ரெய்னாவின் ஷார்ட் பிட்ச் பந்து பிரச்சினையை ஊதிப்பெருக்க வேண்டாம்: தோனி

By பிடிஐ

சுரேஷ் ரெய்னா ஷார்ட் பிட்ச் பந்துகளில் திணறுகிறார் என்ற விஷயம் ஊடகங்களால் ஊதிப்பெருக்கப்படுகிறது என்று கூறியுள்ளார் தோனி.

மே.இ.தீவுகளுக்கு எதிராக 22 ரன்களில் டிவைன் ஸ்மித் வீசிய சாதாரண ஷார்ட் பிட்ச் பந்தில் ரெய்னா கேட்ச் கொடுத்து வெளியேறிய விவகாரத்தை செய்தியாளர்கள் கேப்டன் தோனியிடம் எழுப்ப, அவர் கூறும்போது:

“ஊடகங்கள்தான் இதனை ஒரு பெரிய விஷயமாக ஊதிப் பெருக்குகின்றனர். மற்ற நாட்டு வீரர்கள் சிலரும் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு ஆட்டமிழக்கின்றனர். ஆனால் திரும்பத் திரும்ப இது எங்கள் தலையில் வந்து விடிகிறது- அதாவது ரெய்னாவுக்கு ஷார்ட் பிட்ச் பந்துகள் பலவீனம் அவருக்கு ஷார்ட் பிட்ச் வீசுங்கள் என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. நான் நினைக்கிறேன் ரெய்னா நன்றாகவே பேட்டிங் செய்து வருகிறார் என்று...

இந்திய கிரிக்கெட் வரலாற்றை எடுத்துப் பாருங்கள் 5ஆம் நிலை வீரர்கள் எவ்வளவு பேர் சிறப்பாக ஆடியுள்ளார்கள் என்பதை சரிபாருங்கள். யுவராஜ் சிங் மட்டும்தான் சீராக நமக்கு அந்த நிலையில் ஆடிக் கொடுத்துள்ளார், பிறகு அவர் 4ஆம் நிலையில் களமிறக்கப்பட்டார். இல்லையெனில் அந்த நிலையில் மாற்றி மாற்றி வீரர்களைக் களமிறக்கிக் கொண்டிருந்தோம். அந்த நிலையில் விளையாடிய வீரர்களிடம் நீங்கள் கேட்டுப்பாருங்கள், விராட் ஆடியுள்ளார், ரோஹித் ஆடியுள்ளார், ஆனால் ஒருவரும் அந்த நிலையில் திருப்திகரமாக ஆடவில்லை.

ஆகவே, ரெய்னாதான் அந்த நிலையில் களமிறங்க சரியான தேர்வு, நாம் அவரை ஆதரிக்க வேண்டும். நாம் ரெய்னாவை ஆதரிக்கவில்லையெனில் அவருக்குப் பதிலாக புதிய வீரர் வருகிறார் என்று வைத்துக்கொள்வோம், அவர் தனக்காக ஆடத் தொடங்க முடிவெடுத்தால், வளர்த்தெடுக்க அது நல்ல பழக்கம் கிடையாது. இது நம் அணியில் நடக்கக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.

உதாரணமாக ஒருவர் 40-வது ஓவரில் பேட் செய்கிறார் என்றால், எவ்வளவு ரன்கள் அவர் எடுக்க முடியும்? 20 அல்லது 25 ரன்களில் அவுட் ஆக முடியும். உடனே 3-வது போட்டியின் முடிவில் நாம் என்ன கூறுவோம், ‘அவர் ரன்கள் எடுப்பதில்லை, அவர் ஃபார்மில் இல்லை, 20 ரன்களையே எடுக்கிறார்.’ என்று கூறுவோம்.

இங்குதான் எத்தனை பந்துகளில் ஒருவர் இந்த ரன்களை எடுக்கிறார் என்ற விஷயம் வருகிறது. நீங்கள் கூறும் விவகாரத்தை வலியுறுத்தினால், பேட்ஸ்மென் தன்னலத்துக்காக ஆடத் தொடங்குவார். நாம் எவ்வளவு ரன்கள் எடுக்க முடியுமோ அவ்வளவு ரன்களை குவிக்க வேண்டும், ஏனெனில் நவீன கிரிக்கெட் ஆட்டத்தில் எந்த ஒரு ஸ்கோரும் பாதுகாப்பான ஸ்கோர் கிடையாது.

எனவே 300 வரும் என்றால் அதை 305-ஆக உயர்த்தப் பாடுபடவேண்டும். இப்படியாக விஷயங்கள் உள்ளன...” என்றார் தோனி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE