2003 உலகக் கோப்பை: கல்லடிபட்ட வீடுகள், சீறி எழுந்த சிங்கங்கள்

By அரவிந்தன்

இந்திய அணித் தலைவர் சவுரவ் கங்கூலி முதலான சிலரது வீடுகளை கிரிக்கெட் ரசிகர்கள் கற்களை வீசித் தாக்கினார்கள். காரணம், தொலை தூரத்தில், தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி ஆடிய லட்சணம்.

இந்தியா உலகக் கோப்பையை வென்று 20 ஆண்டுகள் கழித்து நடக்கும் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா சிறப்பாக ஆடும் என்று நம்பிக்கை வைத்திருந்த இந்திய ரசிகர்களால் இந்தியா ஆடிய விதத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இந்தியாவுக்கு இரண்டு போட்டி கள்தான் முடிந்திருந்தன. நெதர் லாந்தை வென்று ஆஸ்திரேலியா விடம் தோற்றிருந்தது. கற்றுக்குட்டி அணியான நெதர்லாந்தின் பந்து வீச்சில் இந்தியாவின் புகழ்பெற்ற மட்டையாளர்கள் திணறினார்கள். 48.5 ஓவர்களில் 204 ரன் எடுத்து இந்தியா ஆட்டமிழந்தது.

சச்சின் (52), யுவராஜ் சிங் (37), தினேஷ் மோங்கியா (42) ஆகியோர் மட்டுமே கௌரவமான ஸ்கோரை எடுத்தார்கள். ஜவகல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளேயின் சிறப்பான பந்து வீச்சாலும் நெதர்லாந்து மட்டையாளர்களின் மோசமான ஆட்டத்தாலும் இந்தியா வென்றது.

அடுத்து ஆஸ்திரேலியா வுடனான போட்டியில் 41.1 ஓவர்களில் 125 ரன்னுக்கு இந்தியா சுருண்டது. சச்சின் (36), ஹர்பஜன் சிங் (28) தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை. கங்கூலி, ராகுல் திராவிட் உள்பட ஏழு பேர் ஒற்றை இலக்க எண்ணில் ஆட்டமிழந்தார்கள். யுவராஜ் சிங் பூஜ்யம். இந்தப் போட்டியில் பந்து வீச்சும் எடுபடவில்லை. 22.2 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்து அட்டகாசமாக வென்றது ஆஸ்திரேலியா.

இந்த அளவுக்கு மோசமான ஆட்டத்தை இந்திய ரசிகர்கள் மன்னிக்கத் தயாராக இல்லை. ஊக்க மருந்து சர்ச்சையால் ஷேர்ன் வார்ன் திடீரென்று அணியிலிருந்து விலக வேண்டிய அதிர்ச்சியைத் தாண்டி வந்து ஆஸ்திரேலியா சிறப் பாக ஆட, பெரும் நம்பிக்கையுடன் களம் இறங்கிய இந்தியா படு மோசமாகச் சொதப்பியது.

புகழ் பெற்ற மட்டை வரிசை தடுமாறி யது. இந்திய ரசிகர்கள் பொங்கி விட்டார்கள். “இதற்குத்தானா உங்களை அனுப்பினோம்” என்ற ரீதியில் ரகளையில் ஈடுபட்டார்கள்.

சச்சின் விடுத்த செய்தி

ஓய்வு அறையில் அணியினர் அனைவரது முகங்களிலும் துக்கம் கவிந்திருந்தது. தாயகத்தின் ரசிகர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அணியின் அதிகபட்ச அனுபவம் மிகுந்த உறுப்பினரான சச்சினுக்குக் கொடுக் கப்பட்டது.

“முழு ஈடுபாட்டுடன் ஆடுவோம். கடைசிவரையிலும் தீவிரமாகப் போராடுவோம். எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்” என்று சச்சின் அறிக்கை விடுத்தார். தங்கள் செல்லப் பிள்ளையிடமிருந்து இப்படி ஒரு அறிக்கை வந்ததும் இந்திய ரசிகர்கள் சற்று சமாதானமானார்கள்.

சச்சின் சொன்னபடியே நடந்தது. அனைத்து ஆட்டக்காரர்களும் மிகுந்த முனைப்புடனும் புதிய உத்வேகத்துடனும் ஆட ஆரம்பித்தார்கள். இந்தியா புதிய வேகத்துடன் இதர போட்டிகளை எதிர்கொண்டது. தங்கள் பிரிவில் அடுத்து வந்த அனைத்துப் போட்டிகளையும் வென்றது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 250 ரன்களை எடுத்து, அந்த அணியை 168 ரன்னில் சுருட்டியது. பாகிஸ்தானுடனான பரபரப்பான போட்டியில் மிகத் தீவிரமாகப் போராடி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.

சூப்பர் சிக்ஸ் சுற்றில் கென்யா, இலங்கை, நியூஸிலாந்து ஆகிய அணிகளை வென்றது. அரை இறுதிக்கு வந்த கென்யாவைச் சுலபமாக வென்று இறுதிப் போட்டிக்குள் கம்பீரமாக நுழைந்தது.

எது சிறந்த தொடர்?

இந்தியாவின் ஆகச் சிறந்த உலகக் கோப்பைத் தொடர்களில் ஒன்றாக 2003 போட்டிகளைச் சொல்லலாம். 1983-ல் வென்ற கோப்பை அதன் பிறகு இந்தியாவின் கைக்குக் கிடைக்கவே இல்லை. மீண்டும் கோப்பையை வெல்லும் ஏக்கம் கோடிக்கணக்கான மக்களிடம் இருந்தது.

சச்சின் டெண்டுல்கர் போன்ற கிரிக்கெட் வீரர்களுக்கு அது வாழ்நாள் கனவாகவே இருந்தது. 1987, 1996 ஆகிய இரு ஆண்டுகளிலும் போட்டிகள் துணைக்கண்டத்தின் சாதகமான சூழலில் நடைபெற்றபோது இந்தியா மீண்டும் கோப்பையைக் கைப்பற்றும் என்னும் எதிர்பார்ப்பு இருந்தது. இரு போட்டிகளிலும் முதல் சுற்றுக்களில் நன்கு ஆடிய இந்தியா கடைசிக் கட்டத்தில் சொதப்பியது.

2003 இறுதிப் போட்டியில் இந்தியா சொதப்பினாலும் 1983-க்கு அடுத்து அந்தத் தொடரை இந்தியாவின் சிறந்த தொடராகச் சொல்லலாம். துணைக்கண்டத்துக்கு வெளியே, வேகப் பந்துக்குத் துணைபுரியும் தென்னாப்பிரிக்கக் களங்களில் அந்தப் போட்டிகள் நடைபெற்றன என்பது ஒரு காரணம்.

இரண்டாவது போட்டியையும் கடைசிப் போட்டியையும் தவிர வேறு எந்தப் போட்டியிலும் இந்தியா தோற்கவில்லை என்பது இன்னொரு காரணம். அதுவும் ஆஸ்திரேலியாவுடன் மட்டுமே இந்தியா தோற்றது.

இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான் முதலான வலுவான அணிகளைத் தோற்கடித்து இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆஸி அணியின் முழுமையான ஆட்டமும் இந்தியப் பந்து வீச்சாளர்களின் திடீர் பதற்றமும் சேர்ந்து இந்தியாவைத் தோற்கடித்தன.

இறுதிக்கு வந்த பாதை மிகவும் பரவசமூட்டக்கூடியது. அணியில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கட்டத்தில் சிறப்பாகப் பங்களித்தார்கள். நல்ல தொடக்கங்களை வீணடிக்கும் பழக்கம் கொண்ட இந்திய அணி அவற்றை வெற்றிகளாக மாற்றக் கற்றுக்கொண்டிருந்த காலகட்டம் அது.

தடுப்பரணிலும் குறிப்பிடத்தக்க விதத்தில் முன்னேற்றம் கண்டிருந்த இந்திய அணி ஒரு சிலரது ஆட்டத்தால் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமான ஆட்டத்தால் உலகை வியக்கவைத்த தொடர் அது.

திராவிடின் அர்ப்பணிப்பு உணர்வு

பந்து வீச்சுக்குச் சாதகமான களங்களில் மட்டை வலுவைக் கூட்டியாக வேண்டிய நெருக்கடி ஏற்படும். சச்சின், வீரேந்திர சேவாக், கங்கூலி போன்றவர்கள் இந்தியாவுக்குப் பல சமயங்களில் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தாலும் அந்தத் தொடக்கங்கள் பல சமயம் வீணாகிவந்தன.

யுவராஜ் சிங், முகம்மது கைஃப் போன்றவர்கள் அணியில் நிலைபெற்ற பிறகு இந்த நிலை மாறத் தொடங்கியது. ஆனாலும் வலுவான பந்து வீச்சு கொண்ட அணிகளோடு மோதும்போது அணியின் மட்டை வலுவைக் கூட்ட ஏதாவது செய்தாக வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்பியது.

அப்போது ஆபத்பாந்தவனாக வந்தவர் ராகுல் திராவிட். அணியின் முன்னணி மட்டையாளரான அவர் விக்கெட் கீப்பிங்கும் செய்ய ஒப்புக்கொண்டார். இதன் மூலம் இந்தியா இடைநிலையில் மேலும் ஒரு மட்டையாளரைச் சேர்க்க முடிந்தது. அப்படி இடம்பிடித்த தினேஷ் மோங்கியா சில போட்டிகளில் இந்தியா வெல்ல உதவினார்.

கீப்பிங் செய்து அதிகப் பழக்கம் இல்லாத திராவிட் உலகக் கோப்பை போன்ற தீவிரமான ஒரு தொடரில் கீப்பிங் செய்ய முன்வந்தது மிகத் துணிச்சலான செயல் என்றுதான் சொல்ல வேண்டும். அணிக்குத் தேவை என்றால் எதையும் செய்வேன் என்னும் திராவிடின் அர்ப்பணிப்பு உணர்வையே இது காட்டுகிறது.

(நாளை… இந்தியாவின் முக்கியமான போட்டிகள்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்