யு.ஏ.இ. அணியை 146 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா

By செய்திப்பிரிவு

வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் பி-பிரிவில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் யு.ஏ.இ. அணியை தென்னாப்பிரிக்கா 146 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது.

342 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு ஆடிய யு.ஏ.இ. அணி 48-வது ஓவர் வரை போராடி 195 ரன்களுக்கு சுருண்டது. பிலாண்டர், மோர்கெல், டிவில்லியர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஸ்டெய்ன், டுமினி, இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

தொடக்க வீரர் அம்ஜத் அலி, முதல் ஓவரின் 4-வது பந்தை டேல் ஸ்டெய்ன் பந்தை மிகவும் கம்பீரமாக புல் அடித்து பவுண்டரிக்கு விரட்டினார். பிறகு ஸ்டெய்ன் லெக் திசையில் ஒரு பந்தை சரியவிட அதனையும் மிட்விக்கெட்டுக்கு அபாரமாக பவுண்டரிக்கு விரட்டினார் அம்ஜத் அலி.

6-வது ஓவரில் பிலாண்டரை சற்றே நகர்ந்து கொண்டு ஸ்கொயர் லெக்கில் ஒரு தூக்கு தூக்கினார் அம்ஜத அலி பந்து பவுண்டரிக்குப் பறந்தது. இவ்வாறாக தொடகக்த்தில் அம்ஜத் அருமையாக ஆடினார்.

7-வது ஓவரில், தடுமாறிக் கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரர் பெரெஞ்சர் 21 பந்துகளில் 5 ரன்கள் என்ற நிலையில் மோர்னி மோர்கெலின் பந்து ஒன்று சர்ரென அவரது தோள்பட்டைக்கு ஏற தடுத்தாடினார், பந்து மட்டையின் மேல் விளிம்பில் பட்டு கல்லியில் எழும்பி கீழே விழ வேண்டிய நேரத்தில் ரூசோவ்வின் கை பந்தை தரையைத் தொட விடாமல் பிடித்தது. மிக அருமையான கேட்ச்.

பவர் பிளே முடிவதற்குள் டிவில்லியர்ஸின் விசித்திர கேப்டன்சி இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது. டுமினியை பந்துவீச அழைத்தார். குர்ரம் கான், டுமினியை 2 பவுண்டரிகள் விளாசினார். அந்த ஓவரில் 10 ரன்களை குர்ரம் கான் எடுத்தார்.

முந்தைய போட்டிகளில் எப்படி ஒன்றுமில்லாத பந்துகளில் டிவில்லியர்ஸ் விக்கெட் கைப்பற்றினாரோ இப்போது அதே போன்று நன்றாக ஆடி வந்த அம்ஜ்த அலி விக்கெட்டை டுமினி கைப்பற்றினார். 21 ரன்களில் இருந்த அம்ஜத் அலி. டுமினி வீசிய அந்தப் பந்தை கேட்டு எங்கு வேண்டுமானாலும் அடித்திருக்கலாம், ஆனால் அவர் தவறாக ஃபைன்லெக்கில் ஸ்வீப் ஆட முயன்று கேட்ச் கொடுத்தார்.

பிறகு டிவில்லியர்ஸ் இந்தப் போட்டியிலும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மோர்கெல் ஓவரில் குர்ரம் கானும் வீழ்ந்தார். மோர்கெலின் முந்தைய ஓவரில் லெந்துக்கு சற்று முன் விழுந்த பந்து கடுமையாக எகிற பந்திலிருந்து கண்ணை எடுத்தார் குர்ரம் கான் ஹெல்மெட்டைத் தாக்கியது.

யு.ஏ.இ., ஆப்கன் வீரர்களுக்கெல்லாம் இது பழக்கமில்லாத ஒன்று. அடுத்த ஓவரில் குர்ரம் கான் (வயது 40க்கும் மேல்) மோர்கெல்லிடம் அவுட் ஆகி வெளியேறினார்.

யு.ஏ.இ. அணியின் சிறந்த பேட்ஸ்மென் ஷைமன் அன்வர், விக்கெட் கீப்பர் பாட்டீல் இருவரும் 0-வில் இணைந்தனர். 10-வது ஓவர் முதல் 20 ஓவர்கள் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை. 21-வது ஓவரில் இம்ரான் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை வீச அதனை பாட்டீல் மிட்விக்கெட்டில் பவுண்டரி அடித்தார்.

அதன் பிறகு ஷைமன் அன்வர், டேல் ஸ்டெய்ன் பந்து ஒன்றை ஆன் திசையில அடித்த பவுண்டரி ராகுல் திராவிட், ரிக்கி பாண்டிங் வகை ஷாட்டாகும். பிறகு பிலாண்டரை ஒரு சக்தி வாய்ந்த புல் ஷாட்டையும் ஷைமன் அன்வர் அடித்தார். அதன் பிறகு 26-வது ஓவரில் பிலாண்டரை மேலேறி வந்து அலட்சியமாக மிட் ஆஃபில் ஒரு பவுண்டரியும், பிறகும் மேலேறி வந்து பவுலர் தலைக்கு மேல் தூக்கி அடித்து இன்னொரு பவுண்டரி அடித்தார். அபாரமான பேட்டிங். பிறகு இம்ரான் தாஹிர் பந்தை சக்தி வாய்ந்த ஒரு ஸ்வீப் ஆடி 36 ரன்களை எட்டினார் ஷைமன்.

39 ரன்களில் அவர் இம்ரான் தாஹிரை மீண்டும் ஒரு ஸ்லாக் ஸ்வீப் செய்தார், ஆனால் இம்முறை எல்லைக் கோட்டருகே கேட்ச் ஆனது. யு.ஏ.இ.யின் சிறந்த பேட்ஸ்மென் ஷைமன் அன்வர் 39 ரன்களில் அவுட். 108/4. அதன் பிறகு விக்கெட் கீப்பர் பாட்டீல் மட்டும் கொஞ்சம் தாக்குப் பிடித்து 100 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்தார். மொகமது நவீத், டேல் ஸ்டெய்ன் வீசிய பந்தை சற்றே ஒதுங்கிக் கொண்டு லாங் ஆனில் அடித்த சிக்ஸ் அபாரமானது அவர் 17 ரன்கள் எடுத்தார். 47.3 ஓவர்களில் 195 ரன்களுக்கு யு.ஏ.இ. அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

50 ஓவர்கள் வரை ஆட வேண்டும் என்ற உணர்வும், ஆல் அவுட் ஆகாமல் இருக்க வேண்டும் என்ற உறுதியும் யு.ஏ.இ. அணியிடத்தில் தெரிந்தது. இது போன்ற ஒரு உலகக்கோப்பை தொடரில் சிறிய அணிகள் வேறு என்னதான் செய்ய முடியும்?

ஆட்ட நாயகனாக ஏ.பி.டிவில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளது. நிகர ரன் விகிதம் +1.707.

1 ரன்னில் சதத்தை நழுவவிட்ட டிவில்லியர்ஸ்: தென்னாப்பிரிக்கா பேட்டிங்

முன்னதாக டாஸ் வென்ற யு.ஏ.இ. அணி தென்னாப்பிரிக்காவை பேட் செய்ய அழைக்க தென் ஆப்பிரிக்க அணி 341 ரன்களைக் குவித்தது.

டாஸ் வென்ற யு.ஏ.இ அணி, தென் ஆப்பிரிக்காவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. துவக்க வீரராக களமிறங்கிய ஆம்லா, அதிரடியாக தனது ஆட்டத்தை துவக்கினார். ஆனால் 3-வது ஓவரிலேயே 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ரூஸோவும் வேகமாகவே ரன் சேர்த்தார். 16-வது ஓவரில் ஸ்கோர் 85 ரன்கள் என்றிருந்த நிலையில், தொடர்ந்து இந்தத் தொடரில் மோசமாக ஆடி வரும் டி காக் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து டி வில்லியர்ஸ் களமிறங்க, ரூஸோவ் 43 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். இதன் பின் டி வில்லியர்ஸுடன் ஜோடி சேர்ந்தார் மில்லர். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 108 ரன்களை எடுத்தனர். அதிரடி ஆட்டத்துக்கு புகழ்பெற்ற இருவர் களத்தில் இருந்தாலும், நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.

36-வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா 200 ரன்களைக் கடந்தது. 37-வது ஓவரில் மில்லர் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பவர் ப்ளே ஓவர்கள் என்பதால் டி வில்லியர்ஸ் தனது வழக்கமான பாணியில் ஆடத் துவங்கினார். 82 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 99 ரன்கள் எடுத்திருந்தபோது துரதிர்ஷ்டவசமாக கேட்ச் கொடுத்து டி வில்லியர்ஸ் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் இருந்த டுமினியும் அடுத்த சில ஓவர்களில் 23 ரன்களுக்கு வீழ்ந்தார். தொடர்ந்து வந்த ஃபிலாண்டர், பெஹார்டீனுடன் சேர்ந்து அணியின் ஸ்கோரை 300 ரன்களைத் தாண்டி எடுத்துச் சென்றார்.

கடைசி 5 ஓவர்களில் 48 ரன்கள் எடுக்கப்பட்டன. இதில் கடைசி ஓவரில் மட்டும் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரி உட்பட 25 ரன்கள் எடுக்கப்பட்டன. பெஹார்டீன் 27 பந்துகளில் அரை சதம் கடந்தார். 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 341 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

யு.ஏ.இ. தரப்பில் மொகமட் நவீத் மீண்டும் சிறப்பாக வீசி 63 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆஃப் ஸ்பின்னர்/ கேப்டன் மொகமது டாகீர் மீண்டும் சிறப்பாக வீசி 47 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்