போட்டிகளில் இவர் அடித்த ரன்கள் 15, 0, 57*, 7, 64, 16. வலுவான மூன்று அணிகளுக்கு எதிராக இவர் அடித்த ரன்கள் 15, 0, 7. இரண்டு அரை சதங்களும் ஐக்கிய அரபு அமீரகம், அயர்லாந்து அணிகளுக்கு எதிரானவை. அசாத்தியமான திறமை உள்ளவர் என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படும் ஷர்மா அதை நிரூபிக்க அதிக வாய்ப்புகளையும் பெற்றிருக்கிறார்.

இந்த அளவுக்கு இன்னொருவருக்கு வாய்ப்புக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. கால் இறுதியில் சற்றே வலுக் குறைந்த அணிக்கு எதிராக இவர் நன்கு ஆடிச் சுதாரித்துக் கொள்ள வேண்டும் என்பதோடு கால், அரை இறுதி ஆட்டங்களில் வலுவான பங்களிப்பைச் செலுத்த வேண்டும். அதுதான் அவரது திறமைக்கும் அவருக்கு அளிக்கப்படும் வாய்ப்புக்கும் நியாயம் செய்வதாக அமையும்.

விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் தோனி ஆகியோர் ஒவ்வொரு சமயத்தில் சிறப்பாக ஆடி அணியின் வெற்றிக்குப் பங்களித்து வருகிறார்கள். வலுவான தொடக்கம் அமையும்போது இவர் களுடைய பங்களிப்பு இன்னமும் அதிகரிக்கும் என்று நம்பலாம்.

ஜடேஜாவின் ஆட்டம்

கவலைக்குரிய ஆட்டம் என்றால் அது ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம்தான். திறமையுள்ள மூத்த ஆட்டக்கரர்களையும் இளம் ஆட்டக்காரர்களையும் தவிர்த்து விட்டு இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பந்து வீச்சில் ஓரளவு நன்றாகவே செயல் பட்டுவருகிறார். களத்தடுப்பிலும் செயல்படுகிறார். ஆனால் மட்டை வீச்சு படு மோசமாக உள்ளது. மூன்று போட்டிகளில் இவருக்கு ஆட வாய்ப்புக் கிடைத்தது.

அதில் இவர் எடுத்த ரன்கள்: 7, 2, 13. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா தடுமாறிக்கொண்டிருந்தபோது இவர் களமிறங்கினார். 183 என்னும் இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்த இந்தியா, 107-க்கு 5 விக்கெட்கள் என்று சிக்கலில் இருந்தது. தோனியுடன் சேர்ந்து நிதானமாக இவர் ஆடியிருந்தால் அணி எளிதாக வெற்றிபெற்றிருக்கும். ஆனால் மிகவும் பொறுப்பற்ற ஒரு ஷாட்டால் இவர் ஆட்டமிழந்தார்.

ஜிம்பாப்வேக்கு எதிராகவும் இந்தியாவின் முன்வரிசை மட்டையாளர்கள் தடுமாறினார்கள். ரெய்னா, தோனியின் ஆட்டமும் விடப்பட்ட கேட்சுகளும் சேர்ந்து இந்தியாவைக் காப்பாற்றின. இரண்டு கேட்சுகள் கொடுத்தாலும் அற்புதமான ஷாட்களை அடித்த ரெய்னாவிடம் தோனி அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார்.

அது என்ன என்று ஆட்டம் முடிந்த பிரகு அவரிடம் கேட்கப்பட்டது. “நமக்குப் பிறகு மட்டையாளர் யாருமில்லை என்று ரெய்னாவுக்கு நினைவுபடுத்தி, அவரது வேகத்தைக் குறைத்துக்கொள்ளச் சொன்னேன்” என்றார் தோனி. ஜடேஜாவைப் பற்றிய கூற்றாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம் என்பது அணிக்கும் ஜடேஜாவுக்கும் நல்ல அறிகுறி அல்ல.

செய்யப்படாத பரிசோதனைகள்

பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தும் விதம், களத் தடுப்பு வியூகம் என தோனியின் தலைமை சிறப்பாகவே உள்ளது. நெருக்கடியிலிருந்து காப்பாற்றும் ஆபத்பாந்தவன் வேலையை அவர் மட்டை சரியாகவே செய்கிறது. ஆனால் புதிய பரிசோதனைகளைச் செய்துபார்க்க அவர் தயங்குகிறார். அமீரகம், அயர்லாந்து போன்ற அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் சில பரிசோதனைகளைச் செய்திருக்கலாம்.

வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் ஜடேஜாவைச் சற்று முன்னதாக இறக்கிவிட்டிருக்கலாம். குறிப்பாக அமீரக அணிக்கெதிரான போட்டியில் இப்படிச் செய்திருக்கலாம். அதுபோலவே அயர்லாந்து, ஜிம்பாப்வே போன்ற போட்டிகளில் அக்‌ஷர் படேலைக் களமிறக்கியிருக்கலாம். இதுபோன்ற பரிசோதனைகள் பின்னாளில் கடுமையான போட்டிகளின்போது பயன்படும்.

தொடக்க ஜோடியின் ஆட்டம், கேட்சுகள் விடப்படும் அவலம், ஜடேஜாவின் ஆட்டத் திறன், புதிய திறமைகளைப் பரிசோதித்துப் பார்க்கும் வாய்ப்பைத் தவற விட்டது என இந்தியாவின் குறை களைப் பட்டியலிடலாம்.

சிறப்பான பந்து வீச்சு, பந்து வீச்சாளர்கள் எகிறு பந்துகளைப் பயன்படுத்தும் விதத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற் றம், ஒருவர் சறுக்கினாலும் இன்னொருவர் தவறாமல் கைகொடுக்கும் மட்டை வலு, மட்டையாளர்கள் எகிறு பந்துகளை ஆடும் விதத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் (பெர்த் நீங்கலாக), ரவிச்சந்திரன் அஸ்வினின் சுழல், தோனியின் அலட்டிக்கொள்ளாத அணுகுமுறை ஆகியவை இதுவரை இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுத்தந்து பல்வேறு சாதனைகளும் புரியவைத்திருக்கின்றன. இன்னும் மூன்று ஆட்டங்களில் தொடர்ந்து வெல்ல இந்தத் திறமைகள் கை கொடுக்குமா? புதிய வல்லமைகள் கூடுமா?

கோப்பையை வெல்லக்கூடிய அணி என்னும் நம்பிக்கையை இந்த அணி ஏற்படுத்தியுள்ளது. குறைகள் திருத்திக்கொள்ளப்பட்டு, மேலும் சுதாரிப்புடன் ஆடினால் உலகை வெல்லலாம். நீண்ட நெடிய பயணத்தின் முடிவில் வெற்றிக் கோப்பையுடன் நாடு திரும்பலாம்.

கைக்குச் சிக்காத பந்து

இந்திய அணியின் முக்கியமான பிரச்சினை களத்தடுப்பு. குறிப்பாக, கேட்ச் பிடிக்கும் திறமை. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் நான்கு கேட்சுகள் விடப்பட்டிருக்காவிட்டால் அந்த அணியால் 183 ரன்களை தொட்டிருக்கவே முடியாது.

பெர்த் ஆடுகளத்தை அழகாகப் பயன்படுத்திக்கொண்ட இந்தியப் பந்து வீச்சாளர்கள் களத் தடுப்பாளர்கள் கைவிட்ட சோகம் அது. முன்னணி மட்டையாளர்களை அதற்கு முன்பே ஆட்டமிழந்துவிட்டதால் அதன் பாதிப்பு பெரிதாக இல்லை. முன்னணி மட்டையாளர் யாரேனும் ஒருவர் இருந்திருந்தால்கூட இந்தியாவின் நிலை சிக்கலாகியிருந்திருக்கும்.

இன்றைய அணியில் அனைவருமே நன்றாகக் களத் தடுப்பு செய்வதால் யாரை எங்கே நிறுத்துவது என்று மண்டையைப் பிய்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று தோனி இந்தத் தொடரின்போது ஒரு முறை கூறினார். கேட்சுகளைக் கோட்டைவிட்ட ஆட்டக்காரர்கள் இந்தக் கூற்றைக் கேலிக்கூத்தாக்கியிருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்