ஜிம்பாப்வே அச்சுறுத்தலை முறியடித்த ரெய்னா, தோனி: இந்தியா வெற்றி

By செய்திப்பிரிவு

ஆக்லாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மீண்டும் இந்திய அணி எதிரணியினரை ஆல் அவுட் செய்த விதத்தில் 300 ரன்களுக்கும் மேல் அடித்து விடுவோம் என்று அச்சுறுத்திய ஜிம்பாப்வேயை 48.5 ஓவர்களில் 287 ரன்களுக்குச் சுருட்டிய இந்திய அணி 92 ரன்களுக்கு தவன், ரோஹித் சர்மா, ரஹானே, கோலி விக்கெட்டுகளை இழந்து தோல்வி முகம் காட்டியது.

அத்தருணத்தில் ரெய்னா, தோனி இணைந்து அபாரமாக ஒரு ஜோடியைக் கட்டமைத்தனர். ரெய்னா உலகக்கோப்பையில் தன் முதல் சதத்தை எடுத்ததோடு, ஒருநாள் கிரிக்கெட்டில் 5-வது சதத்தையும் எடுக்க, தோனி தனது 57-வது ஓருநாள் அரைசதத்தை எடுக்க இந்திய அணி கடைசியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 288 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

ரெய்னா சதம் அடித்த பிறகு 47-வது ஓவரின் 2-வது பந்தில் ஸ்கோர் 257 ஆக இருந்த போது ஒரு கேட்ச் கோட்டைவிடப்பட்டது.

கடைசியில் 48.4 ஓவரில் பன்யாங்கரா வீசிய ஷார்ட் பந்தை தோனி டீப் ஸ்கொயர் லெக் திசையில் சிக்சருக்குத் தூக்கி அடித்து தனது வழக்கமான பாணியில் வெற்றிக்கான ஷாட்டை ஆடினார். இந்தியா 48.4 ஓவர்களில் 288/4 என்று வெற்றி பெற்றது.

ரெய்னா 104 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 110 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, கேப்டன் தோனி 76 பந்துகளில் 8 பவுண்டர்கள் 2 சிக்சர்களுடன் 85 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

இந்தியா தொடர்ச்சியாக 6 வெற்றியை இந்த உலகக்கோப்பையில் பெற்றுள்ளது. லீக் அனைத்திலும் வெற்றி, உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 10-வது வெற்றியைப் பெற்று தோனி, கிளைவ் லாய்டைக் கடந்தார்.

மேலும் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய துரத்தலில் அதிகபட்சமான இலக்கை வெற்றிகரமாக துரத்தியதும் இதுவே முதல் முறை.

ரெய்னா, தோனி இடையே 196 ரன்கள் பார்ட்னர்ஷிப். இதனை இவர்கள் 26 ஓவர்களில் ஓவருக்கு 7.53 என்ற ரன் விகிதத்தில் எடுத்து ஆதிக்கம் செலுத்தினர்.

இந்த உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு அடுத்த படியாக இந்திய அணி அனைத்து போட்டிகளையும் லீக் சுற்றில் வென்றது. 2011 உலகக்கோப்பைப் போட்டிகளில் கூட தென்னாப்பிரிக்காவுக்க்கு எதிராக ஒரு தோல்வியை லீக் சுற்றில் இந்தியா சந்தித்தது. ஆனால் இந்த உலகக்கோப்பையில் மேலும் முழுமையையும், துல்லியத்தையும் இந்திய அணி காட்டியது.

மோசமான ஷாட் தேர்வில் ஒரே ஓவரில் அவுட் ஆன ஷிகர் தவன், ரோஹித் சர்மா

விரட்டலின் போது முதல் ஓவரில் ரோஹித் சர்மா, பன்யாங்கராவை முதலில் ஒரு அதிர்ஷ்ட எட்ஜ் பவுண்டரி அடித்தார். ஆனால் அடுத்ததாக அருமையான பேக்ஃபுட் பஞ்சில் பாயிண்டில் பவுண்டரி அடித்துத் தொடங்கினார். முதல் ஓவரில் 9 ரன்கள். அதன் பிறகு சடாரா அருமையாக ஒரு மெய்டன் ஓவர் வீசினார்.

ரோஹித் 16 ரன்களில் இருந்த போது பன்யாங்கராவின் லெந்த் பந்தை தேவையில்லாமல் ஆன் திசையில் மிகப்பெரிய ஷாட் அடிக்கச் சென்றார், பந்து முன் எட்ஜில் பட்டு கவர் திசையில் உயரே எழும்பியது சிகந்தர் ராசா கேட்ச் பிடித்தார்.

அதே ஓவரில் 5-வது பந்தில் தவனும் வெளியேறினார். கட் ஷாட் ஆட போதிய இடைவெளி இல்லாத நிலையில் மெதுவாக வந்த பந்தை கட் ஆட முயன்று மட்டையின் உள் விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார் தவன். 7-வது ஓவரில் 21/2 என்று ஆனது.

கோலி, ரஹானே அரைசதக் கூட்டணி:

அதன் பிறகு கோலி களமிறங்கி சடாராவின் ஓவரில் மிட் ஆஃபில் ஒரு அருமையான பவுண்டரியையும், பிறகு அவருக்குச் சாதகமான பிளிக் ஷாட்டில் ஒரு பவுண்டரியையும் அடித்துத் தொடங்கினார்.

பிறகு ரஹானே, பன்யாங்கரா ஓவரில் இரண்டு அருமையான ஆஃப் திசை பவுண்டரிகளை அடித்தார். 13-வது ஓவரில் இந்தியா 50 ரன்களை எட்டியது.

மீண்டும் ரஹானே, கோலி தலா ஒரு பவுண்டரியை அடிக்க இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்காக 50 ரன்களைச் சேர்த்தனர். ஸ்கோர் 71 ஆக இருந்த போது 17-வது ஓவரில் ரஹானே, முபரிவா பந்தை ஷாட் கவரில் அடித்துவிட்டு இல்லாத சிங்கிளுக்கு ஓடி வந்தார். கோலி திருப்பி அனுப்பினார் ரீச் ஆக முடியவில்லை ரன் அவுட் ஆனார். ரஹானே 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியா 17-வது ஓவரில் 71/3 என்று சற்றே தடுமாற்றம் கண்டது.

ரெய்னா களமிறங்கினார். ஸ்கோர் 92 ரன்களுக்குச் சென்ற போது 48 பந்துகளில் 4பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்த கோலி, சிகந்தர் ராசா பந்தை ஸ்வீப் ஆடமுயன்றார் ஆனால் பந்து சிக்கவில்லை. கால்களைச் சுற்றி பவுல்டு ஆனார். இந்தியா 23 ஒவர்களில் 92/4 என்று ஜிம்பாப்வேவுக்கு வெற்றி வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால்...

ரெய்னா, தோனி அதிரடிக் கூட்டணியில் திக்குமுக்காடிய ஜிம்பாப்வே:

24-வது ஓவர் முதல் 29-வது ஓவர் வரை நிதானித்த தோனி, ரெய்னா ஜோடி இந்த 6 ஓவர்களில் 20 ரன்களையே சேர்த்தது. ஒரு பவுண்டரி மட்டுமே வந்தது.

21 ஓவர்களில் வெற்றிக்குத் தேவை 176 ரன்கள். ஓவருக்கு 8.38 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. பார்வையாளர்களுக்கு லேசான பதட்டம் ஏறப்ட்டிருக்கும்.

ஆனால் பதட்டமடையாத ரெய்னா, சான் வில்லியம்ஸ் வீசிய 30-வது ஓவரின் முதல் பந்தை அவரது பாணி சுழற்றலில் மிட்விக்கெட் மீது சிக்சருக்குத் தூக்கினார். அடுத்த பந்து கொஞ்சம் வேகமாக வீசினார், ஆனால் முடிவில் மாற்றமில்லை, இடத்தில்தான் மாற்றம், லாங் ஆனில் சிக்சருக்குப் பறந்தது.அந்த ஓவரில் 15 ரன்கள் வந்தது.

பவுண்டரி எதையும் அடிக்காத தோனி, மிரே வீசிய 32-வது ஓவரில் ஷார்ட் பிட்ச் பந்தை லாங் லெக் திசையில் கம்பீர புல் அடித்து முதல் பவுண்டரியை விளாசினார். அடுத்த பந்தை தேர்ட் மேன் திசையில் அபாரமாகத் தள்ளிவிட்டு இன்னொரு பவுண்டரியை அடித்தார். அந்த ஓவரில் 11 ரன்கள். பிறகு தோனி சிகந்தர் ராசாவின் புல்டாஸை பவுண்டரி அடித்தார். 34வது ஓவரின் 2-வது பந்தில் இந்தியா 150 ரன்களை எட்டியது.

35-வது ஓவரில் ரெய்னா அரைசதம் எடுக்கும் முன் ஸ்வீப் ஆடி ஒரு கேட்ச் வாய்ப்பைக் கொடுத்தார். ஆனால் அந்த வாய்ப்பை ஷார்ட் பைன் லெக் திசையில் ஹேமில்டன் மசகாட்சா கோட்டை விட நொந்து போனார் பவுலர் சிகந்தர் ராசா.

பேட்டிங் பவர் பிளே தொடங்கும் முன் இந்தியா 35 ஓவர்களில் 158/4. 36-வது ஓவரில் தோனியின் பவுண்டரியுடன் 5 ரன்கள். 37-வது ஓவரில் ரெய்னா இன்சைட் அவுட் சென்று ஆஃப் திசையில் ஒரு அபாரமான பவுண்டரி அடித்து அரைசதத்தை 67 பந்துகளில் கடந்தார். 38-வது ஓவரில் தோனி, ரெய்னா தலா ஒரு பவுண்டரியை அடித்தனர். 39-வது ஓவரில் இந்தியா 184/4. வெற்றிக்குத் தேவையான் ரன் விகிதம் ஓவருக்கு 9.45 ஆக அதிகரித்தது.

இந்நிலையில் ரெய்னா மீண்டும் ஒரு அபாரமான ஆன் திசை சிக்ஸரை அடித்தார். அந்த ஓவரில் தோனி, ரெய்னா, 100 ரன் கூட்டணி அமைத்தனர். 40வது ஓவர் முடிவில் ஸ்கோர் 197/4. பவர் பிளேயில் 5 ஒவர்களில் 39 ரன்கள்.

பவர் பிளே முடிந்தவுடன் உண்மையில் ரெய்னா, தோனி தங்கள் ஷாட்களை திறக்கத் தொடங்கினர். மசாகாட்சாவை 42-வது ஓவரில் ரெய்னா ஒரு புல்லட் கவர் டிரைவ் அடித்து பவுண்டரி விளாசினார். அடுத்த பந்து அவ்வளவாக ஷார்ட் பிட்ச் இல்லையென்றாலும் ரெய்னாவின் மட்டைச் சுழற்றல் வேகத்துக்கு மிட்விக்கெட்டில் சிக்சரானது. மீண்டும் முபரிவாவை மிகவும் சாதுரியமாக விக்கெட் கீப்பர் பின்னால் தட்டி விட்டு ஒரு பவுண்டரியை அடித்தார்.

அதே ஓவரில் தோனி 57-வது ஒருநாள் அரை சதத்தை 56 பந்துகளில் எடுத்து முடித்தார். 45-வது ஓவரில் பைன்லெக்கில் ஒரு சாதுரிய பவுண்டரியை ரெய்னா அடித்து 99 ரன்களுக்கு வந்தார். பிறகு அதே ஓவரில் 1 ரன் எடுத்து 94 பந்துகளில் உலகக்கோப்பையில் முதல் சதம் கண்டார் ரெய்னா. அவரது 5-வது ஒருநாள் சதம்.

47-வது ஓவரில் தோனி களம் புகுந்தார். 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் குலசேகராவை அடித்த சிக்சரை நினைவூட்டும் ஒரு சிக்சரை தோனி, முபரிவா பந்தில் அடித்தார். அடுத்ததாக புல்டாஸ், இதனை எதிர்பார்த்த தோனி சரியாக அதனை பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார்.

49-வது ஓவரில் 4-வது பந்தை பன்யாங்கரா ஷார்ட் ஆக வீச அதனை கம்பீரமாக புல் ஆடி பேக்வர்ட் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸ் அடித்து வெற்றிக்கான ரன்களை எடுத்து ஸ்டைலாக முடித்தார் தோனி. ஆட்ட நாயகனாக சுரேஷ் ரெய்னா தேர்வு செய்யப்பட்டார்.

இன்று காலை ஜிம்பாப்வே அணியின் பொறுப்பு கேப்டன் பிரெண்டன் டெய்லர் மிக அற்புதமான சதம் ஒன்றை எடுத்து அதிரடி முறையில் 138 ரன்களை எடுத்தார். இது அவர் ஜிம்பாப்வேவுக்காக ஆடும் கடைசி போட்டி. எனவே அவருக்கு இது ஒரு உணர்ச்சிகரமான போட்டியாகும். இதில் கேப்டன்சியிலும் சிறப்பாக பணியாற்றி இந்தியாவுக்கு காலிறுதிக்கு முன்பாக கொஞ்சம் உடல் நல சோதனை செய்துவைத்தார் என்றே கூற வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்