நடுவர்களின் போராட்டம் காரணமாக திங்கள்கிழமை நடைபெற்ற சென்னை லீக் சீனியர் டிவிசன், 2-வது டிவிசன், 3-வது டிவிசன் ஆகிய போட்டிகள் தாமதமாகத் தொடங்கின.
சென்னை நேரு மைதானத்தின் பி ஆடுகளத்தில் நடைபெற்ற 3-வது டிவிசன் போட்டியில் மேட்ச் கமிஷனர் குமரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடுவர்கள் வெளியேறினர். இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அந்தப் போட்டி வேறு நடுவர்களைக் கொண்டு நடத்தப்பட்ட நிலையில், 2-வது டிவிசன் போட்டியையும் நடுவர்கள் புறக்கணித்துள்ளனர்.
இதனால் மாற்று நடுவர்கள் சீருடையில்லாமலேயே களமிறக்கப் பட்டனர். இந்த நிலையில் சீனியர் டிவிசன் போட்டியையும் நடத்தி தரமுடியாது என நடுவர்கள் போர்க்கொடி தூக்கியதால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. சென்னை கால்பந்து சங்க (சிஎப்ஏ) நிர்வாகிகளின் பெரும் போராட்டத்துக்குப் பிறகு 20 நிமிடங்கள் தாமதமாக சீனியர் டிவிசன் லீக் போட்டி தொடங்கியது.
இது தொடர்பாக நடுவர்கள் குழு கன்வீனர் சாமுவேல்ஸ் கூறுகையில், “குமரன் மீது குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவரை அனுமதிக்கக்கூடாது என தமிழ்நாடு கால்பந்து சங்கம் (டிஎப்ஏ) கடிதம் வழங்கியுள்ளது” என்றார். சிஎப்ஏ பொருளாளர் சுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கேட்ட போது, “சிஎப்ஏவுக்கு தற்காலிக கமிட்டி இருக்கும் வரையில் சென்னை லீக் போட்டிக்கு டிஏப்ஏ நடுவர்களை நியமித்து வந்தது. ஆனால் இப்போது சிஎப்ஏவுக்கு ஜனநாயக முறைப்படி தேர்வு நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் வந்துவிட்டனர்.
அதனால் சென்னை லீக் போட்டிக்கு மேட்ச் கமிஷனர், நடுவர் என எல்லோரையும் நியமிக்கும் அதிகாரம் படைத்தவர்கள் நாங்கள்தான். ஆனால் இப்போது டிஎப்ஏவால் நியமிக்கப்பட்டவர்கள் என்று கூறி சிலர் பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு டிஎப்ஏதான் காரணம்” என்று குற்றம்சாட்டினர்.
ஏரோஸ் அணியின் பயிற்சியாளர் தியாகராஜன் கூறுகையில், “நடுவர்களின் போராட்டத்தால் இன்றைய போட்டியில் விளையாடிய இரு அணிகளும் பாதிக்கப்பட்டன. அது இரு அணி வீரர்களின் ஆட்டத்திலும் பிரதிபலித்தது” என்று வேதனையோடு தெரிவித்தார்.
சிஎப்ஏவுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு சென்னை லீக் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வரும் வேளையில் புதிய பிரச்சினை உருவெடுத்திருப்பது கால்பந்து ஆர்வலர்களை பெரும் கவலையடையச் செய்துள்ளது. போட்டியை நடத்துவதற்காக மைதானத்திற்கு வந்துவிட்டு கடைசி நேரத்தில் முடியாது எனக்கூறி நடுவர்கள் அங்கிருந்து கிளம்ப முயற்சித்தது சரியான முடிவல்ல.
எந்தப் பிரச்சினையிருந்தாலும் போட்டியை நடத்திவிட்டு அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம். அதில் தீர்வு ஏற்படாவிட்டால் நாளைய போட்டி யை தங்களால் நடத்தித்தர முடியாது என அவர்கள் கூறியிருக்கலாம். ஆனால் அதைவிட்டு அவர்கள் போராட்டத்தில் குதித்து ஸ்டிரைக் செய்தது சரியான செயல் அல்ல.
போட்டி தடைபட்டிருந்தால் பாதிக்கப்படுவது சம்பந்தப்பட்ட அணிகள் மட்டுமல்ல, ரசிகர்க ளும்தான். ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்களுக்கு நிறைய செலவு செய்து போட்டிக்கு அழைத்து வருகின்றனர். இந்தப் போட்டியைக் காண்பதற்காக சென்னை மட்டுமின்றி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான செங்கல்பட்டு, எண்ணூர், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான ரசிகர்கள் தங்களின் நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்து வருகின்றனர். அப்படியிருக்கையில் போட்டி திடீரென பாதிக்கப்படுமானால் அது சென்னை லீக்கின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக அமையும்.
எது எப்படியோ இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வந்து சென்னை லீக் போட்டிகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்வது தமிழ்நாடு கால்பந்து சங்க தலைவர் கிளிட்டஸ் பாபு, செயலர் ரவிக்குமார் ஆகியோரின் கடமையாகும். அவர்கள் அதை உடனடியாக செய்ய வேண்டும் என்பதே கால்பந்து ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago